1 சாமுவேல்: 18:6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலிமிருந்து ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும், கீதவாத்தியங்களோடும், சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
காலை எழுந்தவுடன் கவலையில்லாமல் பாடும் பறவைகளைக் கேட்டதுண்டா? காற்றினால் அசைவாடும் மரங்களின் ஆடல்பாடலைக் கேட்டதுண்டா? நிம்மதியாகப்புல்வெளியில் மேயும் மாடுகளைப் பார்த்ததுண்டா? இரவில் பளிச்சென்று மின்னும் நட்சத்திரங்களைக் கண்டதுண்டா? இவை எந்தக் கவலையும் இல்லாமல் எத்தனை சமாதானமாய், சந்தோஷமாய் இருக்கின்றன என்று நான் அடிக்கடி நினைப்பேன்!
இந்த வசனத்தை வாசிக்கும்போது அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு தங்களுடைய மகிழ்சியை ஆடல் பாடலுடனும், மேள தாளங்களுடனும் வெளிப்படுத்தினர் என்று பார்க்கிறோம். அவர்கள் செங்கடலைக் கடந்து வந்தபோது மிரியாமின் தலைமையில் ஆடிப்பாடி தங்கள் இரட்சிப்பின் மகிழ்சியை வெளிப்படுத்தியதுபோல, பெலிஸ்தரிடமிருந்து விடுதலைப் பெற்றதைக் கொண்டாடினர். ஸ்திரீகள் சகல பட்டணங்களிலுமிருந்து புறப்பட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடியது அந்த தேசத்தின் மக்களிடம் காணப்பட்ட சமாதனத்தையும் சந்தோஷத்தையும் காட்டுகிறது.
சந்தோஷம்? சமாதானம், மகிழ்ச்சி? ஆடல் பாடல், மேளதாளம்? எனக்கும் இவைக்கும் என்ன சம்பந்தம்?
இன்றைய மாடர்ன் உலகத்தில் பலவிதமானப் பிரச்சனைகளைக் கடந்துவரும் நாம் எங்கே இப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று பலரும் எண்ணுவதை என்னால் உணர முடிகிறது. எத்தனை இரவுகள் பலவிதமான மனஅழுத்தங்களோடு செல்கின்றன! இருதயமே வறண்டு கிடக்கும்போது ஆடல் பாடல் எங்கே?
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த சந்தோஷமும் சமாதானமும் பரிசுத்த ஆவியின் கனி என்று கூறுகிறார். நம்முடைய விசுவாசத்தின் நிச்சயமே இந்த சந்தோஷமும், சமாதானமும்தாங்க! என்னைக் கர்த்தர் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டார் என்ற விசுவாசத்தின் பலன் தான் அது!
அதுமாத்திரம் அல்ல! நாம் விமானத்தில் பயணம் செய்யும்போது, அந்த விமானம் 30 ஆயிரம் அடி உய்ரத்தில் பறக்கும்போது, அதை ஓட்டுநர் ( Pilot) நம்மை பத்திரமாக கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் நம்மால் கண்களை மூடி தூங்க முடிகிறது என்றால் நம்மை உருவாக்கிய கர்த்தாதி கர்த்தரை முழுதும் நம்புவது கடினமா? நாம் கரடு முரடான பாதையில் செல்லும்போதும் அவர் நம்மை பத்திரமாக நடத்தி செல்கிறார் என்ற நம்பிக்கையில் நாம் வாழும் போது வரும் சமாதானே தனிதான்!
நம்மை சுற்றி நடக்கும் எந்த சம்பவமும், எந்த வலியும், எந்த வேதனையும் இந்த சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நம்மைவிட்டு எடுக்க முடியாது!
நம்முடைய சந்தோஷமும், சமாதானமும் ஒரு நறுமணமாய் நம்மை சுற்றி உள்ளவர்களையும் வந்து அடையும். இது கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கும் ஒரு பரிசு!
இன்று வாழ்க்கையின் பாரச் சுமை உன்னை அழுத்திக்கொண்டிருக்கலாம்! அல்லது நீ வேதனையாலும், வலியாலும் நிறைந்து இருக்கலாம்!
கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து உனக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருவார்! அவரை நம்பும்போது அவர் நம்மிடம்,
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும்,பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27) என்கிறார்.
அவரை விசுவாசி! சந்தோஷம் உண்டு! சமாதானமும் உண்டு! இவை கர்த்தர் நமக்குக் கொடுக்கும் பரிசு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்