இதழ்:1327 தேடினால் நிச்சயமாக கண்டடைவோம்!
எண்ணாகமம் 24: 17 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்….
இந்த கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பை மத்தேயு சுவிசேஷத்தின் ஆரம்ப அதிகாரங்களிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! இன்றுஇரண்டாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் பற்றிப் படிக்கலாம்!
இயேசு கிறிஸ்துவானவர் பெத்லேகேமில் பிறந்த பின்னர், இந்த சாஸ்திரிகள் ஒரு ராஜாவைத் தேடி யூதேயாவுக்கு வந்து ஏரோது ராஜாவிடம் செல்கின்றனர்.
யார் இந்த சாஸ்திரிகள்? இவர்கள் வான சாஸ்திரங்களைப் படித்தவர்கள், நட்சத்திரங்களின் அசைவு இவர்களுக்கு நன்கு தெரியும். இவர்கள் சொப்பனங்களின் அர்த்தத்தை சொல்லக் கூடியவர்கள் என்றும் பார்க்கிறோம். முதன் முதலில் நாம் யாத்திராகமத்தில் எகிப்து தேசத்தில் மோசேயின் காலத்தில் வாழ்ந்த சாஸ்திரிகளைப்பற்றி படிக்கிறோம். பின்னர் தானியேலின் காலத்தில் பாபிலோனில் இருந்தவர்களைப்பற்றிப் படிக்கிறோம்.
இவர்கள் எங்கிருந்து வந்தனர்? கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்று மத்தேயு கூறுகிறார். பாபிலோன் அல்லது பெர்சியாவை சேர்ந்தவர்கள் என்று வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்! சிலர் அவர்கள் அரேபியாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்கின்றனர். ஏனெனில் அவர்கள் கொண்டு வந்த பரிசு பொருட்கள் அதிகமாக கிடைப்பது அரேபியாவில் தான். ஒருவேளை அவர்கள் பெர்சியாவிலிருந்து வந்திருந்தால் அதை மிகவும் விலை கொடுத்து வாங்கி வந்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
எத்தனைபேர் வந்திருக்கக்கூடும்? மூன்றிலிருந்து பன்னிரண்டு பேர்வரை இருந்திருக்கக் கூடும்! நாம் சாதாரணமாக மூன்று என்று கூறுவது அந்த மூன்று பரிசுப் பொருட்களைக் கொண்டுதான்!
இவர்களுக்கு எப்படி தெரியும் யூதாவின் ராஜா பிறந்த செய்தி? இவர்கள் எந்த நட்சத்திரத்தைப் பார்த்தார்கள்? எப்படி அந்த நட்சத்திரத்தை மேசியாவின் பிறப்போடு ஒப்பிட்டார்கள்? இவைதானே நம் மனதில் ஓடுகின்றன!
இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக சென்றது நமக்குத் தெரியும். 70 ஆண்டுகளுக்கு பின்னர் கோரேஸ் ராஜா அவர்களை திரும்ப அனுப்பியபோது எல்லோருமே திரும்பவில்லை. அநேகர் அங்குத் தங்கி விட்டார்கள். அவர்கள் தங்கள் மேசியாவின் பிறப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை அங்குள்ள ஞானிகளிடம் பேசியிருக்க வாய்ப்புகள் உள்ளன!
அதுமட்டுமல்ல! பாபிலோனுக்கு பிடித்து செல்லப்பட்ட தானியேல், நெபுகாத்நேச்சார் ராஜாவின் சொப்பனங்களின் அர்த்தத்தை சொன்னவுடனே அவனை ராஜா பாபிலோனில் உள்ள சகல ஞானிகளுக்கும் பிரதான அதிகாரியாக வைத்தான் என்று (தானி 2:48) பார்க்கிறோம். அந்த தேசத்தின் உயர் பதவியில் பல ஆண்டுகள் இருந்து, வயது முதிர்ந்தவராக வாழ்ந்து மறைந்த தானியேல் நிச்சயமாக அந்த ஞானிகளிடம் மேசியாவின் பிறப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை குறித்து பேசியிருக்கலாம்! அதை அவர்களுடைய குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கக் கூடும்!
எண்ணாகமம் 24: 17 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்…. என்ற மோசேயின் காலத்தில் வாழ்ந்த ஒரு புறஜாதியானாகிய பிலேயாமின் தீர்க்கதரிசனம் இந்த புறஜாதியான ஞானிகளை யூதேயாவை நோக்கி வரச்செய்தது!
இவர்கள் எதைப் பார்த்தார்கள்? ஒரு வித்தியாசமான நட்சத்திரத்தை! சிலர் அதை ஒரு கோள் என்கின்றனர். சிலர் அதை இரு பெரிய கோள்களின் சேர்க்கை என்கின்றனர்! Jupitor, Saturn என்ற இரண்டு பெரிய கோள்கள் சூரியனுக்கு அருகாமையில் ஒரே கோட்டில் வரும்போது நமக்கு அது நட்சத்திரத்தைப் போல காணப்படும்.
எது எப்படியோ தெரியவில்லை! அந்த ஞானிகள் ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டு, உலகை ஆளும் ஒரு ராஜா பிறந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அவரைப் பார்க்கும் ஆவலுடன் தங்கள் தேசத்திலிருந்து புறப்படுகின்றனர்! எத்தனை மாதங்கள் பிரயாணம் பண்ணினார்களோ தெரியாது! மிகுந்த ஆவலோடு அவர்கள் புறப்பட்டனர் என்று மட்டும் தெரிகிறது!
பாலகனாய் உதித்த இயேசுவைத் தேடி வந்த இந்த புறஜாதியினர் அவரைக் கண்டு கொண்டார்களா?
எத்தனை ஆச்சரியம்! எரேமியா 29: 13 ல் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டு பிடிப்பீர்கள் என்ற வாக்குத்தத்தம் நிறைவேறிற்று! அந்த ஞானிகள் இயேசுவைக் கண்டு அவரைத் தாழ விழுந்து பணிந்து ஆராதித்தனர் என்றும் பார்க்கிறோம்! அவர்கள் இயேசுவை கண்ட வேளை அவர் இரண்டு வயதுக்குள் இருந்திருப்பார். அதனால் தான் ஏரோது இரண்டு வயதுக்குள்ளான ஆண் பிள்ளைகளை கொல்லும்படி கட்டளையிடுகிறான். நிச்சயமாக அந்த வேளை மாட்டுத் தொழுவத்தில் இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் பெத்லெகேமிலோ அல்லது எருசலேமிலோ ஒரு வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். ஆனால் தேடி வந்த அவர்கள் இயேசுவை கண்டு ஆராதித்தது மட்டும் சந்தேகமில்லாத உண்மை!
இந்தப் புறஜாதியினர் இயேசுவைக் கண்டுகொண்ட சம்பவம் , கர்த்தராகிய இயேசு புறஜாதியினராகிய நம்மையும் இரட்சிக்கவே இந்த உலகில் மானிடனாய் வந்தார் என்பதையும், புறஜாதியினராகிய நாமும் அவரை தேடினால் கண்டு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது!
நாமும் இந்த ஞானிகளைப் போல நம்முடைய முழு இருதயத்தோடும் அவரைத் தேடும்போது நிச்சயமாக அவரைக் கண்டடைவோம்! இந்தக் கிறிஸ்மஸ் பண்டிகை நாம் தேவனாகியக் கர்த்தரை முழு இருதயத்தோடும் தேடி அவரை தரிசிக்கும் நாட்களாக இருக்கட்டும்!
இயேசுவை உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆராதிப்பதே கிறிஸ்மஸ்! இதை இந்த வருடத்தின் பண்டிகை நாட்களில் தவற விட்டு விடாதீர்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்