1 சாமுவேல்: 19: 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்ப அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி; என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.
எனக்கு மீகாளை ரொம்ப பிடிக்குங்க! அவள் தன் கணவனாகிய தாவீதை நேசித்தாள்! அவனுடடைய உயிருக்கு ஆபத்து வந்தபோது தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினாள்! தைரியமாக, துணிகரமாக முடிவு எடுத்தவள்! எனக்கு இந்தப்பெண்ணின் குணம் நிச்சயமாகப் பிடிக்கும்.
ஆனால் நம் எல்லோரையும் போல இவள் வாழ்க்கையிலும் சில சரிவுகள் இருந்தன! தாவீதுக்குப் பதிலாக ஒரு சுரூபத்தைப் படுக்கவைத்து அங்கு வந்த எல்லா ஆண்களையும் அவன் வியாதியாயிருக்கிறான் என்று பொய் சொல்லி ஏமாற்றிய அவள், பிடிபட்டு அவள் நாடகம் வெட்ட வெளிச்சமானவுடன் மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.
ஏதாவது ஒரு காரியத்தில் ஒருதடவை நாம் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால், அது நம்மைத் தொடர்ந்து பொய் சொல்ல வைக்கும் என்பதை கவனித்திருப்பீர்கள் அல்லவா!
மீகாள் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்த சவுல் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டான்! அவள் இப்படி ஏய்த்தது ஏன் என்று சவுல் கேட்டதும் பொய்க்கு மேல் பொய் சொல்ல ஆரம்பித்தாள்.
இப்பொழுது மீகாள் என்னைப் போகவிடு நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று தாவீது சொன்னதாகக் கூறியப் பச்சைப் பொய், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினது போல் பற்றியது. தான் சொன்னதை உண்மை என்று நிரூபிக்க மீகாள் அழுதும், பயந்ததுபோல நடித்தும் இருப்பாள். சவுல் அவள் பொய்யை நம்ப வேண்டுமே!
தன்னுடைய மகளையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறானே தாவீது! என்ன நெஞ்சழுத்தம்! இவனை நான் விடவே மாட்டேன் எப்படியாவது கொல்லுவேன் என்றுதான் சவுலின் நினைவுகள் ஓடியிருக்கும். பின்னால் சவுல் தாவீதை விரட்டி விரட்டி கொல்ல முயன்றதற்கு இதையும் ஒருக் காரணமாக வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒரே ஒரு பொய்! அதை மறைக்க இன்னொரு பொய்! இன்னொரு பொய்! பொய் ஒரு குடும்பத்தையே இரண்டாக்கிவிட்டது!
ஒரு பொய் சொல்லிட்டாபோதுங்க! அடுத்தடுத்தது தானா கோர்வையாக வந்துடும்! அது கூட சகஜமாக வரும்! இது நம்முடைய நாவின் அநீதியான செயல்!
ஒரு நிமிஷம்! நீங்கள் யாரையாவது ஏமாற்ற பொய் சொல்லியதுண்டா? அதன் விளைவுகள் என்ன? அப்படி பொய் சொன்னபின் உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லிற்று? சற்று யோசித்து சொல்லுங்களேன்!
நீ யாரையாவது ஏமாற்ற ஒரு பொய்யை சொல்லும்போது உன்னை சிக்கவைக்கும் சிலந்தி வலையை உனக்கே பின்னிக்கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்துபோகதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்