1 சாமுவேல் 20:42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம். கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும், உமது சந்ததிக்கும் நடு நிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய் நாமத்தைக் கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான்.
நல்ல நண்பர்கள் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லாதது போலத்தான்! இன்பத்தையும் துக்கத்தையும் பகிர நல்ல நண்பர்கள் தேவை என்பது நம்மில் அனைவருக்குத் தெரியும்.
தாவீதின் மனைவியாகிய மீகாள் அவன் தன்னைக் கொல்ல வந்ததாக அவளுடைய தகப்பனிடம் சொல்ல, இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் தாவீதைக் கொல்லும்படி எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டி விட்டான்! தாவீதின் நிலை மிகவும் பரிதாபமாய்ப் போய்விட்டது. அவன் தன் துக்கத்தைப் பகிரவும், அவனுடைய இருதயத்தின் பாரத்தை இறக்கவும் அவனுக்கு ஒரு நல்ல நண்பன் தேவைப்பட்டான்.
இந்த அதிகாரத்தை வாசித்தால் அப்படிப்பட்ட நல்ல நண்பனாக தாவீதுக்கு இருந்தது தாவீதைக் கொலை செய்யத் தேடிய சவுலின் மகனாகிய யோனத்தான் என்றுத் தெரியும்.
சவுலின் அரண்மனையிலிருந்து அதிக தூரம் இல்லாத ஒரு சமவெளியில் யோனத்தான் தாவீதைக் கனிவுடன் பார்த்து , அன்பின் வார்த்தைகளைக் கூறி, அவனுக்கு நம்பிக்கையூட்டி, அவனுடைய இருதயத்தின் பாரத்தை குறைத்தான். அவன் தாவீதை தன்னுடைய உடன்பிறப்பை விட அதிகமாக நேசித்தான் என்று பார்க்கிறோம்.
அவர்கள் இருவரும் தங்களுடைய நட்பு தங்களுடைய சந்ததிக்கும் தொடரும் என்று கர்த்தரை சட்சியாகக் கூறி பிரிந்தனர். ஆனால் சரீரத்தில் பிரிந்தாலும் இருதயத்தில் பிரியவில்லை!
யோனத்தானைப் போன்ற ஒரு நல்ல நண்பன் தாவீதுக்கு கிடைத்த அரியப் பரிசுதான். அப்படிப்பட்ட நண்பர்கள் நமக்கு இருப்பார்களானால் நாமும் கொடுத்து வைத்தவர்கள்தான்.
ஒரு பறவைக்கு கூடு எப்படியோ, ஒரு சிலந்திக்கு வலை எப்படியோ அப்படித்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் நட்பு என்பது!
ஒருநொடி நம்முடைய வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்போம்! நாம் கண்ணீர் விடும்போது நாம் சாய்ந்து கொள்ளத் தோள் கொடுக்கும் நட்பு, நம்முடைய இருதயத்தின் பாரத்தை இறக்கி வைக்கும் சுமைதாங்கி யாராவது நம் வாழ்க்கையில் உண்டா? அல்லது நீ யாருக்காவது நல்ல நண்பராக உள்ளாயா?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார், ‘ ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக்கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை’ ( யோவான் 15:13)
அவருடைய நட்பு விலையேறப்பெற்றது! எந்த நேரத்திலும் உன்னுடைய பாரத்தை அவர்மேல் இறக்கலாம்! அவர் மார்பில் சாய்ந்து உன்னுடைய சுக துக்கங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்! அவரை உன் நண்பராக ஏற்றுக்கொள்! உன் பாரம் இலகுவாகும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்