1 சாமுவேல் 22: 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய் மேவாபின் ராஜாவைப் பார்த்து; தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி,
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் செல்லும் எல்லா கரடு முரடான பாதையிலும் நம்மோடு இருப்பார், நாம் எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பாராத வேளையில் நம்மோடு இருந்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரால் கூடும் என்பதை இன்றைய வேத பாகம் அழகாகக் காண்பிக்கிறது.
தாவீது, சவுலுக்கு தப்பி அதுல்லாமென்னும் குகையில் ஒளிந்திருந்தான். அவனுடைய குடும்பத்தார் அதைக்கேள்விப்பட்ட போது அங்கே அவனிடத்தில் போனார்கள்.( 1சாமு:22:1) தாவீது இப்படி தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்ததால் அவன் குடும்பம் அவனைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கலாம். அதுமட்டுமல்ல, ஒருவன் இப்படி அரசரால் தேடப்படும் கைதியாக இருந்தால் முதலில் அவன் குடும்பம் கண்காணிக்கப்படுவது இன்று கூட நடக்கும் ஒன்றுதானே!
தாவீது இந்தப் பிரச்சனை தன் பெற்றோருக்கு உருவாகிறதை அறிந்து மோவாபுக்குப் போய் தன் தாயும் தகப்பனும் தங்கியிருக்க அடைக்கலம் கேட்பதைப் பார்க்கிறோம்.
மோவாப்? எதற்கு இந்த நாட்டுக்கு சென்றான் தாவீது? மோவாபியரோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் கூறியிருந்தாரே! அதைமீறி தாவீது எப்படி அங்கு சென்றான் என்றக் கேள்வி எனக்கு எழுந்தது!
ஆம்! ஆம்! தடை செய்யப்பட்ட நாடுதான்!
ஆனால் ஒருநாள் அந்த நாட்டின் பெண்ணான ரூத் தன்னுடைய மாமியாராகிய நகோமியிடம், ‘உம்முடைய தேவன் என் தேவன்’ என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொன்னதை கர்த்தர் அங்கீகரித்தார் அல்லவா! இந்த மோவாபியப் பெண்ணான ரூத், இஸ்ரவேலனாகிய போவாசை முறைப்படி திருமணம் செய்தாள். அவர்களுக்கு ஓபேத் என்ற குமாரன் பிறந்தான். அந்த ஓபேத் தான் தாவீதின் தாத்தா! ஓபேத்தின் மகன் ஈசாய் தான் தாவீதின் அப்பா!
அப்படியானால் தாவீதின் தகப்பன் வழியாக அவன் மோவாபியருக்கு சொந்தம் தானே! இப்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் வேண்டியபோது, அவர்கள் குடும்பம் ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவி செய்யக் கர்த்தர் மோவாபை என்றோ ஆயத்தம் பண்ணிவிட்டார்.
இந்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. எத்தனை அற்புதமான வழிநடத்துதல்! எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சமயத்தில் கர்த்தரின் உதவிக்கரம் அவர்களை வழிநடத்தியது!
உன் வாழ்க்கையிலும் கர்த்தர் இந்த அற்புதத்தை செய்ய முடியும். நீ ஒருவேளை இன்று மோவாபைப் போன்ற அந்நிய நாட்டில் இருக்கலாம். இது என்னுடைய வீடு இல்லை! இங்கு எனக்கு பாதுகாப்பு உண்டா? நான் எவ்வளவு நாட்கள் இங்கு கஷ்டப்படவேண்டும், என்னை சுற்றிலும் எல்லாம் இருளாகத் தோன்றுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறாயா?
ஒவ்வொரு நாளும் உன் தகப்பனாகிய தேவனை நோக்கிப்பார்! நீ அவரை விசுவாசிப்பாயானால், அவரை முழுமனதோடு நபுவாயானால் அவர் மோவாபில் இன்று உன்னோடு இருப்பார். உன் இருண்ட வாழ்வில் ஒளிக்கதிர் வீசி உனக்கு பாதையைக் காட்டுவார்! நீ தவறாக எடுத்த உன்னுடைய கோணலான பாதை செவ்வையாகும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்