1 சாமுவேல் 23: 26 – 28 சவுல் மலைக்கு இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள். சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும், அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஓரு ஆள் சவுலிடத்தில் வந்து நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். அதனால் சவுல் தாவீதைப் பின் தொடருவதைவிட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்.
மூர்க்கமான சவுலால் ஈட்டியால் எறியப்பட்டவன்!
தன் மனைவி மீகாளால் ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு தப்பி ஓடியவன்!
தன் உயிர் நண்பன் யோனத்தானால் எச்சரிக்கப்பட்டு தலைமறைவானவன்!
தன் உயிரைக் காக்க மலைகளிலும், கெபிகளிலும் மரணக்கைதி போல தப்பி ஓடி ஒளிந்து கொண்டிருந்தவன்!
இவன் தானே? இவன் தானே நம் தாவீது?
இங்கு உங்களுக்கும் எனக்கும் ஒரே ஒரு கேள்வி!!! இந்தத் தாவீதைத் தானே சாமுவேல் தீர்கதரிசி, இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்? இல்லை! ஒரு சின்ன சந்தேகம் தான்!
ஒருகணம் யோசித்தேன்! எனக்கு கடவுள் இப்படி ஒரு பெரிய பதவியைக் கொடுப்பதாக வாக்களித்து விட்டு, பின்னர் என் உயிரை காக்கும்படி மலையிலும், கெபியிலும், பாலைவனத்திலும் என்னை ஓடவிட்டால் நான் என்ன செய்திருப்பேன்????
பார்வோனின் அரண்மனையில் இளவரசனாய் வாழ்ந்து கொண்டிருந்த மோசேக்கு கூட நாற்பது வருடங்கள் சீனாய் வனாந்திரத்தில் ஆடுகளை மேய்க்கும்படியாக பதவி கிடைத்தது. அந்த நாற்பது வருடங்கள் தான் மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானானுக்குள் வழிநடத்தக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த பயிற்சி காலம்!
மோசேக்கு நடந்ததுதான் இப்பொழுது தாவீதுக்கு நடக்கிறது போலும்! ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பின், கர்த்தர் அவனுக்கு கொடுக்கும் பயிற்சி முகாம் தான் இந்தக் காடும், மேடும், கெபியும்!
கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எப்படி செயல்படுகிறார் என்று இவர்களுடைய வாழ்க்கை நமக்கு விளக்கவில்லையா!
உன் வாழ்க்கை இன்று எப்படியிருக்கிறது? யாருமில்லாத வனாந்திரத்திலா? உன் பிரச்சனைகள் உன்னை கெபியிலடைத்து உள்ளனவா? உன் எதிரிகள் உன்னைத் தொடர்கின்றனரா?
சவுல் தாவீது இருந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டான். அவனும் அவன் மனிதரும் தாவீதை வளைந்து கொண்டனர். இத்தனை நாட்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஓடியபின் இப்பொழுது சவுலிடம் மாட்டும் தருணம் வந்து விட்டது.
நானாக இருந்தால், என்ன ஆண்டவரே இப்படி என்னைக் கைவிட்டுவிட்டீர்? ஏன் இப்படி செய்தீர் என்று கதறியிருப்பேன். ஆனால் தாவீது எந்த சந்தேகமுமில்லாமல் அமைதியாக கர்த்தருடைய சித்தத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து அமைதி காத்தான்.
அங்கே அந்த நிமிடத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது! எங்கேயோயிருந்து வந்த ஒரு ஆள் சவுலிடம் பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்திருப்பதாக சொன்னான். அவ்வளவுதான்! சவுல் தாவீதை விட்டுவிட்டு ஒரே ஓட்டமாக பெலிஸ்தரை விரட்டியடிக்க ஓடிவிட்டான்!
ஒருநொடி நம்பிக்கையே இல்லாமல் இருளாகத் தோன்றியது! மறுநொடி நம்பவே முடியாதபடி ஒளி ஊடுருவியது!
கண்ணிமைக்கும் நேரத்தில் கர்த்தர் தாவீதுக்கு வர இருந்த ஆபத்தை மாற்றிப்போட்டார்! இன்றைக்கு உனக்கும் அந்த அற்புதத்தை செய்வார்!
தாவீது செய்ததெல்லாம் ஒவ்வொருநொடியும் கர்த்தரோடு தொடர்பில் இருந்தது மட்டும்தான்! கேள்வி கேட்கவில்லை! கதறவில்லை! பயப்படவில்லை! ஏனெனில் கர்த்தர் அவன்பக்கம் இருந்ததை உணர்ந்தான்! நீயும் விசுவாசி! உனக்கும் வழி பிறக்கும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்