1 சாமுவேல் 24:9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்பு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
பொய்யான வதந்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிய ஒரு காரியம் வெறும் வதந்திதான் என்று தெரியவரும்போது எப்படியிருந்தது?
சவுல் தாவீதை விரட்டி விரட்டி வேட்டையாடியதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டு வந்தோம். அவன் சவுலுக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும், வனாந்திரங்களிலும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தான்.
கடைசியில் ஒருநாள் இரண்டு பேரும் சந்தித்தபோது தாவீது சவுலிடம் என்னைப்பற்றிய உண்மையைப் பேசாதவர்களின் வார்த்தைகளை எப்படி நீர் நம்பலாம் என்று கேட்கிறதை இன்றைய வேத வசனத்தில் பார்க்கிறோம்!
இந்தக் கேள்வியை நான் கூட எத்தனையோ முறை கேட்க நினைத்திருக்கிறேன்! ஒருவர் நம்பும்படியாய் தவறான காரியங்களை மற்றவரைப் பற்றி பரப்புவதில் என்னதான் ஆசை இருக்குமோ சிலருக்கு? ஏராளமானப் பொய்யை வாய் கூசாமல் பேசுவார்கள்! கலகமூட்டுவதே அவர்கள் வேலை!
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் புறங்கூறுதலைப் பற்றி நாம் பேசும்போது வதந்தியைக் கேன்ஸர் போலப் பரப்பும் பொல்லாத நாவைப் பற்றிதான் சிந்திப்போம். ஆனால் அந்த வதந்தியைக் காதுகொடுத்துக் கேட்பவர்களைப் பற்றி சிந்திப்பதில்லை! நாம் ஏன் செவிகொடுக்கவேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக நமக்கு வரவே வராது!
சவுல் தன்னிடம் தாவீதைப் பற்றி பொல்லாங்கான வார்த்தைகளைப் பேசின மனுஷருக்கு செவிகொடுத்ததால் தான் பிரச்சனை வந்தது! தாவீதைப் பொறுத்தவரை கர்த்தரால் அபிஷேகம் பெற்ற சவுலின் மேல் கைபோட அவன் மனதாயில்லை. ஆனால் சவுலோ திரும்பத் திரும்பத் தன் செவிகளை எட்டிய வதந்திகளை நம்பித் தாவீதைத் தன் எதிரியாகவே பாவித்து அவனை அழித்துவிட நினைத்தான்.
அதனுடைய விளைவு என்ன பாருங்கள்! ஜனங்கள் தங்களுக்குள் பிரிய ஆரம்பித்தார்கள். சவுல் பக்கத்தில் பாதியும் தாவீது பக்கத்தில் பாதியுமாகப் பிரிந்தனர்.
பொல்லாத நாவும், அதைக் கூர்ந்து கேட்கும் செவியும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது! அவை ராஜாக்களை எதிரிகளாக்கவல்லது! ராஜ்யத்தை பிரிக்க வல்லது! நண்பர்களை எதிரிகளாக்கவல்லது! சகோதரர்களை பிரிக்க வல்லது! குடும்பத்தை இரண்டாக்கவல்லது! திருமண பந்தத்தைக் குலைக்கவல்லது! வதந்தியால் ஏற்படும் வலியும், வேதனையும், பிரிவும் கொஞ்சம் நஞ்சமல்ல!
இன்று உன்னப்பற்றிய ஒரு தவறான காரியத்தை யாராவது வதந்தியாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்களா?
அல்லது பிறரைப் பற்றிய வதந்திகளை நீ சுவாரஸ்யமாகக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாயா? உன்னிடம் பிறரைப் பற்றிய வதந்தியை பேசுபவர்கள், மற்றவர்களிடம் உன்னைப்பற்றி பேசமாட்டார்களா?
புறங்கூறுதலைக் கேட்கும் செவி இல்லாவிட்டால் புறங்கூறும் நாவு இருக்காது! இவை இரண்டையும் உன் வாழ்க்கையை விட்டு அகற்று! வதந்தி என்பது ஒரு விஷச்செடி! அது விஷமுள்ள கனிகளைக் கொடுக்கும்! ஆதலால் உன்னுடைய நாவையும், செவியையும் காத்துக்கொள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
நல்ல விளக்கம் நன்றி சகோதரி.
On Thu, 13 Jan, 2022, 6:07 am Prema’s Tamil Bible Study & Devotions, wrote:
> Prema Sunder Raj posted: “1 சாமுவேல் 24:9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப்
> பொல்லாப்பு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன்
> கேட்கிறீர்? பொய்யான வதந்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் உண்மை என்று
> ஆணித்தரமாக நம்பிய ஒரு காரியம் வெறும் வதந்திதான் என்று தெரிய”
>