1 சாமுவேல் 25:1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான்.
நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் கூடி சாமுவேலுடைய மரணத்துக்காக துக்கம் கொண்டாடியதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நேசத்துக்குரிய தீர்க்கதரிசி, ஆசாரியன், தன்னுடைய உலகப்பிரகாரமான பணியிலிருந்து விடுபெற்று பரலோகத்தில் ஓய்வளிக்கப்பட்டார்.
இஸ்ரவேல் மக்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போலிருந்தனர். ராஜாவாகிய சவுலுக்கோ மக்களை சரியான வழியில் நடத்த கடவுளின் கிருபையும் ஞானமும் இல்லை.
அதுமட்டுமல்ல! எதிர்கால ராஜாவாக சாமுவேலால் அபிஷேகம்பண்ணப்பட்ட தாவீது இப்பொழுது எங்கேயிருக்கிறான்? அவன் பாரான் வனாந்திரத்தில் இருந்ததாக இன்றைய வசனம் கூறுகிறது. அவனுடைய திறமை மறக்கப்பட்டது! அவனுடைய தாலந்துகள் உபயோகப்படுத்தப்படவில்லை! அவன் நாட்டிலே இல்லை! காட்டிலே இருந்தான்.
ஆனால் இதுவரை விளங்காத ஒரு புதிரைக் கர்த்தர் எனக்கு இதைப் படிக்கும்போது விளக்கினார். தாவீது இந்த வனாந்திர வாழ்க்கையில் இருந்தபோதுதான் கர்த்தர் அவனுடைய நாட்டைக் காக்க வேண்டியத் திறமைகளை அவனுக்குள் வளர்த்தார். வனாந்திரத்தில் அவன் ஒரு சேனைக்கு எப்படி உத்தரவு கொடுப்பதைக் கற்றுக்கொண்டான், அதுமட்டுமல்ல இஸ்ரவேலை சுற்றியுள்ள நாடுகளின் பலத்தையும் பலவீனத்தையும் கூட அறிந்துகொண்டான்!
எல்லாவற்றுக்கும் மேலாக தாவீது தன்னுடைய நாட்டின் மக்களைக் காப்பாற்றும் ஒரு கருவிபோல இருந்தான். இஸ்ரவேல் நாட்டின் பூகோள அமைப்பு எப்படிப்பட்டதென்றால், அவர்கள் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் எதிரிகள் தாக்கிவிடுவார்கள். அந்த சமயத்தில் தாவீதும் அவனோடு இருந்தக் கூட்டமும் ஒருமனதோடு திட்டம்போட்டு எதிரிகளை ஒடுக்கி அவர்களுடைய ஆடுமாடுகளையும், நிலங்களையும் கைப்பற்றி விடுவார்கள். அதுமாத்திரமல்ல இந்த தாவீதின் சேனை அவர்களுக்கு சொந்தமல்லாத எதையும் தொட மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு ஜனங்களின் மத்தியில் மதிப்பு பெருகிற்று. சொன்னதை சரிவர செய்து முடிக்கும் தாவீதின் புத்திசாலித்தனம் ஜனங்களை அவன்பால் இழுத்தது.
தாவீதைப் பொறுத்தவரை வனாந்திர வாழ்க்கை வீணான நேரமல்ல! கர்த்தர் அவனோடு இருந்ததால் அது அவனுக்கு வேலைசெய்யும் நேரமாயிற்று!
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
ஐயோ நான் தனியாக இருக்கிறேன். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது.என் தாலந்துகள் வீணாய் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை! நான் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதில் சொல்லாதே!
நம்மால் முடிந்ததை நாம் செய்துகொண்டிருப்பதுதான் வாழ்க்கையில் வெற்றி தரும். வனாந்திர வாழ்க்கையைக் கண்டு சோர்ந்து போகாதே! அதை உனக்கு சாதகமாக்கிக்கொள்!
கர்த்தர் தாவீதோடு இருந்து, அவனுடைய வனாந்திரத்தை ஒரு பயிற்சி முகாமாக்கியதைப் போல உன்னோடும் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் அரித்துப் போட்ட நாட்களை உனக்கு ஆசீர்வாதமாக்குவார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
நன்றி சகோதரி.
On Mon, 17 Jan, 2022, 6:01 am Prema’s Tamil Bible Study & Devotions, wrote:
> Prema Sunder Raj posted: “1 சாமுவேல் 25:1 சாமுவேல் மரணமடைந்தான்.
> இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற
> அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான்
> வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான். நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத”
>