1 சாமுவேல் 25: 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப்பார்த்து; நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ. இதோ நான் உன் சொல்லைக்கேட்டு,உன் முகத்தைப்பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
இதை எழுதும்போது ஒரு கட்டிட வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பிளாக்குக்கு மேலாக இன்னொரு பிளாக்கை வைத்து ஒவ்வொரு சுவராக ஒரு கட்டிடம் உருவமைந்தது. இன்றைய வேதாகமப்பகுதி, தாவீதுக்கும், அபிகாயிலுக்கும் நடுவே ஏற்ப்பட்ட உறவு, வெற்றிகரமாக கட்டி முடித்த ஒரு கட்டிடத்தைப் போல உருவாகிற்று என்பதை எனக்கு உணர்த்தியது.
அபிகாயில் & தாவீது என்னும் ஒரு அழகிய கட்டிடத்தின் ப்ளூ பிரிண்ட் நம்முடைய கரத்தில் உள்ளது! ஒரு உறுதியானக் கட்டிடத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அதில் உள்ளன! இதை முதலிலும், பின்னர் பத்சேபாள் & தாவீது என்ற உறவையும் நாம் படிக்கும்போது, எங்கே, எப்படி, என்ன தவறாக போனது என்பதை நாம் தெளிவாகக் காணலாம்! இரண்டு உறவுகளுக்கும் உள்ள வித்தியாசம் நம்மை ஆச்சரியப்படுத்தும்!
தாவீது அபிகாயிலின் வார்த்தைகளையும், அவளை அன்பும், பண்பும், புத்திசாலித்தனமும், தாராளகுணமும், தாழ்மையும் நிறைந்தவளாகவும் பார்த்தபோது, தயவும், மென்மையும் வாய்ந்த அவளிடம் ஒரு சிறந்த கட்டிடம் போன்ற உறவுக்கான எல்லா அம்சங்களும் இருந்ததைக் கண்டான்.
ஒரு சிலரைப் பார்க்கும் முதல் பார்வையிலேயே நாம் அவர்கள் ஒரு நல்ல நட்புக்கு அல்லது உறவுக்கு தகுதியானவர்கள் என்று உணருவதில்லையா!
தாவீது அபிகாயிலிடம் ஒரு நல்ல நட்புக்கான அறிகுறிகளைப் பார்க்கிறான். அவள் அவனோடு பேசியதை அவன் ஏற்றுக்கொண்டு, அவள் கொண்டுவந்ததை அவள் கையில் வாங்கிக் கொள்கிறான். அபிகாயிலிடம் ஒரு நல்ல இருதயத்தைப் பார்த்தான். மற்றவர்களை துக்கப்படுத்தாத ஒரு இருதயம், மற்றவர்களை கோபப்படுத்தாத ஒரு குணம், எப்பொழுதுமே இளகிய நல்ல மனம், ஒரு நல்ல நட்பு வேறு எங்கு ஆரம்பிக்க முடியும்?
நீ சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தாவீது அவளுக்கு உடனே பதில் கொடுக்கிறான்.
நாம் நம்முடைய திருமண உறவுக்குள், அல்லது ஒரு நட்புக்குள், அல்லது ஒரு வியாபார உறவுக்குள் பிரவேசிக்கும் முன், இப்படிப்பட்ட உறவுக்குள் நம்மை நடத்துபவர் கர்த்தர் என்பதை மறந்தே போகிறோம்.
நல்ல நட்பு அல்லது நல்ல உறவு உனக்கு யாரிடமாவது உள்ளதா?
உன்னுடைய உள்ளத்தைத் திறந்து நீ அபிகாயிலைப் போல பேசாவிட்டால் உன்னால் எப்படி நல்ல நட்பை உருவாக்க முடியும்?
ஆயிரம் பேருக்கு முன்னால் நின்று பேசுவது சுலபம்! ஆனால் ஒருவரிடம் மனம் திறந்து பேசி ஒரு உண்மையான நல்ல உறவை ஏற்படுத்துவதுதான் கடினம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்