1 சாமுவேல் 25: 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக.
அபிகாயில் சொன்ன யோசனையை தாவீது ஏற்றுக்கொண்டான் என்று பார்த்தோம். இன்றைய வசனத்தைப் படிக்கும்போது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் நீதிமொழிகளில் கூறியது நினைவிற்கு வந்தது
நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்; புத்தி உன்னைப் பாதுகாக்கும் (நீதி:2:11)
எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். ஆனால் இன்று அபிகாயிலின் வாழ்க்கையின் மூலம், யோசித்தபின்னர் பேசுவதைப் பற்றி வேதத்திலிருந்து அறிகிறோம். நாம் ஒரு காரியத்தைக் குறைவாகப் புரிந்து கொண்டு பேசும்போது என்ன நடக்கும்? நாம் யோசிக்காமல் பேசிவிட்டதை உலகுக்கே காட்டிவிடும் அல்லவா?
ஒருவேளை சாலொமோன் இதைத் தன் தகப்பனாகிய தாவீதின் மூலம்தான் அறிந்திருக்கலாம். மற்றும் அவன் நீதிமொழிகள் 3:21 ல்,
என் மகனே, இவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞானத்தையும், நல்லாலோசனையையும் காத்துக்கொள்,
என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். தாவீது இந்த அரிய பாடத்தை தான் சந்தித்த நல்யோசனை கொண்ட அபிகாயிலின் மூலம் கற்றிருந்திருக்கலாம் அல்லவா!
அபிகாயிலைப்பற்றி நாம் முதன்முதலில் வேதத்தின் வாசிக்கும்போதே அவள் புத்திசாலியும், ரூபவதியுமாயிருந்தாள் என்று வேதம் கூறுகிறது ( 25:3). அவளுடைய வெளிப்புறமான அழகுக்கு முன்னரே புத்திசாலித்தனம் இடம் பெறுகிறது. அவளுடைய வெளிப்புற அழகு அவளுடைய உட்புற புத்திசாலித்தனத்தை கருமையாக்கவில்லை!
நான் அநேக அழகானவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வாயைத் திறந்தால்மட்டும் தான் புத்தியீன வார்த்தைகள் அவர்களிடமிருந்து அருவி போல வருவதைப் பார்க்கலாம். எதையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு, அதையும் இதையும் முடிச்சி போட்டு பேசுபவர்கள்!
நம்மில் எத்தனைபேர் வெளிப்புற அழகைக்கண்டு மயங்கி , கண்மூடித்தனமாக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு இன்று அழுது புலம்பி கொண்டிருக்கிறோம்?
நல் யோசனை உன்னைக் காப்பாற்றும் ஏனெனில் அது நமக்கு தேவன் அளிக்கும் பரம ஈவு!
நாம் எதையும் பேசும்போது அடுக்கு மொழி அவசியமில்லை! நல்யோசனை அவசியம்!
நல்யோசனை என்ற இந்த வார்த்தைக்கு உன்னுடைய வாழ்க்கையில் அர்த்தம் என்ன? என்றாவது ஒருநாள், ஐயோ நான் பேசுமுன் ஆலோசனை பண்ணாமல் பேசிவிட்டேனே என்று எண்ணியுள்ளாயா?
உடனுக்குடன் பதில் கொடுத்து பேசுவது, அதிகமான வார்த்தைகளை அள்ளி வீசுவது, சுய கர்வத்தோடு பேசுவது இவை என்றுமே எனக்கு அழிவுக்கு வழியென்றுதான் தோன்றும்!
அபிகாயில் யோசித்து பேசின வார்த்தைகள் அவளையும் அவளுடைய குடும்பத்தையும் பேரழிவினின்று காத்தன!
உன்னுடைய வார்த்தைகள் எப்படிப்பட்டன என்று சிந்தித்துப் பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
நன்றி சகோதரி. வாழ்த்துக்கள். ❤
On Fri, 4 Feb, 2022, 6:01 am Prema’s Tamil Bible Study & Devotions, <
comment-reply@wordpress.com> wrote:
அன்புள்ள சகோதரிக்கு, செய்திகளை தொடர்ந்து அனுப்புங்கள். எதிர்
பார்த்துக்கொ ண்டிருக்கிறேன். நன்றி. 🙏
நன்றி சகோதரர்! முடிந்த வரை தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறேன்! தேவன் பெலன் தர ஜெபியுங்கள்!