1 சாமுவேல் 27: 8 – 12 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும், அமலேக்கியர் மேலும் படையெடுத்துப்போனார்கள்……. இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ….ஒரு புருஷனையாகிலும்,ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான். ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான். என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
நான் என்றுமே தாவீதின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடமான வாழ்க்கை என்று நம்புவேன். இன்று 21ம் நூற்றாண்டில் வாழும் நம்முடைய வாழ்க்கைக்கு அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அநேக காரியங்கள் உள்ளன.
நேற்று நாம் தாவீதோடும் அவனோடிருந்த 600 பேரோடும், கர்மேலிலிருந்து, சிக்லாக் என்ற பெலிஸ்தரின் பட்டணத்துக்குத் தொடர்ந்தோம். தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகாமல், பெலிஸ்தரிடம் அடைக்கலம் புகுந்தான் என்று பார்த்தோம்.
இங்கு தாவீதுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைத்து விட்டது. பெலிஸ்த நாட்டை எல்லையாக கொண்டிருந்த கானானியரை தன்னுடைய 600 பேர் கொண்ட சேனையோடு போய் கொள்ளையிட ஆரம்பித்தான். இந்த நாடுகளை அழித்துவிடும்படி தேவனாகிய கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டிருந்தார் என்பது அவனுக்குத் தெரியும். தான் செய்வது பெலிஸ்த ராஜாவுக்கு தெரியாமல் இருக்க அவன் ஆண், பெண் எல்லோரையும் கொன்றுவிடுவான். ஒருவரையும் தப்பவிடவில்லை!
அநேக வருடங்களுக்கு பிறகு, தாவீது தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்ட விரும்பினபோது, கர்த்தர் அவனுக்கு அந்தத் தகுதியைக் கொடுக்காமல் சாலொமோனுக்குக் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும் அல்லவா! ஒருவேளை தாவீதின் கரங்களில் இந்த இரத்தக்கரை இருந்ததால் தானோ என்னவோ!
பெலிஸ்த ராஜாவாகிய ஆகீஸிடம் அவன் கொள்ளையடித்தவைகளை கொண்டு வந்த போது, அவன் இன்று நீர் எங்கே கொள்ளையடித்தீர் என்றால், அதற்கு தாவீது, இஸ்ரவேலைக் கொள்ளையிட்டதாகக் கூறுவான். அவன் உண்மையில் ஆகீஸை ஏமாற்றினான் என்று பார்க்கிறோம். அவன் ஆகீஸிடம் தன்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரைக் கொள்ளையிடுவதாகக் கூறினான். பாவம்! பெலிஸ்தரின் ராஜாவாகிய ஆகீஸ் தாவீதை நம்பி, அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான். என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
தாவீது ஏமாற்ற ஆரம்பித்ததின் முதல் கட்டம் இது என்று நான் நினைக்கிறேன். எதிரியிடம் அடைக்கலம் புகுந்தாயிற்று, இனி பிழைக்க வழி தேட வேண்டும். நான் என்னை சேர்ந்தவர்களைக் காப்பாற்ற பொய் சொல்லி ஏமாற்றினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. ஏமாற்றுதல் என்ற புற்றுநோய் ஆரம்பித்துவிட்டது.
ஒரே ஒரு பொய் தானே என்று நாம் நினைக்கலாம்! ஆனால் அந்த ஒரு பொய் தவளையைப் போல பல குட்டிப் பொய்களை முதுகில் ஏற்றிக்கொண்டு வந்துவிடும்.
அவன் ஒரு பெலிஸ்தனிடம் தானே பொய் சொல்லி ஏமாற்றினான் என்று கூட நாம் நினைக்கலாம்! ஆனால் ஒரு கிறிஸ்தவராக, உண்மை என்பது நம்முடைய வாழ்க்கையில் அடிக்கல்லாக இருக்குபோது நாம் யாரையும் ஏமாற்றக்கூடாது என்பதே என் எண்ணம். அவர்கள் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும்! நாம் ஏமாற்றக் கூடாது!
தாவீது சிக்லாக் என்ற எதிரியின் எல்லைக்குள் போகாதிருந்தால் இந்த ஏமாற்றுத்தனத்துக்கே இடமில்லை! என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு!
இன்று நாம் எங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நம்மிடம் ஏமாற்றுதல் என்ற புற்று நோய் உண்டா? பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால் நிறுத்தவே முடியாது! அது மறுபடியும் மறுபடியும் நம்மை பொய் சொல்லி ஏமாற்றத் தூண்டும்.
கொள்ளையடித்த பணத்தோடு வசதியாக வாழ் ஆரம்பித்த தாவீதுக்கு, சிக்லாக் பரலோகமாக இல்லாமல், எப்படி நரகமாக மாறியது என்று அடுத்த வாரம் பார்ப்போம்! ஆனால் அந்த எதிரியின் எல்லைக்குள்ளும் கர்த்தர் அவனுக்கு துணையாக நின்று அவனை விடுவித்ததையும் பார்ப்போம்!
பாவத்தின் கருவியே பொய்தான்! அதை உன் வாழ்க்கையிலிருந்து களைந்துவிடு!
கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்