1 சாமுவேல் 30: 3, 6 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும், தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். தாவீதும் மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
தாவீது பெலிஸ்த நாட்டில் தன் மனைவிகளோடும், தன்னோடிருந்த 600 பேர்களோடும், அவர்களுடைய குடும்பங்களோடும் வந்து குடியேறினான். பெலிஸ்த நாட்டின் எல்லைகளை ஒட்டியிருந்த கானானியரை கொள்ளையடித்து வந்தான். ஆனால் பெலிஸ்த ராஜாவாகிய ஆகீஸிடம் தான் யூதாவைக் கொள்ளையடித்ததாக பொய் சொல்லி ஏமாற்றி வந்தான் என்று பார்த்தோம்.
ஆனால் தாவீது சிக்லாகை விட்டு வெளியே இருக்கும்போது, அமலேக்கியர் வந்து சிக்லாகை சுட்டெரித்து, அங்கிருந்த எல்லோரையும் சிறை பிடித்துக்கொண்டு போயினர்.
தாவீதின் மனைவிமாரான அபிகாயிலும், அகினோவாமும், தாவீதொடு இருந்த மனிதரின் குடும்பங்களும் சிறைப்பிடிக்கப் பட்டனர்.
தாவீது ஏமாற்றியது எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள்!
29 ம் அதிகாரத்தில் தாவீதை, பெலிஸ்த ராஜாவாகிய ஆகீஸ், இஸ்ரவேலருக்கு விரோதமான யுத்தத்துக்கு அழைத்து செல்வதைப் பார்க்கலாம். கடைசி நிமிஷத்தில், பெலிஸ்த பிரபுக்கள் அதை ஏற்றுக் கொள்ளாததால், அவன் தன் அந்தக் கொடிய காரியத்திலிருந்து தப்பித்து வீட்டுக்குத் திரும்புகிறான். வீட்டுக்கு வந்தால் தலையில் இடி விழுந்தாற்போல் அவன் வாழ்ந்த சிக்லாக் கொள்ளையிடப்பட்டு அக்கினிக்கு இரையாயிருந்தது.
தாவீது கர்த்தரை நம்பாமல் எதிரிகளின் பட்டணத்தில் அடைக்கலம் புகுந்ததும் தவறு! அடைக்கலம் கொடுத்த ஆகீஸை பொய் சொல்லி ஏமாற்றியதும் தவறு. அவன் தன்னுடைய தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்காதின் அடையாளம் இது. அவிசுவாசம் கீழ்ப்படியாமையை பிறப்பிக்கும்!
அவனுடைய இரண்டு மனைவிமார் மட்டுமல்ல, அவனோடிருந்த 600 பேருடைய மனைவி, பிள்ளைகளும் சிறைபிடிக்கப்பட்டுப் போனதால் அவர்கள் தாவீதுக்கு எதிராக மாறி அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்!
எத்தனை பரிதாபமான நிலைமை! தாவீது எந்தப்பக்கமும் ஓட முடியாமல் மாட்டிக்கொண்டு, கடைசியில் எந்த நிலையிலும் அடைக்கலம் கொடுக்க வல்ல தேவனாகிய கர்த்தருடைய பக்கம் திரும்புகிறான்.
ஒரு நிமிடம்! நம்முடைய அவிசுவாசத்தாலும், கீழ்ப்படியாமையாலும் நாம் துக்கமான பாதையில் செல்லும்போது, தேவனாகிய கர்த்தர் தம்முடைய கிருபையை நம்மிடமிருந்து விலக்கி விடுவாரா? இல்லவே இல்லை! நாம் எந்த நிலையில் அவரிடம் அடைக்கலம் தேடி வந்தாலும், நமக்கு உதவி செய்ய அவர் நம்மண்டை நிற்கிறார்.
இந்த மா பெரிய கிருபையைத்தான் கர்த்தர் தாவீதுக்கு சிக்லாக்கில் அருளினார். பொய் சொல்லி, ஏமாற்றி, கர்த்தரை விட்டு விலகிய அவனுக்கு கர்த்தர் கிருபையாய் இரங்கினார்.
உன்னுடைய கீழ்ப்படியாமையால் சிக்லாகில் மாட்டிக்கொண்டிருக்கிறாயா? தாவீதைப்போல கிருபையின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பு! உதவி உடனே வரும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்