1 சாமுவேல்: 28: 24,25 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது. அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களாகச்சுட்டு, சவுலுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள். அவர்கள் புசித்து எழுந்திருந்து…
ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவர் தன் பிள்ளைகளிடம் யாராவது ஒருவரின் முகத்தை வரையும்படி கூறினார். அந்த சிறு குழந்தைகள் வரைய ஆரம்பித்தனர். அந்த ஆசிரியை ஒவ்வொருவரும் என்ன வரைகிறார்கள் என்று சுற்றிப் பார்த்தார். ஒருசிலர் தாங்கள் வரைந்த முகத்துக்கு அம்மா என்று பேரிட்டனர், சிலர் அக்கா என்றும், சிலர் தாத்தா என்றும் வரைந்திருந்தனர். ஆனால் ஒரு சிறு பெண் மாத்திரம் தான் வரைந்ததற்கு பெயர் கொடுக்கவில்லை. அதைக்கண்ட ஆசிரியை, நீ யாரை வரைகிறாய் என்று கேட்டார். அந்த சிறுபெண் உடனே, கடவுளை வரைகிறேன் என்றாள். அதற்கு ஆசிரியை, கடவுளை யாரும் கண்டதில்லை, கடவுளின் முகம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது, பின்னே எப்படி உன்னால் வரைய முடியும் என்றார். அதற்கு அந்த சிறுபெண், அப்படியானால் இனிமேல் எல்லோருக்கும் தெரியவரும் என்று உடனே பதிலளித்தாள்.
இந்தக் கதை என்னை சிந்திக்க வைத்தது, ஏனெனில் நாம் கூட இந்த சிறு பிள்ளையைப்போல பல முகங்களை கற்பனை பண்ணி வைத்திருக்கிறோம். ஓய்வு நாள் பாடசாலையில் கேட்ட கதைகளையெல்லாம் கற்பனையில் காண்பதில்லையா? ஏன் கடவுள் எப்படியிருப்பார், சாத்தான் எப்படியிருப்பான் என்றுகூட நமக்கு கற்பனையில் தெரியும். விசேஷமாக சாத்தான் என்றவுடன் நாம் ஒரு பயங்கரமானஉருவத்தைதான் நினைப்போம். ஆனால் ஆதி 3:1 ல் சாத்தான் பயங்கர ரூபத்தில் வந்து ஏவாளை பயமுறுத்தவில்ல, மாறாக தந்திரமாய் இனிமையாயாக பேசக்கூடிய சர்ப்பமாய் வந்தான் அல்லவா?
சவுல், பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டு அஞ்சி, பொல்லாங்கைத் தேடி சென்றான் என்று பார்த்தோம். எந்தோரில் ஒரு அஞ்சனம் பார்க்கும் ஸ்தீரியிடம் சென்றான், அவளோ அவனிடம் மிகவும் கருணையாக நடந்து கொள்வதை இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். அவள் அவனுக்கு விருந்தே சமைத்துக் கொடுக்கிறாள்.
சவுலுக்கு அவ்வப்போது ஆலோசனைத் தேவைப்படும்போது யாரவது ஆலோசனைக் கொடுத்து, அவன் பயத்தை நீக்க வேண்டும். இது அவனுடைய வழக்கம். அதனால்தான் அடிக்கடி சாமுவேலைத்தேடி ஓடுவான். இப்பொழுது சாமுவேல் இல்லை, அதனால் இந்த ஸ்திரீயிடம் வந்திருக்கிறான்.இங்கே சாத்தான் இந்தப் பெண்ணின் ரூபத்தில் சவுலின் சரீரப்பிரகாரமானத் தேவைகளை சந்திக்கிறான்.
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கொடுக்கிறது. சாத்தான் என்றுமே நம்மை பயப்படுத்தும் ரூபத்தில் நம்மிடம் வருவதே இல்லை. நமக்குப் பிடித்த, நம்முடைய உடனடி ஆசைகளை நிறைவேற்றும் ரூபத்தில் தான் நம்மிடம் வருவான். நாம் ஏமாந்துவிட்டோம் என்று உணருவதற்குள் நாம் அவன் வலையில் சிக்கி விடுவோம்.
சோர்ந்து போயிருந்த சவுலுக்கும், அவனுடைய ஊழியருக்கும் நல்ல சாப்பாடோடு வந்தான் சாத்தான். அந்த உணவுதான் அந்த வேளையின் தேவையாயிருந்தது. நாம் பெலனோடு இருக்கையில் நம்மை அணுகமாட்டான் சாத்தான். நம்முடைய பெலவீன வேளையில்தான் நம்மை நெருங்குவான். நம்முடைய பெலவீனத்தை நம்மைவிட அகிகமாக அறிந்தவன் அவன்!
இன்று யாருடைய ரூபத்தில் சாத்தான் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்? நவீனமயமாக கூட சாத்தான் வருவான்! விருந்தோடும் வருவான்! நண்பனாக வருவான்! நண்பனின் மனைவியாகவோ அல்லது கணவனாகவோ வருவான்! சிற்றின்பங்களை அள்ளி அள்ளித் தருவான்! அவன் வஞ்சிக்கிறான் என்று உணரும் முன்பே நீ அவன் வலையில் விழுந்துவிடுவாய்!
ஜாக்கிரதை! ஒவ்வொருநாளும் உன்னை சுற்றி வேலியடித்து உன்னைக் காக்கும்படி கர்த்தரிடம் மன்றாடு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்