2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான்.
தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது. மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது சவுல் ராஜாவின் மகள் என்பதற்காக மணந்தானா என்றுதான் தெரியவில்லை! இந்த சம்பந்தம் ஒருவேளை தாவீதுக்கு பலன் கொடுப்பதாயிருந்திருக்கலாம்.
சவுல் தாவீதை கொலை செய்ய முயன்றபோது மீகாள் தாவீதின் பக்கம் இருந்து அவனை காப்பாற்றினாள். தாவீதைக் காப்பாற்ற அவள் தன் தகப்பனையே ஏமாற்ற வேண்டியிருந்தது. ஆனாலும் தாவீது சவுலுக்கு தப்பியோடும்போது மீகாளைப் பற்றி நினைத்ததாகவும் தெரியவில்லை, அவளைப்பற்றி விசாரித்ததாகவும் தெரியவில்லை. மீகாள் அவன் கண்களில் படவும் இல்லை, அவன் மனதிலும் இல்லை! பின்னர் தாவீது இரு பெண்களை மணந்தான்!
மீகாளை அவள் தகப்பனாகிய சவுல் பல்த்தியேலுக்கு விவாகம் செய்து கொடுத்தது அவன் செவிகளை எட்டியது. அந்தக்காலகட்டத்தில் பெண்கள் அதிகம் பேச முடியாது. அவள் நேசித்த ஒருவனிடமிருந்து அவள் தகப்பன் அவளை பிரித்து வேறொருவனுக்கு கொடுத்துவிட்டான்.
ஆனால் வேதம் நமக்கு சொல்லாத இன்னொரு காரியம் நடந்திருக்கிறது. பல்த்தியேலுக்கும் மீகாளுக்கும் நடுவில் ஒரு நல்ல உறவு இருந்தது. பல்த்தியேல் மீகாளை அதிகமாய் நேசித்தான். இஸ்போசேத் அவளை அழைத்து வர ஆட்களை அனுப்பிய போது பல்த்தியேல் மனம் உடைந்து அழுதான். அவன் அழுதுகொண்டே அவள் பின்னாக சென்றான் என்று பார்க்கிறோம்.
என்ன கொடுமையான காரியம்! பல்த்தியேல் மீகாளை நேசித்தான் ஆனால் தாவீதுக்கு அவளை அவள் கணவனுடைய அன்பின் கரத்திலிருந்து பிரிக்க அதிகாரம் இருந்தது! தாவீதுக்கு அந்த சமயத்தில் ஆறு மனைவிகள் இருந்தபோதும் அவன் மீகாளை தன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி அடைய நினைத்தான்.
ஒரு நிமிஷம்! இந்த வேளையில் சவுலின் குமாரத்தியாகிய மீகாளை தாவீது தனக்கு சொந்தமாக நினைத்தது தவறு இல்லையா? இது விவாகரத்து ஆகி, வேறொரு கணவனை மணந்து கொண்டு அமைதியாய் வாழும் ஒரு பெண்ணை, தன்னுடைய அதிகாரத்தையும், ஆணவத்தையும் பயன்படுத்தி மறுபடியும் தன்னோடு வாழும்படியாக செய்து, அவளுடைய உரிமையை பறிப்பது போல அல்லவா உள்ளது!
நமக்கு சொந்தமில்லாத ஒன்றை நம்முடைய அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொள்ள நாம் முயற்சி செய்வதில்லையா அப்படித்தான்! எத்தனை குடும்பங்கள் இப்படி சீரழிந்து கொண்டிருக்கின்றன!
இந்தக்கதை ஒன்றும் ‘அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று முடியும் கதை அல்ல! இதன் பின்பு தாவீதின் குடும்பத்தில் யாருமே சந்தோஷமாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை!
அன்பின் சகோதர சகோதரிகளே! உன் வாழ்க்கையில் இன்று வேறொருவருக்கு சொந்தமான ஒன்றை நீ ஆசைப்பட்டு அடைய விரும்புகிறாயா?
வேறொருவருக்கு சொந்தமான ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ நீ அடைந்துவிட முயற்சி செய்கிறாயா? இதற்கு பெயர் அன்பு இல்லை! இந்த முயற்சியை இன்றோடு விட்டுவிடு! வேண்டாம்!
தாவீதைப்போல தவறு செய்யாதே! எல்லா பொல்லாங்குக்கும் பின் விளைவு உண்டு! இன்று அது உனக்கு வெற்றியாகத் தோன்றினாலும் அது உன் நிம்மதியை பறித்துவிடும்! உன் குடும்பத்தின் நிம்மதியும் பறிபோய்விடும்! ஜாக்கிரதை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்