சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும்.
2 சாமுவேலை படித்துக் கொண்டிருக்கும் நான் ஒரு சின்ன இடைவெளியில் என் உள்ளத்தை தொட்ட இன்னொரு தலைப்பைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய கம்பெனியின் தேவைக்காக ஒருவரை அணுகினோம். அவர் நேரில் வந்து எங்களோடு பேசிய பின்னர் எங்களுக்கு உதவுவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் நாங்கள் பலமுறை அணுகியும் அவர் வாக்குக்கொடுத்ததை காப்பாற்றவில்லை. நாங்கள் அவரை நம்பி ஏமாந்தது தான் மிச்சம். இதைப்பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு! இந்த என்னுடைய ஏமாற்றத்துக்கு காரணம் நான் கேட்டது கிடைக்காததினால் அல்ல நான் அதை அதிகமாக எதிர்பார்த்ததினால்தான் என்று உணர்ந்ததும் உண்டு!
இன்னும் சில நாட்கள் நான் இந்த எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதை நான் படிக்க ஆரம்பித்தபோது எப்படி நம்முடைய நான்கு விதமான எதிர்பார்ப்புகள் நம்முடைய உறவை பாதிக்கின்றன என்று காண முடிந்தது. தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவில் நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால்தான் நாம் நம்முடைய எதிர்பார்ப்புகள் நம்முடைய உறவுகளை எப்படி பாதிக்கும் என்று பார்க்கப்போகிறோம்.
எதிர்பார்ப்பு 1 உண்மை, எதிர்பார்ப்பு 2: நம்பகம், எதிர்பார்ப்பு 3: திடம் எதிர்பார்ப்பு: 4 பொறுப்பு என்ற தலைப்புகளில் அடுத்த நான்கு நாட்கள் வரை படிக்கப்போகிறோம், தவறாமல் வாசியுங்கள்!
இந்த நான்கு விதமான எதிர்பார்ப்பையும்பற்றி படித்த நான் இந்த எல்லா எதிர்பார்ப்புக்கும் பாத்திரரான ஒருவரை இதுவரை சந்தித்துள்ளேனா என்று யோசித்துப் பார்த்தேன். என்னுடைய பதில் எப்பொழுது கேட்டாலும் ‘ ஒருவர் மட்டுமே’ என்றுதான் வரும்.
ஆம் என்னுடைய பரலோகத் தந்தை மட்டுமே! எனவே நாம் இந்த எதிர்பார்ப்புகளைப் பற்றி படிக்கும்போது, தேவனாகிய கர்த்தர் எப்படி நம்முடைய ஒவ்வொரு எதிர்பார்த்தலையும் சந்திக்கிறார் என்றும் பார்ப்போம்.
இந்த நான்கு நாட்களுக்கு பின்னர் நீங்களும் நானும் பரிசுத்த பவுலோடு சேர்ந்து,
நாம் வேண்டிகொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும்,மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்கு செய்ய வல்லவராகிய அவருக்கு ( எபே: 3:20) நாம் சகல மகிமையையும் செலுத்தக்கூடியவர்களாக வேண்டும் என்பதே என்னுடைய ஜெபம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்