2 சாமுவேல் 5:10 தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். சேனைகளின் தேவனாகிய அவனோடேகூட இருந்தார்.
தேவனாகிய கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு ஏற்படுத்தும் அழகிய உறவைப்பற்றி பார்த்தபின்னர், நாம் இன்று தாவீதின் வாழ்க்கையைத் தொடருகிறோம்.
தாவீதைப்பற்றி எல்லோருடைய மனதிலும் எழும் ஒரே கேள்வி, கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைக்கப்பட்ட தாவீது எப்படி பெண்களோடு கொண்ட உறவில் தவறு செய்தான் என்று!
தாவீதைப் பற்றி கடந்த சில நாட்களில் அதிகமாக படித்தபோது, தன்னுடைய இள வயதில் தேவனோடு உறவாடிய ஒருவன், அவரைஉறுதியாக நம்பிய ஒருவன், அவருடைய நாமத்தால் வெற்றி கண்ட ஒருவன், ஒரு பெண்ணின் விஷயத்தால் தன்னை மிகவும் நம்பி தனக்கு விசுவாசமாயிருந்த தன்னுடைய சேனை வீரனை கொலை செய்யும் அளவுக்கு ஒரு மிருகமாக எப்படி மாற முடிந்தது என்ற எண்ணம் என்னை அதிகமாக பாதித்தது.
அநேக வேத வல்லுநர்கள் இதைப்பற்றிக் கூறும்போது, நம் எல்லோருக்குமே மிருகமாக மாறும் தன்மையும்உண்டு, நம் எல்லோருக்குமே நன்மை செய்யும் தன்மையும் உண்டு! இது நம் எல்லோருக்குள்ளும் புதைந்திருக்கும் குணம்!
அதனால்தான் வேதம் நம்மைப்போன்ற மனிதரின் உண்மையான தன்மையை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்துகிறது! தாவீதின் பாவத்தை திரை போட்டு மறைத்து அவனை நல்லவனாகவே காட்டியிருக்கலாம் அல்லவா? அப்படி திரை போட்டு மறைக்காமல் அதைப்பற்றி நமக்கு தெளிவாக வெளிப்படுத்துவதால் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள அதில் ஏதோ ஒரு பாடம் உள்ளது என்று நமக்குத் தெரிகிறது அல்லவா?
தாவீதின் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடு கூட இருந்தார் ( 2 சாமுவேல் 5:10) என்று வேதம் சொல்லுகிறது.
ஆனால் ஆங்காங்கே, எப்பொழுதெல்லாம் அவன் வழி விலகினானோ, எப்பொழுதெல்லாம் அவன் தன்னால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று நினைத்தானோ, அப்பொழுதெல்லாம் அவனுக்கு கடினமான எச்சரிக்கையும் கிடைத்தது. வாழ்வில் அவனைபோல கஷ்டங்களை அனுபவித்தவனும், உயிருக்காக ஓடி ஒளிந்தவனும் இருக்க முடியாது.
நாமும் கூட தாவீதின் வாழ்வின் மூலம், இந்த உலகத்தை அல்ல, தேவனுடைய வல்லமையையே சார்ந்து வாழ வேண்டும் என்ற பெரிய உண்மையை கற்றுக்கொள்கிறோம்.
ஒரு நிமிடம்!!!! ஆனால் நீங்கள் என்னைப்போல இருப்பீர்களானால், இந்த வார்த்தைகளை பேசுவதும், எழுதுவதும் சுலபம், நடைமுறையில் வாழ்ந்து காட்டுவது மிகவும் கடினம் என்று சொல்லுவீர்கள்! நம்முடைய பாதை முள்ளுள்ளதாக இருக்கும்போது உலகத்தை, உறவுகளை நம்பாமல், தெய்வீக வழிநடத்துதலுக்காகக் காத்திருப்பது மிகவும் கடினம்தானே! அதேசமயம், நீங்கள் என்னைப்போல இருப்பீர்களானால், கர்த்தரை முழு மனதோடும் பற்றிக்கொண்டு, அவர்மேல் சார்ந்து இருக்கும்போது மட்டும்தான் நாம் சாத்தானை முறியடிக்க முடியும் என்றும் உணர்ந்திருப்பீர்கள்!
ஆதலால் நாம் தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் இடையே உருவான உறவு அவர்களை சுற்றியிருந்தவர்களை எவ்வளவு பாதித்தது என்று படிக்குமுன், தாவீதின் வாழ்வில் இருந்த நல்லதும் மற்றும் தவறானதுமான நடைமுறைகளைப் பற்றி சற்று பார்க்கலாம். இந்த குறிப்பிட்ட காரியங்களை நாம் படிக்கும்போது நிச்சயமாக அவை நம்மை பலவிதமான பாவங்களில் சிக்காமல் காத்துக்கொள்ள உதவும்.
நன்மையையும் தீமையையும் பிரிக்கும் ஒரு சிறிய கோடு நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஓடுகிறது. இதை உணர தாவீதுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை!
ஒவ்வொரு நிமிடமும் தேவனையே நோக்கி அவருக்கு காத்திருக்கிற இருதயத்திலிருந்துதான் துதி பாடல் வரும் என்று உணர்ந்தான்!
என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன் ( சங்:57:7).
நம் இருதயம் இன்று ஆயத்தமாயிருக்கிறதா? அதில் துதி கீதங்கள் உண்டா?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்