1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்.
2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான்.
தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் தொடர்ந்து படிக்கும் போது தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது. இன்றைய வசனங்கள் நமக்கு தாவீதின் குணத்தின் இரு பக்கங்களைக் காட்டுகிறது.
ஒருபக்கம் அவனிடம் சட்டென்று கோபப்பட்டு தன்னுடைய மனுஷரைப் பார்த்து பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தாவீதைப் பார்க்கிறோம். எதையும் யோசிக்காமல், இதனால் அழியப்போகும் உயிர்களைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் முடிவு எடுக்கும் ஒருவன்! நாம் கூட இப்படியான முடிவுகளை எத்தனை முறை எடுத்து இருக்கிறோம்!
தேவனுடைய பிள்ளைகளே! நாம் தாவீதின் மனுஷரைப்போல கூர்மை வாய்ந்த பட்டயத்தை நம்முடைய இடுப்பில் கட்டிக்கொள்ளவில்லையானாலும், அதைவிட கூர்மை வாய்ந்த வார்த்தைகள் என்னும் ஆயுதத்தை எடுத்து, அதனால் ஏற்படப் போகிற விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் வார்த்தைகளால் யுத்தம் செய்து முடித்து விடுகிறோம் அல்லவா!
இந்தப் பொறுமையில்லாத குணம் கொண்ட தாவீதின் மறுபக்கத்தில் அவன் பொறுமையோடு கர்த்தரின் சித்தத்துக்காக காத்திருப்பதைக் காண்கிறோம்.
இது ஒரு தெய்வீக குணம் என்றுதான் நினைக்கிறேன். அவன் இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜா என்று சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் பண்ணப்பட்டபின்னர் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது! அவன் தன்னுடைய பலத்தால் சவுலை மேற்கொண்டிருக்கலாம் அல்லவா? ஆனால் அவன் கர்த்தருக்காக, அவருடைய வேளைக்காக பொறுமையோடு காத்திருந்தான். கர்த்தர் அவனுக்காக கிரியை செய்தார்! அவனை படிப்படியாக வழி நடத்தினார்!
என்னுடைய உள்ளத்தை ஆராய இந்த வசனங்கள் இன்று எனக்கு உதவின! நான் அவசரப்பட்டு வார்த்தையை வீசாமல் பொறுமையாக கர்த்தருக்கு காத்திருக்கிறேனா என்று என்னையே ஆராய்ந்து பார்தேன் நம்முடைய ஒவ்வொரு வார்த்தைகளையும், நடத்தையையும் கர்த்தர் வழி நடத்துவாரானால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.
ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள், மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். ( பிரசங்கி: 10:12)
நான் நடத்திய கம்பெனியில் பெண்கள் கிராஸ் ஸ்டிச் என்ற தையல் வேலை செய்தார்கள். ஒவ்வொரு டிசைனையும் அவர்களிடம் நான் ஒப்படைக்கும்போது அது ஒரு காகிதமாகத்தான் இருக்கும். அதில் உள்ள டிசைனை ஒவ்வொரு தையலாக எண்ணி எண்ணி அவர்கள் தைக்கும்போதுதான் அந்த டிசைனுக்கு உயிர் வரும். ஒரு டிசைனை ஒரு பெண் ஒரு மாதம்கூட தைக்கவேண்டியதிருக்கும். ஆனால் கடைசியில் அதன் விளைவு மிகவும் அழகான, விலை மதிப்புள்ள ஒரு தையல் வேலையாக இருக்கும்!
நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பொறுமையாகக் காத்திருந்து கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்ய அனுமதித்தால் அதன் பின்விளைவு எவ்வளவு அழகாக இருக்கும்!
தாவீதைப்போல பொறுமையாக தேவன் உனக்கு வாக்கு கொடுத்ததை நிறைவேற்ற காத்திருக்க கற்றுக்கொண்டிருக்கிறாயா?
அல்லது தாவீதின் மறு பக்கத்தைப் போல அவசரமாய் முடிவெடித்து, கூர்மையான வார்த்தைகள் என்னும் ஆயுதத்தைக் கொண்டு நம் குடும்பத்தாரோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோமா?
சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்