1 சாமுவேல்: 26:8,9 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான்.
தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தான். கோலியாத்தைக் கொன்ற பின்னர் சவுலின் சேவகனாகவும், சவுல் அசுத்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்டபோது அவனை அமைதிப்படுத்தும் இசைக்கலைஞனாகவும் சேர்ந்தான். ஆனால் சவுலோ அவனுடைய உயிரை எடுக்கும் எண்ணத்தோடு அவனை ஒரு பறவையைப்போல வேட்டையாடினான்.
அப்படிப்பட்ட வேளையில்தான் அவன் துராகிரதனாகிய நாபாலை சந்தித்தான். நாபால் அவனை நடத்திய விதம் தாவீதை நாபாலின் மொத்தக்குடும்பத்தையும் அழிக்கத் தூண்டியது. புத்திசாலியான அபிகாயிலால் அது தடுக்கப்பட்டது. தாவீது பழிவாங்குவதை விட்டு பின்வாங்கி, கர்த்தரே பழிவாங்கும்படி விலகினான்.
இப்படியாகப் பழிவாங்கும் சூழ்நிலை அவனுக்கு பலமுறை வந்துள்ளது. இன்றைய வேதாகமப்பகுதியில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைத் தான் பார்க்கிறோம். இங்கு அபிசாய் தாவீதைப் பார்த்து இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்கிறான்.
ஒருநிமிஷம்! அபிசாயின் வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள்! ஒரு இஸ்ரவேலனாகிய அபிசாய் தேவனுடைய நாமத்தில் ஒரு அட்வைஸ் கொடுக்கிறான். அதை தேவனே கூறிய விதமாக நினைத்து அந்த புத்திமதியை ஏன் தாவீது ஏற்றுக்கொண்டிருக்கலாம் அல்லவா?
நல்லவேளை தாவீது தன்னுடைய பரமபிதாவின் சத்தத்தை நன்கு அறிந்திருந்தான். அதைப்போல சில நேரங்களில் கிறிஸ்தவ ஊழியரின் வாயில் இருந்து வரும் எல்லா வார்த்தைகளும் கிறிஸ்துவின் வார்த்தைகள் ஆகாது! அதுதான் தேவனுடைய சித்தம் என்று நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. நம்முடைய பரம பிதாவின் சத்தத்தை நாம் வேதத்தின் மூலமாய் தான் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய நல்ல மேய்ப்பரான கிறிஸ்துவின் குரல் நம்முடைய செவிகளில் ஒவ்வொருநாளும் கேட்க வேண்டும்.
தாவீது அபிசாயிடம், கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்றான் என்று பார்க்கிறோம். தன்னை ஒரு பறவையைப்போல கண்ணி வைத்து வேட்டையாடிக்கொண்டிருந்த சவுலைப்பற்றி தாவீது கூறிய வார்த்தைகள்தான் இவை. எப்படிப்பட்ட உள்ளம் பாருங்கள்! பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிக்கும் மனப்பான்மையை தேவனாகிய கர்த்தர் அவனுக்கு அருளினார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசேயருக்கு எழுதும்போது, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் ( 3:13) என்கிறார்.
தாவீது அபிசாயிடம் பெற்ற புத்திமதிக்கு இது முற்றிலும் மாறானது! பவுல் நமக்கு கொடுக்கும் இந்த அட்வைஸ் நமக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் ஒன்று.
நாம் மன்னிக்குபோது ஒரு கடந்த காலத்தை மாற்ற முடியாது ஆனால் நிச்சயமாக எதிர் காலத்தை மாற்றமுடியும்! இதை என்றும் மறந்து போக வேண்டாம்!
இன்று யாரையாவது மன்னிக்கும்படியாய் கர்த்தர் உன்னோடு பேசுவாரானால் தாவீதைப் போல மன்னித்து விடு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்