1 சாமுவேல் 27:10 இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும்,….கேனியருடைய தென் திசையிலும் என்பான்.
2 சாமுவேல் 5:3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள். தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.
இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவன் வாழ்வில் காணபட்ட ஏமாற்றுத்தன்மையையும், நேர்மையையும் காண்கிறோம். ஒரு தேவ மனிதன் வாழ்வில் இந்த இரண்டுமே காணப்படலாமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஏனெனில் தேவனுடைய பிள்ளைகள் அல்லது விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிற அநேகரின் வாழ்வில் இந்த இரண்டுமே காணப்படுகின்றன!
சவுலுக்கு பயந்து ஓடிக் களைத்துப்போன தாவீது, பெலிஸ்தரின் தேசத்தில் தஞ்சம் புகுந்தான். அங்கு பிழைக்க வழியில்லாமல் பெலிஸ்தரை கொள்ளையடித்த அவன், பெலிஸ்த ராஜாவாகிய ஆகீஸிடம் தான் இஸ்ரவேலரைக் கொள்ளையடித்ததாக பொய் சொன்னான். அவன் அந்த நாட்களில் கர்த்தரின் வழிநடத்துதலின் படி வாழவில்லை. பெலிஸ்தரை ஏமாற்ற முடிவு செய்தான். அது அவனுக்குத் தவறாகவே தெரியவில்லை!
ஆனால் கர்தருடைய கிருபையால் இஸ்ரவேலின் மூப்பர் தாவீதிடம் வந்து இஸ்ரவேலை ஆளும்படி கேட்டபோது அவன் தன்னுடைய கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினான் என்று பார்க்கிறோம். அவன் நேர்மையாய் இஸ்ரவேலை ஆளுவான் என்று மக்கள் அவனை நம்ப வேண்டும் என்று விரும்பினான். அவனுடைய வார்த்தையை ஒரு தேவனுடைய மனிதனின் வார்த்தையாக மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்பினான்.இப்படிப்பட்ட ஆசை நமக்கும் உண்டு அல்லவா? நம்மை சுற்றியுள்ளவர்கள், நம்முடைய குடும்பம், நண்பர்கள் யாவரும் நம்முடைய நேர்மையை நம்ப வேண்டும் என்றுதானே நாமும் விரும்புவோம்!
ஒரு நிமிடம்! நேர்மையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு நல்ல காரியத்தை நடத்துவிக்க நாம் பொய் சொல்லலாமா? அது நேர்மையா?
இஸ்ரவேல் மக்களிடம் நேர்மையாய் நடக்க விரும்பின ,தாவீது, தன்னை சுற்றியுள்ளவர்களைக் காப்பாற்ற , பெலிஸ்தன் என்ற எதிரியின் ராஜாவை ஏமாற்றியது தவறுதான் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இது உங்கள் வாழ்க்கையிலும் நடப்பது இல்லையா? நீங்கள் தவறாக செய்யும் எத்தனையோ காரியங்களை நான் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறேன் என்று நியாயப்படுத்துவது இல்லையா?
சரிக்கும் தவறுக்கும் இடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் நேர்மை என்றுதான் நான் நினைக்கிறேன். நேர்மை என்பது தான் நாம் இயேசு கிறிஸ்துவின் சீஷர் என்பதின் மறுபெயர் என்றும் நான் நினைக்கிறேன்.
நம்முடைய நேர்மையான நடத்தை மட்டுமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்துக்குக் காட்டும் ஒளி! நாம் பிரசங்கம் பண்ணிவிட்டு நம்முடைய வாழ்க்கையில் நேர்மையாக இல்லாமல் வாழ்வோமானால் நம்முடைய பிரசங்கத்தால் என்ன பிரயோஜனம்?
சிந்தித்து பாருங்கள்!
தாவீதைப் போல தவறான வாழ்க்கையை உடனே திருத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில் அவன் அன்று நியாயம் நேர்மை என்று நினைத்த அந்த நேர்மையற்ற செயலுக்கு மிகுந்த விலையைக் கொடுக்க நேரிட்டது. தேவன் தம்முடைய பிள்ளைகள் தவறு செய்வதை தண்டிக்காமல் விடார் என்பது மட்டும் நிச்சயம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்