2 சாமுவேல் 5: 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும், ஸ்திரீகளையும் கொண்டான்.
1 சாமுவேல் 30: 23-24 அதற்கு தாவீது: என் சகோதரரே கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படி செய்ய வேண்டாம்…..யுத்தத்திற்கு போனவர்களின் பங்கு எவ்வளவோ அவ்வளவு ரஸ்துகளண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காக பங்கிடவேண்டும் என்றான்.
இன்றைய வேத வசனங்கள் அதிருப்தியையும் திருப்தியையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவை தாவீதின் உள்ளத்தில் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் காணப்படும் ஒரு தன்மை தான்!
ஒவ்வொருநாளும் என்னுடைய மெயில்பாக்ஸில் நான் இதை அல்லது அதை வாங்கிவிட்டால் என்னுடைய வாழ்க்கையின் தரம் உயரும் என்ற மெயில்கள் பல வந்துகொண்டே இருக்கின்றன! அடுக்குமாடி வீட்டிலிருந்து காலில் போடும் செருப்பு வரை பலவிதமான அட்வெர்டைஸ்மெண்ட் வந்து நம்முடைய கவனத்தை ஈர்க்கின்றன. ஏதாவது அழகான ஒன்றை பார்த்துவிட்டால் அது இல்லாமல் நாம் வாழவே முடியாது என்று நினைக்கிறோம். நம்முடைய கவனத்தை திருப்பவே முடிகிறதில்லை! நம்மிடம் இருப்பவற்றை வைத்து நாம் திருப்தியடைவதே இல்லை.
அதிருப்தி என்பது இப்படிப்பட்ட ஆடம்பரமான பொருட்களை வாங்குவது அல்லது அடைவது மட்டும் அல்ல என்பதை தாவீதின் வாழ்க்கையில் நாம் தெள்ளந்தெளிவாகக் காண்கிறோம்.
எந்த ஒரு பெண்ணிடமும் திருப்தி அடையாத அவன் ஒவ்வொரு பெண்ணாகத் தன் வாழ்க்கையில் கூட்டிக்கொண்டே இருந்தான். அவன் பார்த்த, ரசித்த ஒவ்வொரு பெண்ணும் அவனுடைய மனைவி அல்லது மறுமனையாட்டி என்ற பட்டம் பெற்றார்கள். இதனால் அவன் பெற்ற பயன்? அவனுடைய சொந்தப் பிள்ளைகளின் மத்தியில் பிரச்சனைகளும் வேதனைகளும் தான்!
பெண்கள் விஷயத்தில் அதிருப்தி நிறைந்த தாவீதின் உள்ளத்தில் மிகவும் நிறைவான ஒரு குணமும் இருந்தது. தாவீதுடன் யுத்தத்திற்கு போனவர்கள் அல்லாமல் வீட்டில் இருந்தவர்களுக்கு கொள்ளையில் பங்கு இல்லை என்று அவனுடைய மனிதர் கூறியபோது, அவனோ, கர்த்தரே நமக்கு இவற்றைக் கொடுத்தர், அதை சமமாக எல்லோருக்கும் பங்கிடவேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம். எத்தனை அருமையான குணம்! நமக்கு குறைவாக கிடைக்கிறதோ அல்லது நிறைவாக கிடைக்கிறதோ அதைப்பற்றிக் கவலைப்படாமல், தமக்குள்ளவற்றைப் பகிர்ந்து கொடுக்கும் குணம்! மனதிருப்தியோடு பகிர்ந்து கொடுத்த ஒரு நல்ல உள்ளம்.
உன்னுடைய வாழ்க்கையில் திருப்தி உண்டா? உன்னுடைய அன்றாட வாழ்வில் காணப்படும் அதிருப்தி என்ன? மற்றவருடைய வாழ்வைப் பார்த்து நாமும் அப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறாயா? பணம், பொருள், புகழ் என்று அலைந்து திரிகின்றாயா? அதிருப்தியால் தாவீதின் வாழ்வில் மன வேதனைகள்தான் நிறைந்தன!
ஒருபக்கம் அதிருப்தியால் பிரச்ச்னைகளுக்குள் விழுந்த தாவீதின் வாழ்வில் மனதிருப்தியோடு பகிர்ந்து அளிக்கும் குணமும் இருந்தது. அந்த குணம்தான் அவனை ராஜமேன்மைக்கு உயர்த்தியது!
திருப்தி ஒரு ஏழையை பணக்காரனாக்கும்! அதிருப்தி ஒரு பணக்காரனை ஏழையாக்கும் என்பதை மறந்துவிடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்