2 சாமுவேல்: 6:12 தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது.
கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல், ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் வைத்து விட்டான். அங்கே கர்த்தரின் ஆசீர்வாதங்கள் அளவுக்கு அதிகமாய் அருளப்பட்டபோது அந்தக் குடும்பம் எல்லொருடைய கவனத்தையும் ஈர்த்தது!
தாவீது அந்த ஆசீர்வாதங்களைக் கண்டபோது அவனுடைய பயம் நீங்கியது. அவனும் மறுபடியும் கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு எடுத்து வர முடிவெடுத்தான்.
இன்றைய வேதாகமப் பகுதி சொல்கிறது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் மகிழ்ச்சியுடனே கொண்டுவரப்பட்டது என்று! இந்த மகிழ்ச்சிக்கு உண்மையான காரணம் யார் என்று யோசியுங்கள்! ஓபேத்ஏதோமின் சாட்சி அல்லவா? அவன் தைரியமாக கர்த்தருடைய பிரசன்னம் தன் குடும்பத்தில் தங்க இடம் கொடுத்ததால் தானே!
ஓபேத்ஏதோம் எப்படி சாட்சி பகர்ந்தான்? பிரசங்கம் பண்ணினானா? யாரையும் கட்டாயப்படுத்தினானா? அற்புதங்களை செய்தானா? தன்னுடைய வாழ்விலும், தன் குடும்பத்திலும் தேவனுடைய மகிமை ஊடுருவ செய்தான். அவனை சுற்றியுள்ளவர்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஊரெல்லாம் அதைப்பற்றி பேசத் தொடங்கினார்கள்!
அவனுடைய சாட்சி மற்றவர்களுடைய கண்களைத் திறந்தது! அவன் ஒன்றும் பெரிய பெயர் பலகையை அடித்து தன் வீட்டின் வாசலில் தொங்க வைக்கவில்லை! யாருக்கும் பறைசாற்றாமலே அவன் ஒரு தேவனுடைய மனிதன் என்று அனைவரும் அறிந்து கொண்டார்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கொண்ட எத்தனை பேர்கள் பச்சை பொய்யை கூறுவதைப் பார்க்கிறோம்! மற்றவரை ஏமாற்றுவதையும் பார்க்கிறோம்! கிறிஸ்து அல்லாத வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கிறோம்! இது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூஷிப்பது அல்லவா? இப்படிப்பட்ட சாட்சி மூலமாக யாராவது கர்த்தரிடத்தில் வர முடியுமா?
சாதாரண கிறிஸ்தவர்களை விடுங்கள்! ஊழியக்காரரகிய பலர் நான் பாஸ்டர், நான் பாஸ்டர் என்று பறைசற்றிக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய பிள்ளையே! உன்னுடைய உடையாலோ, அல்லது நடையாலோ நீ ஊழியன் என்று யாரும் அறிய வேண்டியதில்லை. உன்னுடைய சாட்சியே நீ தேவனுடைய மனிதன் என்று பறைசாற்ற வேண்டும்.
ஓபேத்ஏதோமின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல உதரணமாக அமைந்துள்ளது. ஒரு தனி மனிதனின் அமைதியான சாட்சி எப்படி ஒரு தேசத்தையே மாற்றமுடியும் என்பதற்கு அவன் ஒரு சாட்சியாக விளங்குகிறான்!
அவனுடைய சாட்சி தாவீதையும் அவனை சுற்றியிருந்த மக்களின் பயத்தையும் போக்கி, அதை மகிழ்ச்சியாக மாற்றியது. ஏனெனில் அவனும் அவனுடைய குடும்பமும் கர்த்தருடைய பிரசன்னம் அவர்களுடைய வாழ்வில் ஊடுருவ இடம் கொடுத்தனர்!
நம்முடைய சாட்சி எப்படியிருக்கிறது? நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்முடைய வாழ்வில் கர்த்தரின் மகிமையைக் காண முடிகிறதா?
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்