2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில்,
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் ( பிலி:4:4)
என்கிறார். இது பவுல் சிறையிலிருந்து எழுதிய நிருபங்களில் நான்காவது என்றும், AD 61 ல் எழுதப்பட்டது என்றும் சொல்கின்றனர். பவுல் சிறைப்பிடிக்கப் பட்டதைக் கேள்விப்பட்ட பிலிப்பி பட்டணத்தார், அவனுக்கு எப்பாபிரொதீத்துவின் மூலம் உதவி அனுப்பினர் (4:18)
இந்தத் திருச்சபை பவுலுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தனர் ஏனெனில் அவர்கள் தங்கள் அன்பை மட்டும் அல்ல தங்களுடைய தாராள உதவியினாலும் பவுலை சந்தோஷப்படுத்தினர். சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அவனுள்ளம் சந்தோஷத்தால் நிறைந்தது. அந்த இருண்ட சிறையில் இருந்து பவுல் நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சந்தோஷமாயிருக்கலாம் என்று தனக்கு உதவி வழங்கிய திருச்சபையாருக்கு நன்றியோடு பதில் அனுப்பினான்.
சிறையில் கட்டுண்டவனாய் இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களிடம் சந்தோஷமாயிருங்கள் என்றுஒருமுறை அல்ல இரண்டு முறை பவுல் கூறுவதைப் பாருங்கள்!
இன்றைய உலகில் நாம் துக்கம் நம்மை சூழும்போது, சந்தோஷமாயிருக்கிறோமா? அது எப்படி முடியும் என்றுதானே நினைக்கிறோம்! அதனால் தான் நாம் வாசித்த இன்றைய வேதாகமப்பகுதியில் உள்ள கதையை சில நாட்கள் சற்று ஆழமாகப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தக் கதையில் குடும்ப பிரச்சனைகளால் வரும் வேதனையையும், கசப்பையும் பார்க்கமுடிகிறது. இன்று நம்மில் அநேகருடைய குடும்பங்களில் காணப்படும் மனக்கசப்பை அது காட்டுகிறது.
எல்லோரும் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று ஒருவன் ஒரு ஈரக் கம்பளியை தூக்கி எறிந்தால் எப்படியிருக்கும்? ஈரக் கம்பளி குளிர் காய வைத்த நெருப்பை அணைத்துவிடுமல்லவா? அப்படித்தான் இருந்தது மீகாளின் செயல் கூட. எல்லோரும் மகிழ்ச்சியாக ஆடிப்பாடிக் கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்குள் கொண்டுவந்தபோது சவுலின் குமாரத்தியாகிய மீகாள் அந்த சந்தோஷத்தைக் கெடுக்கும்படியாக அதில் மண்ணை வீசுகிறாள்.
இது நம் வாழ்வில் நடப்பதில்லையா? எத்தனை முறை நம்முடைய குடும்பத்தில் யாரோ ஒருவர் நம்முடைய சந்தோஷத்தைக் கெடுக்க ஈரத் துணியை வீசுகிறார்கள்! அல்லது நாம் ஒருவேளை மற்றவரின் சந்தோஷத்தை நிலைக்கவிடாமல் செய்து கொண்டிருக்கலாம்.
இந்தக் கதை நம்முடைய இன்றைய வாழ்விற்கு மிகவும் பொருந்தும் ஒன்று என்பதால் அடுத்த சில நாட்கள் நாம் இதைத் தொடர்ந்து படிக்கலாம்.
ஒரு சின்ன வேண்டுகோள்! இதை மற்றவர்களும் படிக்கும்படியாக http://www.rajavinmalargal.com என்ற இந்த வெப்சைட்டை ஷேர் பண்ணுங்கள்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்