2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்
என்னுடைய சிறிய வயதில் சங்கீதம் ஒவ்வொரு அதிகாரமாக படித்து ஒப்புவித்தால் மட்டுமே ஞாயிறு அன்று மணக்க மணக்க தயாராகும் கறிக்குழம்பு சாப்பாடு கிடைக்கும். அதனால் சங்கீதங்களின் அர்த்தம் புரியாமலே மனப்பாடம் பண்ணுவேன். அப்படிப்பட்ட சங்கீதங்களில் ஒன்று முதலாம் சங்கீதம். ஆனால் இன்று அந்த முதலாம் சங்கீதம் ஒரு ஞானப்பொக்கிஷம் என்று உணரும்போது அதை சிறுவயதிலேயே மனதில் தங்க வைத்த அம்மாவுக்குதான் நன்றி சொல்லுவேன்.
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறை சொல்லும் இந்த வசனத்தில் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது என்ற அறிவுரையையும் பார்க்கிறோம். அப்படியானால் மற்றவர்கள் விஷயத்தில் கிசுகிசுப்பை பேசும் யாருடனும் அல்லது மற்றவர்களைத் தாழ்வாகவோ அல்லது மற்றவர்கள் கதையைத் திரித்து பேசும் யாருடனும் நாம் உட்கார்ந்து கதையடிக்கக்கூடாது என்பதே!
இன்றைய வேதாகமப்பகுதியில் மீகாளுடைய பரியாசமான வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தை பிரதிபலித்தது. தாவீது ராஜாவாயிருப்பதற்கு தகுதியற்றவன் என்று மறைமுகமாக கூறுகிறாள். ராஜாவாகும் தகுதி அவளுடைய குடும்பத்துக்குதான் உண்டு தாவீதுக்கு அல்ல என்ற எண்ணத்தை நக்கலாக வெளிப்படுத்துகிறாள். அவன் தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டு தம்மை இழிவு படுத்தி விட்டான் என்று பரியாசம் பேசுகிறாள்.
ஆனால் மீகாளுடைய அறிவை எட்டாத ஒரு உணமை என்னவென்றால், அது தாவீதை ராஜாவாகும்படி அபிஷேகம் பண்ணியது எந்த மனுஷனும் அல்ல தேவனாகிய கர்த்தர் தான் என்பது தான்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது தம்முடைய சீஷர்களை எவ்வாறு தெரிந்து கொண்டார் என்று நமக்குத் தெரியும். பெரிய படித்தவர்களும், பணக்காரர்களும் தெரிந்து கொள்ளப்படவில்லை! அதே சமயம் படிப்பும், பணமும் கர்த்தருடைய ஊழியத்துக்கு தேவையில்லை என்று நான் சொல்லவில்லை! ஆனால் படிப்பும், பணமும் ஒரு ஊழியக்காரனின் தகுதியாகாது .கர்த்தர் ஒருவனை தெரிந்து கொள்வாரானால் அவனுக்குத் தேவையான எல்லாத் தகுதியையையும் அவரே கொடுப்பார்.
இந்த உண்மையே மீகாளுக்குத் தெரியாமல் போய்விட்டது.
மீகாளைப் போல கிறிஸ்தவர்களாகிய நாமும் எத்தனைமுறை மற்றவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைத்து பரியாசம் பேசுகிறோம். நாம் மற்றவர்களைவிட எல்லாவிதத்திலும் சிறந்தவர்கள் என்று நினைத்து மற்றவர்களின் சிறு குறைகளையும் பெரிதாக பேசுகிறோம்.
சிந்தித்து பார்! மீகாளைப்போல பரியாசமான வார்த்தைகள் உன்னிடம் உண்டா? அல்லது பரியாசக்காரர் கிசுகிசுப்புகள் பேசும் இடத்தில் உட்காருகிறாயா?
நம்முடைய மிகக் குளிர்ந்த வார்த்தைகள் மற்றவர்களை உறைய செய்து விடும், நம்முடைய சூடான வார்த்தைகள் மற்றவர்களை சுட்டுவிடக்கூடும்! ஆகையால் வார்த்தைகளில் ஜாக்கிரதை வேண்டும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்