2 சாமுவேல்8: 1-3, 5,6 தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து……. அவன் மோவாபியரையும் முறிய அடித்து……. ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா….தாவீது அவனையும் முறிய அடித்து…….தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு…..தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.
சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி அதிகமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்னதான் காரணம் என்று யோசிக்கத் தோன்றியது.
இன்று நாம் நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் ஏவுகணைகளை பார்த்திருக்கிறோம். தாவீதின் காலத்தில் யுத்தங்கள் வானில் நடக்கவில்லை, தரையில் நடந்தது. இந்த யுத்தத்தை நடத்த அவர்கள் அநேக நாட்கள் மலைகளிலும், வனாந்தரத்திலும் செலவிட வேண்டியிருந்தது.
இந்த அதிகாரம் என் மனதை சரித்திரத்தில் தாவீது வாழ்ந்த நாட்களுக்கு இழுத்து சென்றது. என்னுடைய ஹீரோவான தாவீது சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றுத் திரும்புவதைக் கண்டு கண்கள் மலர்ந்தது. உலகத் தலைவன் போல் எல்லா நாடுகளையும் வெற்றி சிறந்தார் என் தலைவர். ஆனால் என்னுடைய தலைவனான தாவீது ஒன்றும் தனி மனித சேனை அல்ல! அவருக்கு ஒரு பெரும் உதவி இருந்தது! தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். இதுதான் உண்மை!
இதை நன்கு உணர்ந்த தாவீது தன்னுடைய சங்கீதங்களில், என் பெலனாகிய கர்த்தாவே…. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்….. என் பெலனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் என்று கர்த்தர் தனக்கு பெலனாயிருந்ததைப் பற்றி எழுதுவதைப் பார்க்கிறோம்.
தாவீதின் வெற்றிக்கு காரணம் அவன் சத்தான உணவு உண்டது அல்ல என்று அவனுக்கு நன்கு தெரியும். அவனுடைய வாட்ட சாட்டமான உடல்வாகு இல்லை என்று அவன் அறிந்திருந்தான்.
தேவனுடைய பிள்ளையே, இன்று உன்னுடைய போராட்டம் உன்னுடைய பெலத்தை மிஞ்சியது என்று பயப்படுகிறாயா?
நம்முடைய அன்றாட வாழ்வின் போராட்டங்களில் கர்த்தரே நம் பெலனாயிருப்பார்! பயப்படாதே! உன்னுடைய அரணும், கோட்டையுமான கர்த்தரை நோக்கிப்பார்! அவரிடம் அடைக்கலமாய் செல்!
தாவீதைக் காப்பாற்றி அவனுக்கு சென்ற இடமெல்லாம் வெற்றி அளித்த அதே தேவனாகிய கர்த்தர், உன்னையும் பாதுகாத்து உனக்கு வெற்றியளிப்பார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்