2 சாமுவேல்:11:1 ….தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.
வேதம் எனக்கு எடுத்துரைக்கும் உண்மைகளில் ஒன்று, கர்த்தராகிய தேவன் உண்மையை அறிந்தவர் என்று அல்ல, அவரே சத்தியம் அல்லது உண்மை என்று. சங்கீதம் 31: 5 ல் தாவீது கர்த்தரை சத்தியபரன் என்று கூறுகிறான்.
இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஏன் தேவனாகிய கர்த்தர் தாவீது, பத்சேபாள் போன்ற ஒரு கதையை தம்முடைய சத்திய வார்த்தைகளில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதற்காகத்தான். இந்த சம்பவம் நமக்கு தேவன் எவ்வளவு உண்மையானவர் என்று காட்டுகிறது. கர்த்தர் இந்த சம்பவத்தை பாலில் விழுந்த ஈயைப்போல களைந்து எறிந்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் சம்பவத்தை வெளிச்சமாக்கி உண்மையை நிலைநாட்டுகிறார்.
கர்த்தர் நமக்கு வெளிச்சமாக்கி காட்டுகிற உண்மை இதுவே! ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது! என்ன காரணமோ தெரியாது! தாவீது மட்டும் எருசலேமிலே தங்கி விட்டான்.
அவனுடைய சேனைத் தலைவன் யோவாப் மிகவும் திறமைசாலி! அவனும் இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றனர். ராஜா யுத்தத்துக்கு செல்லாதது அவனுக்கு அழகே இல்லை! ஆனாலும் தாவீது தங்கிவிட்டான். எதிரிகள் இதை அவனுடைய பெலவீனம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.
வேதம் நமக்கு ஏன் தாவீது எருசலேமிலே தங்கி விட்டான் என்று கூறாவிட்டாலும், ராஜாக்கள் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது என்று சொல்வதின்மூலம் ராஜாவின் மாறுபாடான நடத்தையை பார்க்க முடிகிறது.
தாவீது தன்னுடைய வீட்டிலேயே தங்கி விடுவதை தவறு என்று நினைக்கவில்லை. நான் போக வேண்டிய அவசியமில்லை என்றோ, அவர்கள் திறமைசாலிகள் என்றோ, நானே எப்பொழுதும் செல்ல வேண்டிய அவசியமில்லை அவர்கள் செய்யட்டும் என்றோ நினைத்திருக்கக்கூடும்.
இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றபோது தான் வீட்டில் சுகமாய் இருப்பது தவறு இல்லை என்று நினைத்தானே அங்குதான் தாவீது தன்னையே ஏமாற்றிக்கொண்டான்!
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது எப்படிப்பட்ட பிரச்சனைக்குள் நம்மை கொண்டுபோய் விடும் என்று நாம் தொடர்ந்து படிக்கலாம்.
இந்த சமயத்தில் தங்களையே ஏமாற்றிக்கொண்ட ஒரு குடும்பத்தை நினைவு படுத்துகிறேன். லோத்தும், அவன் மனைவியும், அவன் பிள்ளைகளும் தான்! சோதோமைப் பார்த்தவண்ணம் தங்கள் கூடாரங்களைப் போட்டது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்று தங்களை ஏமாற்றிக்கொண்டனர். என்ன நடந்தது! சோதோமைப் பார்த்தவாறு இருந்த அவர்கள் கூடாரம் சில நாட்களில் சோதோமுக்குள்ளே வாசம் செய்ய ஆரம்பித்தனர்.அதன் பின்னர் என்ன நடந்தது என்று நாம் அறிவோம்.சோதோமின் வாழ்வு அவர்களுக்கு சொந்தமாயிற்று.
எருசலேமிலே தாவீது தங்கியதற்கும், லோத்தின் குடும்பம் சோதோமை பார்த்தவாறு கூடாரம் அமைத்ததற்கும் எப்படி சம்பந்தம் ஆகும் என்று நினைப்பீர்களானால் நாளை தொடர்ந்து இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்! சந்திப்போம்! சிந்திப்போம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்