சங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது…
தாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும் கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.
தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! ஓய்வு எடுப்பது தவறே இல்லை. பெரிய கூட்டமாய் வந்த ஜனங்களுக்கு ஊழியம் செய்த தன்னுடைய சீஷரைப் பார்த்து , தன்னுடன் வந்து சற்று இளைப்பாறும்படி கர்த்தராகிய இயேசு கூறினார். அமைதியான ஓய்வு நேரம் அலைபாயும் உள்ளங்களை சீராக்கும். ஆனால் ஓய்வு என்ற பெயரில் நேரத்தை வீணாக்கக்கூடாது.
தாவீதுக்கு வந்த உல்லாசமான ஓய்வு அதிகமாய் சம்பாதித்ததால் கிடைத்தது. அவன் காலத்தை உபயோகப்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருந்தான்.
ஒரு சிறிய சிந்தனை!
ஒருவேளை நாம் ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நமக்குப் பரிசுத்தொகை ஒரு நாளுக்கு 86,400 ரூபாய். இது ஒவ்வொருநாளும் நம்முடைய வங்கிக்க்கணக்கில் கொடுக்கப்படும்.
இதற்கு சில விதிமுறைகளும் கொடுக்கப்படுகின்றன!
முதலில் நாம் செலவழிக்காத பணத்தை வங்கி திரும்ப எடுத்துவிடும். இதற்காக நாம் அந்தப்பணத்தை வேறொரு வங்கிக்கு மாற்ற முடியாது. அதை கட்டாயமாக செலவழிக்க வேண்டும்.
அடுத்த விதிமுறையானது, வங்கி இந்த போட்டியை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தி விட முடியும். நமக்கு எச்சரிப்பு இல்லாமலே போட்டி நின்றுவிடலாம்.
நாம் என்ன செய்வோம்? நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்வோம். நமக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பைசாவையும் நாம் உபயோகப்படுத்த முயற்சி செய்வோம். நமக்காக மட்டும் அல்ல மற்றவருக்காகவும் செலவிடுவோம்.
இந்தப்போட்டி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் கொடுக்கப்படும் உண்மாயான ஒன்றுதான்.
நம் ஒவ்வொருவருக்கும் இந்த வங்கிக் கணக்கு உள்ளது. நாம் கண் விழிக்கும் வேளை ஒவ்வொரு நாளும் 86,400 வினாடிகள் நமக்கு பரிசாக அளிக்கப்படுகிறது. நாம் படுக்கப்போகும்போது நாம் செலவழிக்காத வினாடிகள் எடுத்துக்கொள்ளப்படும். நாம் உபயோகப்படுத்தாத அத்தனை நொடிகளும் நஷ்டம்தான்!
நேற்று கொடுத்தது இன்று திரும்ப வராது!
நம்முடைய கணக்கு எப்பொழுதுவேண்டுமானாலும் முடிவடையும்! எச்சரிக்கையே இல்லாமல்!
86400 ரூபாயை விட கடவுள் நமக்கு கொடுக்கும் 86400 நொடிகள் எத்தனை மேலானவை! சிந்தித்துப்பார்!
நேரத்தை வீணாக்காதே! தாவீது வீணாய் செலவழித்த நேரம் அவனை பாவத்தில் தள்ளியது! ஜாக்கிரதை! உன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்