2 சாமுவேல் 11: 2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான்.
இன்றுமுதல் நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் ஆழமாக படிக்கப்போகிறோம்.
இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை பாருங்கள்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். (ஆதி:2:16,17)
இது ஏதோ சாதாரண எச்சரிக்கை அல்ல, ஏதோ ஒரு பழத்தை சாப்பிடக்கூடாது என்று! இது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் எச்சரிக்கை! எல்லாம் அறிந்த அறிவு என்னும் நச்சுக்கழிவு நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழித்துவிடும் என்ற எச்சரிக்கை. தேவன் தம்முடைய கிருபையால் தம்முடைய பிள்ளைகளை இந்த பொல்லாங்கிலிருந்து விலகியிருக்கும்படி ஞானமாக எச்சரித்தார்.
வேதத்தை முதலில் இருந்து என்னோடு படித்து வருபவர்களுக்குத் தெரியும், தேவன் தம்முடைய பிள்ளைகளை அழிக்க அல்ல பாதுகாக்கவே முயற்சிப்பவர் என்று. பல நேரங்களில் கர்த்தருடைய ஜனம் கீழ்ப்படியாமல் போன வேளையிலும், அவர்களை நியாயம்தீர்த்து தண்டித்து விடாமல், தகுதியே இல்லாத அவர்களுக்கு தன் கிருபையை அளித்து பாதுகாத்தார். இந்த தேவனாகிய கர்த்தரின் இரக்கத்தையும், கிருபையையும் பின்னணியாகக் கொண்டு, நாம் உல்லாசமாய் தன் வீட்டின் உப்பாரிகையின்மேல் தரித்திருந்த தாவீதின் வாழ்க்கையைப் பார்ப்போம்.
எபிரேய வழக்கத்தின்படி இந்த சாயங்கால வேளை என்பது மதிய வேளை. உண்டபின் வரும் சின்ன குட்டித்தூக்கம் முடிந்து எழும்பும் வேளை. தாவீது தன்னுடைய குட்டித் தூக்கம் முடித்து, தன் அரண்மனையின் உப்பாரிகைக்கு செல்கிறான். ஒருவேளை அது எருசலேமின் மிக உயர்ந்த உப்பாரிகையாக இருந்திருக்கலாம். அங்கிருந்து அவன் ஒரு பெண் குளிப்பதைப் பார்க்கிறான்.
ஒருநிமிஷம்! தாவீது மத்தியான வேளையில் தூங்கியது தவறா? அவன் அங்கிருந்து தன்னுடைய அழகிய மாளிகையின் உச்சிக்கு சென்றது தவறா? அங்கே ஒரு பெண் குளிப்பது அவன் கண்களில் தற்செயலாய்ப் பட்டது தவறா? இல்லவே இல்லை என்று நான் சொல்கிறேஏன்!
எப்படி ஆதாமும் ஏவாளும் மறுக்கப்பட்ட கனியைக் கண்டதும் அந்த இடத்திலிருந்து ஓடவில்லையோ அதே மாதிரி தாவீதும் ஒரு பெண் குளிப்பதைக் கண்டதும் அங்கிருந்து இறங்கி ஓடி வீட்டுக்குள் செல்லாததுதான் தவறு!
நாம் சோதனையை ஊக்குவிப்பதால்தான் அதை எதிர்க்கவோ வெல்லவோ முடியாமல் திணறுகிறோம். சோதனை என்று அறிந்தவுடன் அதிலிருந்து ஓட வேண்டாமா?
பாவம் ஒரு நச்சு போன்றது! அது ஒரே ஒரு துளி போதும் நம்மை அழித்து விடும்.
யாக்கோபு 4: 7 கூறுவதுபோல், ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.
தேவனுடைய எச்சரிக்கையை மீறி தவறான பாதையில் உன்னை இழுக்கும் ஏதாவது பாவத்தில் நீ தரித்திருக்கிறாயா? கண்ணியில் மாட்டி விடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
(for contact premasunderraj@gmail.com)