2 சாமுவேல் 11:2 அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.
ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது.
தாவீதின் அரசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை.
ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று நான் நினைத்தது உண்டு. இந்தக் கேள்வி எனக்கு நாம் எப்படி ஒருவரின் வெளியரங்கத்தைப் பார்த்து உடனே அவரைப் பற்றிய தீர்ப்பை நம் மனதில் எழுதுகிறோம் என்று நினைப்பூட்டியது.
என்னுடைய பள்ளியின் இறுதியாண்டுகளில் நான் ஆடம்பரமாய் உடை உடுத்தியதோ அல்லது நவீனமாய் வாழ்ந்ததோ இல்லை. என்னுடைய ஆடைகள் எனக்குத் தெரிந்தவரை அம்மா தைத்துக் கொடுத்தவை தான். ஒருநாளும் ரெடிமேட் எதுவும் வாங்கியதில்லை. தலை முடி நீளமாக இருந்ததால் நன்றாக பின்னி ரிபன் கட்டிவிடுவேன். சினிமாவுக்கோ அல்லது பார்க்குகளுக்கோ நண்பர்களோடு சென்றதில்லை. நான் பார்க்க அழகாக இல்லை என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன், ஆனால் ஆடம்பரமாய் அலைந்த கூட்டத்தில் நான் சேர்ந்ததில்லை. எனக்கென்று ஒருசில நல்ல தோழிகள் இருந்தனர். நாங்கள் ஒரு தனிப்பட்டவர்களாகவே இருந்தோம்.
சில வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் என்னோடு படித்த ஒரு நண்பனைப் பார்த்தேன். என்னைப்பார்த்தவுடன், ஐயோ அடையாளமே தெரியவில்லை! இப்படி மாறிவிட்டாய் என்றான். எப்படி மாறிவிட்டேன் என்று எனக்கு புரியவில்லை. கட்டுப்பாடான என் உள்ளான வாழ்க்கை என்றுமே மாறியதில்லை! சென்னையை விட்டு வெளியே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் உடை, தலை பின்னல் இவை சற்று மாறியிருந்தது. என்னுடைய வெளிப்புற மாறுதல் அவன் கண்களில் பளிச்சென்று பட்டது போலும்.
இதில் வருந்தக்கூடிய காரியம் என்னவென்றால், தாவீதைப் போலத்தானே நாமும் வெளிப்புறமாய் சற்று அழகாக ஏதாவது தென்பட்டால் நம் கண்களை அதை விட்டு அகற்றவே மாட்டோம்.
ஏவாள் பார்த்த கனி பார்வைக்கு அழகாக இருந்தது! அவள் அதை இச்சித்தாள்!
யோசுவா 7: 20 -21 ல் ஆகானின் பார்வைக்கு ஒரு பாபிலோனிய சால்வையும், வெள்ளிச்சேர்க்கையும், பொன்பாளமும் அழகாய்த் தோன்றின! அவன் அவைகளை இச்சித்தான்.
தாவீது தன் அரமனை உப்பாரிகையின் மேலிருந்து பார்த்த பெண் கண்களுக்கு அழகாக இருந்தாள். அவன் அவளை இச்சித்தான்!
இன்று உன் பார்வையில் எது அல்லது யார் அழகாய்த் தோன்றுகிறார்கள்? யாரை இச்சிக்கிறாய்? வெளிப்புற தோற்றம் மாயையாக இருக்கலாம்! ஏமாந்துவிடாதே! இதுதான் தாவீதைத் தவறி விழ செய்தது! பின்னர் சங்கீதங்களை எழுதும்போது, வெளிப்புறமாய்த் தன் கண்களை அலைய விட்ட முட்டாள்தனத்தைப் பற்றி அடிக்கடி அவன் எழுதினான்.
நீயும் முட்டாளாய் இருந்துவிடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com