2 சாமுவேல் 11: 18 – 21 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி …… நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால் உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
தாவீது, பத்சேபாள், உரியா என்னும் முக்கோணத்தில் கவனிக்கப்படாமல் போகும் பகுதி இன்றைய வேதபகுதி என்று நினைக்கிறேன். இந்த வசனங்கள் நமக்கு இஸ்ரவேல் அம்மோனியரோடு செய்த யுத்தத்தை விளக்குகிறது. இதுவரை இஸ்ரவேலின் சேவகர் நன்றாகத்தான் யுத்தம் செய்து வந்தனர். ஆனால் அவர்கள் அலங்கம் உள்ள அம்மோனியரின் பட்டணத்தின் அலங்கத்தை நெருங்கியபோது தான் பிரச்சனை வந்தது.
நம்முடைய நாட்டின் சரித்திரக் கதைகளில் கூட மலையின் மேல் கட்டப்பட்ட கோட்டைகளிலிருந்து அம்புகளை எய்தோ, கற்களை உருட்டியோ எதிரிகளைத் தாக்குவதைப் பற்றி படித்திருக்கிறோம் அல்லவா?
அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான இடத்தில் உரியாவை நிறுத்த திட்டமிட்ட யோவாப் அம்மோனியரின் பட்டணத்தின் அலங்கத்தை நெருங்க தன்னுடைய சேவகருக்குக் கட்டளையிட்டான். அதன்பின்னர் உரியாவை கொலை செய்யும் எண்ணத்தோடு அலங்கத்தை நெருங்க செய்தது மட்டுமல்லாமல், உரியா சற்றும் எதிர்பாராத வண்ணம் மற்ற சேவகரை பின்வாங்கவும் செய்தான். தன்னை சுற்றி நடப்பதை அறியாதிருந்த உரியா அடிக்கப்படுகிற ஆட்டைப்போல அலங்கத்தின் அருகேயே யுத்தம் செய்து கொண்டிருந்தான்.
உரியா யுத்தத்தில் மடிந்துவிட்டான் என்று யோவாபுக்கு எப்படித் தெரியும். அலங்கத்தின் அருகே போய் ஒவ்வொரு சரீரமாக உருட்டியாப் பார்த்தான்? ராஜாவின் தந்திரமான கொலைத் திட்டம் நிறைவேறிவிட்டதா என்று பார்க்க யோவாப் நிச்சயமாக வெட்டுண்ட உடல்களைப் பார்க்க சென்றிருப்பான்.
இந்தக் கொலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டது உரியா மட்டும் அல்ல, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அநேகரை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அலங்கத்தின் அருகே போன அத்தனைபேரின் உயிரும் ஆபத்தில் இருந்தது என்று அறிந்தும் அப்படி ஒரு திட்டத்தை வகுத்தது எவ்வளவு தவறு! இதை யுத்தத்தில் நடக்கும் ஒரு சாதாரண காரியம்தானே என்று எடுத்துக்கொள்ள முடியுமா?
கானானியருக்கும், இஸ்ரவேலருக்கும் வித்தியாசம் வேண்டாமா? கானானியர் தேவனை வணங்காதவர்கள், இஸ்ரவேலரோ கர்த்தரையே தேவனாகக் கொண்டவர்கள். உரியாவுடன் சேர்த்து செய்யப்பட்ட இந்த மொத்த கொலையும் கர்த்தருக்கு அவமானத்தை உண்டு பண்ணுவதல்லவா?
இந்தக்கொலையை கர்த்தர் எப்படி பார்த்தார்? ஒரு யுத்தத்தில் நடக்கும் மரணம் போலவா? இல்லவே இல்லை! கர்த்தர் அவர்களை வெட்டுண்டு கொலை செய்யப்பட்டவர்களாகவே பார்த்தார்! அதுவும் அவர்கள் ராஜாவாகிய தாவீதின் கையினால்!
என்னுடைய ஏதாவது செயல் இன்று என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கிறதா என்று நம்மைக் கேட்போமா? யாரோ ஒருவரை பழிவாங்க எண்ணி எத்தனை பேரை வருத்தப்படுத்தியிருக்கிறோம். உன்னுடைய மனைவியை நீ வெறுப்பதால் அவளுடைய மொத்த குடும்பமும் பாதிக்கப்படலாம் அல்லவா? உன்னையே நம்பியிருக்கும் ஒருவர் மீது நீ கக்கும் நெருப்பு சுற்றியுள்ள எத்தனை பேரை பட்சிக்கிறது என்று அறிவாயா?
நாம் இன்று எதை செய்தாலும் அது நம்மை சுற்றியுள்ளவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்க ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்