2 சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன் என்றான்.
இந்த தியானத்தைத் தொடர ஒவ்வொருநாளும் கர்த்தர் அருளும் கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரம்!
யூதாவையும் இஸ்ரவேலையும் வல்லமையோடு ஆண்ட தாவீது தன்னுடைய மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போதுதான், தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனிடம் வந்து, அவனும் ஒரு சாதாரண மனிதன் தான், ஒரு பாவிதான் என்று நினைவூட்டினான்!
தாவீதுக்கு தன்னுடைய நிலையை உணர ஒரு கணம் கூட ஆகவில்லை! நம்முடைய இருதயத்தில் கொளுந்து விட்டெரியும் வார்த்தைகளில் அவன், நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான் என்று பார்க்கிறோம்.
நாம் கடந்த நாட்களில் படித்தது போல கர்த்தர் அவனிடம் நீ ஏன் என்னை அசட்டை பண்ணினாய் என்று கேட்டபோது, தான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்ததை உணர்ந்தான். அவன் தன்னை உருவாக்கின தேவனை துக்கப்படுத்தியதையும் உணர்ந்தான்.
நமக்கும் இது ஒரு முக்கியமான பாடம் என்று நினைக்கிறேன். நம்முடைய செயல்கள் நம்மை சுற்றியுள்ளவர்களை மாத்திரம் பாதிப்பது போலத் தோன்றினாலும், அவை நம்முடைய பரமத் தகப்பனையே அதிகமாக பாதிக்கின்றன. இந்த உண்மையை நாம் அறிந்தது உண்டா?
நம்முடைய ஒவ்வொரு பாவமும் நம்முடைய இருதயத்தில் நாம் தேவனுக்கு விரோதமாய்ப் போராடுவது போலத்தான். தேவனாகியக் கர்த்தரைப் போன்ற இருதயம் இல்லாமல், பரலோக தேவனின் சித்தத்தை இந்த பூமியில் நிறைவேற்றாமல், தாவீது தன்னையே இந்த பூலோகத்தின் ராஜாவாகவும், ஆளுகை செய்பவனாகவும் நினைத்து , தன்னுடைய இஷ்டம் போல நடந்து கொண்டான்.
இதைப்படிக்கும்போது, அன்று ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் என்ற தேவனால் அருமையாக படைக்கப்பட்ட, தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்த அந்த இருவர், நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே….. நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் ( ஆதி:3:5) என்ற வார்த்தைகளை நம்பி, அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே ஆளுகை செய்ய முடிவு எடுத்தார்களே அந்தக் கொடூரம்தான் ஞாபகம் வந்தது. தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான இருதயம் தான் தேவனுடைய ஆளுகையை புறம்பேத் தள்ளும்.
பாவத்தில் சிறிய பாவம், பெரிய பாவம் என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏனெனில் நாம் விரோதிக்க சிறிய கடவுள், பெரிய கடவுள் என்று யாரும் இல்லை! நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் நம்மை உருவாக்கி , ஆளுகை செய்யும் தேவனுக்கு விரோதமானதுதான்!
தாவீது தன்னுடைய பாவத்தை உணர்ந்தவுடன் தான் தன்னை ஆளுகை செய்த தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக தான் பாவம் செய்ததை உணர்ந்தான்! தான் ஒவ்வொருநாளும் யாருடைய இருதயத்தை பிரியப்படுத்த விரும்பினானோ அந்த தேவனாகிய கர்த்தருடைய இருதயத்தை தான் சுக்கு நூறாக உடைத்து விட்டதை உணர்ந்தான்!
இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? கர்த்தருடைய இருதயத்தை பிரியப்படுத்தும்படி நடந்து கொள்கிறோமா அல்லது அவருடைய இருதயத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கிறோமா?
உன்னுடைய ஒவ்வொரு பாவமும் தேவனுடைய முகத்தில் ஓங்கி அறைவது போலத்தான்! தாவீதைப் போல உன் நிலைமையை உணர்ந்து மனந்திரும்பு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்