2 சாமுவேல் 12: 21- 23 .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
தாவீதின் இல்லத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இந்த வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம்.
உரியாவின் மனைவியாகிய பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற பிள்ளை சாகும் என்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் கூறி செல்கிறார். இந்த செய்தி தாவீதின் உள்ளத்தையும், பத்சேபாளின் உள்ளத்தையும் நொறுக்கிற்று.
தாவீது தரையிலே கிடந்து உபவாசித்து ஜெபித்தான். அவனுடைய ஒவ்வொரு அணுவும் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடிற்று. ஆனால் குழந்தை இறந்து போயிற்று. குழந்தை இறந்தவுடன் அரண்மனை ஊழியர் அந்த செய்தியை அவனிடம் சொல்ல பயந்தனர். அதை இரகசியமாக பேசிக்கொண்டனர். ஆனால் தாவீது என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து விட்டான். ஒருவேளை அந்தக் குழந்தையின் அழுகுரல் நின்றுவிட்டதோ என்னவோ? அல்லது பத்சேபாளின் அழுகுரல் அவன் செவிகளை எட்டியதோ என்னவோ?
ஆனால் எல்லா ஊழியரும் ஆச்சரியப்படும் வகையில் தாவீது நடந்து கொள்ள ஆரம்பித்தான். பிள்ளை இறந்த செய்தி தெரிந்தவுடனே அவன் எழுந்து, எண்ணெய் பூசி, கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய் பணிந்து கொண்டு, தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.
தாவீதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கேள்வி கேட்டவர்களிடம், தாவீது தேவனுடைய சித்தத்தைத் தான் ஏற்றுக்கொளவதாகக் கூறினான். ஒவ்வொரு நிமிடமும் நம்மை விட்டு கடந்து போகிறது! கடந்த காலத்தை நாம் திரும்பக் கொண்டுவர முடியாது, அழுவதால் அதை மாற்றவும் முடியாது என்பதை உணர்ந்தான் தாவீது.
நாம் தாவீது கூறிய இந்த வார்த்தைகளை சற்று சிந்திப்போம். தங்களுடைய குழந்தையை இழந்த மன வேதனையில் தாவீதும் பத்சேபாளும் இருந்தபோது, தாவீது தன்னுடைய குழந்தை இனித் திரும்ப வராது என்றும், ஆனால் அவன் அதினிடத்துக்கு போகும் காலம் வரும் என்றும் கூறுகிறான்.
மரணம் நம்மை நம்முடைய அன்பானவர்களிடமிருந்து பிரிக்கும்போது நாம் எவ்வளவு துடிக்கிறோம். இதை நான் எழுதவேண்டும் என்று அவசியமே இல்லை. அனுபவப்பட்ட ஒவ்வொருவருக்கும் அந்த வேதனைத் தெரியும். அதுவும் எதிர்பார்க்காத வேளையில் ஒருவரை இழக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கிறோம். ஆனால் தாவீது தன்னுடைய இழப்புக்கு பின்னர் புதிதாக வாழ ஆரம்பிக்கிறான்! தானும் ஒருநாள் அந்தக் குழந்தையுடன் பரலோகத்தில் சேர முடியும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது!
நாம் இந்த பூமியில் வாழும் வரை நமக்கு அன்பானவர்களின் மரணம் என்பது நமக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.ஆனால் நாமும் தாவீதைப்போல் கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, மரித்தவர்களுக்காக அல்ல, உயிரோடு இருப்பவர்களுக்காக வாழ வேண்டும்! நாம் ஒருநாள் பரலோகத்தில் சந்திப்போம் என்ற நிச்சயமே நம்மை புதிய வாழ்க்கைக்குள் நடத்தும்!
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும்படி கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். இது நம்முடைய வாழ்க்கை ஒளிப்பிரகாசமாய் மின்னும்போது மட்டும் அல்ல, நம்முடைய வாழ்க்கை இருள் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் போதும் நாம் செய்ய வேண்டிய ஜெபம்!
தாவீது தன்னுடைய குழந்தை இறந்த துக்க செய்தி கேட்டதும் எழுந்து, தேவனைப் பணிந்து கொண்டு, உபவாசத்தை முடித்து உணவு உண்ண ஆரம்பித்தான்! ஏனெனில் பரலோக வாழ்க்கையில் தன்னுடைய குழந்தையைக் காண்போம் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.
அந்த நிச்சயம் உங்களுக்கு உண்டா? அப்படி உண்டு என்றால் மரித்தவருக்காக துக்கித்து அல்ல, உங்களை சுற்றியிருப்பவருக்காக உங்கள் வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்