1 இராஜாக்கள் 1:15 அப்படியெ பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவினிடத்தில் போனாள், ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்…
1 இராஜாக்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த புத்தகம் பெலவீனமாகவும், வயது முதிர்தவராகவும் இருந்த தாவீது ராஜாவுடன் ஆரம்பிக்கிறது. இந்த வேளையில் அவனுடைய குடும்பத்தில் யார் அடுத்ததாக சிங்காசனம் ஏறுவது என்ற சண்டைகள் ஆரம்பித்து விட்டன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தகப்பன் தாவீதாக இருந்தாலும் அவர்களுடைய தாய் வேறு என்று நமக்குத் தெரியும்.
இந்த வேளையில் சாலொமோனின் தாயாகிய பத்சேபாள், தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நாத்தானுடன் இணைந்து , அவளுடைய குமாரனாகிய சாலொமோன் தாவீதுக்கு அடுத்தபடியாக சிங்காசனம் ஏறுவான் என்ற தாவீதின் வாக்கை அவனுக்கு நினைப்பூட்ட வருகிறாள்.
இங்கு சாலொமோனைப் பற்றிய ஒரு உண்மை நேரிடையாக சாலொமோனின் வாழ்க்கையில் மட்டும் அல்ல, உன்னுடைய வாழ்வுக்கும் எனக்கும் கூட பொருந்தும். 2 சாமுவேல் 12:24-25 ல் பார்ப்போமானால், …. அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டான். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்.
தேவனாகிய கர்த்தர்தாமே சாலொமோனைத் தெரிந்து கொண்டிருந்தார். தாவீதுக்கு பின்னர் சாலொமோன் ராஜாவாகும்படியாக பரம பிதாவாகிய தேவன் திருவுளம் பற்றியிருந்தார். இதைப் பற்றி இன்னும் படிப்போமானால் தேவன் அவனுக்கு தம்முடைய தீர்க்கதரிசியான நாத்தான் மூலமாக யெதிதியா என்ற பெயரைக் கொடுத்திருந்தார். தேவனுக்கு பிரியமானவன் என்பதே அதின் அர்த்தம்.
ஏசாயா 46: 3-4 ல் …. தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களை தாங்கினேன்.
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்;
என்று நமக்கும் தேவன் வாக்குதத்தம் செய்திருப்பதைப் பார்க்கிறோம். தேவன் சாலொமோனைத் தனக்கு பிரியமானவன் என்று அழைத்ததுபோலவே உன்னையும் என்னையும் அழைக்கிறார். நீயும் நானும் கூட பரம பிதாவிற்கு பிரியமானவர்கள்.
இன்று நீ உன்னைப்பற்றிய எந்தவிதமான எண்ணம் கொண்டிருந்தாலும் சரி, ஒன்றை மட்டும் மறந்து விடாதே! நீ தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றவன்! நீ உருவாக்கப்படும்போதே தேவன் உன்னைக் கண்டார்! உன்னை நேசித்தார்!
தேவன் உன்னைப் பார்க்கும்போது நீ மாத்திரம்தான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது போல உன்னை நேசத்துடன் காண்பார்! அவருடைய அன்பு அவருடைய வல்லமைக்கு நிகரானது!
உன்னுடைய விலை மதிப்பை நீ அறிவாயா! நீ தேவனுடைய பார்வையில் விசேஷமானவன் என்பதை எந்த சூழ்நிலையிலும் மறந்து விடாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்