1 இராஜாக்கள் 10:1 கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக,
இன்றிலிருந்து ஒரு பத்து நாட்கள் நாம், மிகவும் பிரசித்தமான இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனை நேரில் பார்க்க புறப்பட்டு வந்த வெளிநாட்டு ராணியைப் பற்றி படிக்கப் போகிறோம்.
இந்த ராணியின் வாழ்க்கை மூலமாக தேவன் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கப் போகிறார் என்று பார்க்கும் முன்னர் நான் படித்த, அறிந்து கொண்ட சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன். சரித்திர ஆசிரியர்களும், வேதாகம வல்லுநர்களும் இந்த ராணிக்கு, சேபாவின் ராஜஸ்திரீ என்று பெயர் கொடுத்த சேபாவைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம்.
சேபா நாடு அரேபியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்தது. அந்த நாட்டின் இன்றைய பெயர் ஏமென். இந்த நாடு இருந்த பகுதி அரேபியாவின் பாலைவனம் அல்ல, மலைகளும், நல்ல நிலங்களும் நிறைந்த ஒரு நாடு அது.
இந்த நாட்டின் முக்கிய வருமானம் வாசனை திரவியங்கள் மூலமாய் வந்தது என்றும் பார்க்கிறோம். அவள் சாலொமோனுக்கு கொண்டு வந்த பரிசுப் பொருட்கள் நமக்கு அந்த நாட்டில் மிகுதியாய்க் கிடந்த செல்வத்தைக் காட்டுகிறது.
கிறிஸ்துவுக்கு முன்னர் 10 வது நூற்றாண்டில் இந்த ராஜஸ்திரீ, கர்த்தருடைய நாமத்தையும், அவர் சாலொமோனுக்கு அளித்த ஞானத்தையும், இஸ்ரவேல் நாட்டின் செழிப்பையும் பற்றி கேட்டறிந்து அதை நேரில் காணும்படி, பொன்னையும், விசேஷித்த கற்களையும், நறுமணப் பொருட்களையும் சாலொமோனுக்கு பரிசாக அளிக்க , எருசலேம் நகருக்கு கொண்டு வருவதைப் பார்க்கிறோம்.
இந்த இடத்தில் நான் தேவன் நமக்குக் கற்றுக் கொடுக்கும் முதல் பாடத்தை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
தாவீது ராஜாவின் வாழ்வில் வெற்றி தோல்விகள் இருந்தாலும், அவன் வாழ்நாள் முழுவதும் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தாவீதுடைய தேவனாக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்ற ஆவலே அவனுடைய வாஞ்சையாகவும் இருந்தது. ஆனால் வேதம் சொல்கிறது தாவீதின் கரங்களில் இரத்தக் கறை இருந்ததால், அவன் அநேக யுத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், தேவன் அந்த வேலையை சாலொமோனுக்கு கொடுத்தார் என்று.
ஆலயத்தைக் கட்டுவதே சாலொமோனின் ஒரே நோக்கமாக, ஒரே குறிக்கோளாக, இருந்தது என்று சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, சாலோமோனின் ஞானம் மட்டும் அல்ல அதோடு இணைந்திருந்த கர்த்தருடைய நாமம் அவளை அந்த தேசத்துக்கு வரச் செய்தது என்று.
இன்று தேவனாகிய கர்த்தரோடு என்னுடைய இணைப்பையும், அவரால் நான் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களையும் பற்றிக் கேள்விப்படுகிற யாராவது அந்த தேவனைத் தானும் காண வேண்டுமென்று ஆசைப்பட்டதுண்டா என்று யோசித்துப் பார்த்தேன்.
அந்த ராஜஸ்திரீயை சாலொமோன் புறக்கணித்திருக்கலாம், அவள் ஒரு புறஜாதி என்று அலட்சியப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அவளை தாவீதின் நகரத்துக்குள் அன்புடன் வரவழைத்தான்.
நான் எத்தனைமுறை என்னை சுற்றியுள்ளவர்களை, அந்நியரை, புறமதத்தினரை என்னுடைய இஷ்டம்போல நியாயந்தீர்த்து அலட்சியப் படுத்துகிறேன் என்று சிந்தித்துப் பார்த்தேன்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! நாம் மற்றவர்களை நம்முடைய பார்வையில் எப்படித் தோன்றுகிறதோ அப்படி நியாயந்தீர்க்காமல், தேவனுடைய அன்பு நம்முடைய வாழ்வின் மூலம் பிரதிபலிக்கும்படி நடந்து கொள்வோமானால் இந்த அந்நிய தேசத்து ராஜஸ்திரீயைப் போல அனைவரை தேவனுடைய நாமத்தண்டை நாம் கொண்டு வர முடியும். உண்மைதானே!
தேவன் தாமே இந்த வார்த்தைகளின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்