1 இராஜாக்கள் 10:13 ராஜாவாகிய சாலொமோந்தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டு கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்.
இளம் சாலொமோனின் ஞானத்தையும், செல்வ செழிப்பையும் பற்றி அறிந்த சேபாவின் ராஜஸ்திரீ, அதை அவனுக்கு வழங்கியவர் சாலொமோனுடைய தேவன் என்பதையும் கேள்விப்பட்டு, தான் கேட்டது உண்மையா என்று அறியும்படியாய் த்ன்னுடைய தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தாள் என்று பார்த்தோம்.
அநேக ஒட்டகங்களில் பரிசுப்பொருட்களைத் தாங்கியவளாய்,அவள் கடினமான பாலைவனத்தை கடந்து வந்தாள். அவள் அமைதியாய் அந்த தேசத்தை சுற்றிப்பார்க்க வரவில்லை. அவள் சாலொமோனிடம் பேசவும், அவளுடைய கேள்விகளுக்கு விடைக்ளைப் பெறவும் வந்தாள். வேதம் கூறுகிறது அவளுக்கு ஒன்றும் மறைக்கப்படவில்லை.
கடைசியாக இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, ராஜா அவள் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான் என்று. அவள் தன்னுடைய இருதயமும், நினைவுகளும் நிறைந்தவளாய் மட்டும் அல்ல கைகளும் பரிசுகளால் நிறைந்தவளாய், தன்னுடைய நாட்டை நோக்கி செல்கிறாள்.
எத்தனை அருமையான பாடத்தை இந்தப் பெண்ணின் வாழ்விலிருந்து இன்று நாம் கற்றுக் கொள்கிறோம்.
கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கூறிய விதமாக, எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், என்னிடத்தில் கேளுங்கள், என்னிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் கிறிஸ்துவணடை வந்து, கேட்டுப் பெற்றுக் கொள்வது அவசியமாகிறது.
அன்பின் சகோதர சகோதரிகளே!
நாம் இயேசுவண்டை கொடுக்க அல்ல, பெற்றுக்கொள்ளவே வருகிறோம்.
நாம் இயேசுவண்டை உதவி பெற அல்ல, இரட்சிக்கப் படவே வருகிறோம்
நாம் இயேசுவண்டை நலம் பெற அல்ல, (நித்திய) ஜீவனைப் பெறவே வருகிறோம்
கர்த்தராகிய இயேசுவிடம் வெறுமையாய் வா, அவர் தம்முடைய ஈவுகளால் உன்னை நிரப்புவார்! உன் பாத்திரம் நிரம்பும்படியாய் நிரப்புவார்! ஸ்தோத்திரம் ஆண்டவரே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்