1 இராஜாக்கள் 14:1-3 ,5,17 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்…… பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
கர்த்தர் அகியாவினிடத்தில்; இதோ யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள், நீ அவளுக்கு இன்ன பிரகாரமாகச் சொல்ல வேண்டும்……அபொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள், அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.
இந்த தியானத்துக்காக ஆயத்தப்பட்ட போது எங்கோ படித்த ஒரு வாசகம் நினைவில் வந்தது. ஒவ்வொருநாளும் நாம் நன்மையை அல்லது தீமையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் நமக்கு பல சாதாரணமுறைகளில் வருகிறது என்பதே அது. ஆம்! எவ்வளவு உண்மையான ஒரு அறிக்கை என்று நினைத்தேன்.
இந்த தியானத்தை தினமும் வாசிக்கும் சகோதரர்கள் என்னை இன்று பொறுத்துக் கொள்ளுங்கள்! இன்று நான் நம்முடைய சகோதரிகளுக்கு திருமதி யெரொபெயாம் என்ன கற்றுக்கொடுக்கிறார் என்று பார்க்கப்போகிறேன்.
இராஜாக்களின் காலத்தில் பெண்கள் பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கும் இடத்தில் மட்டுமே இருந்தனர் என்று நமக்குத் தெரியும். அதனால் அவர்களுக்கு எதையும் தேர்வு செய்யும் உரிமை இல்லை என்று முடிவுகட்ட வேண்டாம். நாம் ரூத், நகோமி பற்றி படித்திருக்கிறோம். பின்னர் வஸ்தி ராணி, எஸ்தர் ராணி போன்றவர்களை நாம்வேதத்தில் பார்க்கிறோம். அவர்களுடைய வார்த்தைகள் அவர்களுடைய வாழ்வை மட்டுமல்ல, பின்னர் அவர்களோடு தொடர்பில் இருந்த மற்றவர்களையும் மாற்றியது.
நம் திருமதி யெரொபெயாம் ஒருவேளை பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் செய்திருப்பாள். ஒரு நல்ல வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த திருமணம்.அதற்கு பலனாக அவள் யெரொபெயாமின் சிங்காசனத்தில் அமர ஒரு வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை சற்று உற்றுப் பார்ப்போம்.
1 திருமதி யெரொபெயாம் தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவள் என்று நமக்குத் தெரியாது ஏனெனில் அவளுடைய அடையாளம் ராஜாவோடு கட்டப்பட்டிருந்தது.
2.ராஜாவுடைய கோரிக்கையின்படி நடந்தாள்.
3. அவள் பொய் சொல்லி சில காரியங்களை அறிய வேண்டியதிருந்தாலும் அவள் அப்படியே செய்தாள்.
4. தன் கணவனை விட கடவுளுக்கு எந்த மரியாதையும் அவளுக்கு இல்லை.
5. கடைசியில் அவள் கணவனுடைய நடத்தையின் பலன் அவள் குமாரனின் உயிரையேக் குடித்துவிட்டது என்று அறிந்து கொண்டாள்.
பல நேரங்களில் பெண்களாகிய நாம் நம்முடைய மதிப்பை விட்டுக்கொடுத்து வாழவேண்டியதிருக்கிறது. அவள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை விசுவாசித்தாளா இல்லையா என்று தெரியாது. அவள் ஒரு எகிப்தியப் பெண்ணாகக்கூட இருந்திருக்கலாம்., ஏனெனில் யெரொபெயாம் வாலிபகாலத்தில் எகிப்தில் வாழ்ந்தான். பெயர் கொடுக்கப்படாத இந்தப் பெண்ணின் வாழ்க்கை தன்னை பொய் சொல்லி ஏமாற்றச் சொன்ன கணவனையே சுற்றி இருந்தது.
இயற்கையைப் பாருங்கள்! இரண்டு மரங்கள் ஒரே மாதிரி இருக்குமா? நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தன்மைகள் உன்டு! நான் என் கணவரின் மனைவிதான் ஆனால் நான் நானேதான்! என்னுடைய தனித்தன்மையை யாரும் என்னைவிட்டு அகற்ற முடியாது.
திருமதி யெரொபெயாமுடைய நடத்தையைக் கவனியுங்கள். அவளுடைய நடத்தையில் களங்கம் இல்லாதிருந்தால் அவள் இவ்வளவுதூரம் மாறுவேஷம் அணிந்து சென்றிருக்கமாட்டாள். அவள் தன்னுடைய கணவன் விரும்பிய செய்தியை அறிந்து வர தேவனுடைய தீர்க்கதரிசியிடமே மாறுவேடத்தில் சென்று பொய் சொல்லி ஏமாற்ற துணிந்துவிட்டாள். அவள் ஒரு வயதான, பார்வை இழந்த தேவனுடைய மனிதனை ஏமாற்றத் துணிந்தது , தேவனையே மதிக்கவில்லை என்றுதானே காட்டுகிறது.
அப்போஸ்தலனாகிய யாக்கோபு நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளைப் பற்றி கூறுவதைப் பாருங்கள்!
யாக்கோபு 4:4 ..உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாகிறான்.
என்ன பரிதாபமான நிலைமை நம்முடைய திருமதி யெரொபெயாமுக்கு! தேவனுடைய மனிதன் அவள் அந்த வாசலில் கால் வைத்தவுடனே ஒரு அதிர்ச்சியான செய்தியக் கொடுக்கிறான். அவள் தன் வீட்டுக்கு வந்து சேரும்பொழுது அவளுடைய குமாரன் மரித்துப் போனான். இந்தப் பெண், ஒரு தாய், தன்னுடைய கணவனின் தவறான வழியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டதால் இந்த விபரீதம் நடந்தது.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் நாம் மட்டுமே கணக்குக் கொடுக்க வேண்டியதிருக்கும். அந்தப்பழியை உன்னைத் தூண்டுவித்தவர்கள் மேல் போட முடியாது. இன்று நீ தேவனை விட்டு விட்டு உன் கணவனின் வழியில் சென்று கொண்டிருப்பாயானால் மறுமையிலும் நீ தேவனை இழந்து போவாய்!
தவறான முடிவுகள் எடுக்காதே! உன்னுடைய குடும்பத்தார் எப்படி வாழ்ந்தாலும் சரி, உன் வழி தனித்து இருக்கட்டும்! ஏனெனில் உன் நடத்தைக்கு நீ மட்டுமே பொறுப்பாளி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்