யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.
இந்த வருடத்தின் கடைசி மாதத்தின் முதல்நாளைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். எத்தனையோபேருக்கு கிடக்காத சிலாக்கியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இந்தமாதம் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் மாதம். நாம் எல்லோரும் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மாதம்.
இந்தமாதம் பிறந்தவுடன் கிறிஸ்மஸ் அலங்காரங்களும் வெளியே வந்துவிடும். எனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை நாட்டிலிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட். அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருந்ததால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒருமுறை கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான் அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை மாத்திரம் தனியே எடுத்து பத்திரமாக வைத்தேன். அடுத்த வருடம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் செய்தபோது எல்லா இடத்திலும் தேடியாயிற்று ஆனால் என்னுடைய அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் மாத்திரம் கிடைக்கவேயில்லை. நான் அதை ‘பத்திரமாக’ எடுத்து வைத்த இடத்தை மறந்து விட்டேன். இப்பொழுதெல்லாம் எதையும் வைக்கிற இடத்தை மறந்துவிட்டு தேடுவதே வழக்கமாகி விட்டதால் எதையாவது ‘பத்திரமாக’ எடுத்து வைப்பது என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது! அந்த வருடம் கிறிஸ்மஸ் முடிந்த பின்னர்தான் அந்த அழகிய ஸ்டாண்ட் எனக்குக் கிடைத்தது!
இன்று காலையில் இந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வந்தது. அதோடு வேதத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தையும் கர்த்தர் எனக்கு நினைவு படுத்தினார்.
எரிகோவின் வெற்றிக்கு பின்னர், யோசுவாவின் கீர்த்தி தேசமெங்கும் பரவிற்று என்று வேதம் கூறுகிறது. எரிகோவுக்கு அடுத்தபடியாக, அடுத்த யுத்தம் வந்தது. ஆயிக்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தமானபோது, இஸ்ரவேல் மக்களோ அல்லது யோசுவாவோ கர்த்தரை அணுகியதாக வேதம் கூறவில்லை. பெயரும் புகழும் பெற்றவுடன், யோசுவா கர்த்தரை மறந்து விட்டான் போலும்!
கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்காமல், சில வீராதி வீரர்கள் ஆயியை வேவுபார்த்துவிட்டு, இது மிக சிறிய நகரம், உள்ளே யாரும் பெரிய பலசாலிகள் இல்லை, ஆதலால் எரிகோவைப் போல நாம் பயப்பட வேண்டியதில்லை. நம்மில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம்பேர் போனால் போதும், ஆயியைக் கைப்பற்றிவிடலாம் என்று கூறிய வார்த்தைகளுக்கு யோசுவா செவிகொடுத்தான்.
யோசுவாவும்,இஸ்ரவேல் மக்களும், இம்மட்டும் காத்து, கரம்பிடித்து நடத்திய தேவனாகிய கர்த்தரை மறந்தே போய்விட்டனர். என்னைப்போல அவரை எங்கேயோ ’பத்திரமாக’ வைத்துவிட்டு ஆயியை நோக்கி கிளம்பிவிட்டனர்! அவர்கள் கர்த்தரை யுத்தத்தில் முன்வைக்காததால், ஆயியின் மக்கள் முன்னால் முறிந்தோடினர். இந்தத் தோல்வியினால் அவர்களுக்குள் இருந்த நம்பிக்கை தொலைந்தது மட்டும் அல்ல, அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் மேல் மற்ற கானானியக்குடிகள் வைத்திருந்த மதிப்பும் போய்விட்டது!
அருமையான தேவனுடைய பிள்ளைகளே! கிறிஸ்மஸ் நாட்களில் நாம் செய்யும் மிகப்பெரியத் தவறே கிறிஸ்துவை எங்கோ பத்திரமாய் வைத்துவிட்டு நாம் கேளிக்கைகளுக்கும், அலங்காரங்களுக்கும், பரிசுகளுக்கும், ஆடைகளுக்கும், கொண்டாட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான்! நாம் அப்படி செய்வோமானால் நம்மை சுற்றியுள்ளவர்களும், நம்முடைய சமுதாயமும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையையும், மதிப்பையும் இழக்க நாம் காரணமாகிவிடுகிறோம்.
இந்த வருடம் நாம் கிறிஸ்துவை எங்கோ பத்திரமாய் வைத்துவிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டாம் என்று உங்களிடம் கேட்கிறேன். நம்மை சுற்றி உள்ள ஏழை எளியவருக்கு உணவளித்து, நலிந்தோருக்கு பரிசுகள் வழங்கி நம்முடைய தேவனாகியக் கர்த்தர் தம்முடைய ஒரே பேரான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பிய நற்செய்தியை பகிர்ந்து கொள்வதின் மூலம் இயேசுவின் நாமம் மகிமைப்படும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்