நியா: 5: 1 – 3 “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.”
இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த “தெபோராளின் ஜெபம்” என்றழைக்கப்படும் பகுதியின் தியானத்தைப் பார்க்க போகிறோம். இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளான இஸ்ரவேல் மக்களுக்காக யுத்தம் செய்து வெற்றி சிறந்ததின் காரணத்தைப் படிக்கப் போகிறோம்.
முதலாவதாக, இன்று நாம் பார்க்கும் பாடலின் பகுதி, இஸ்ரவேலின் வெற்றிக்குக் காரணம், ஜனங்கள் தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்ததினிமித்தம் என்று கூறுகிறது. இன்று நாம் இந்த வரியை மாத்திரம் கவனிக்கலாம்.
இந்த மனப்பூர்வமாய் என்ற வார்த்தை மேல் எனக்கு ஒரு பிரியம் உண்டு! அதனால் இந்த வார்த்தையை சற்று ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இங்கு இஸ்ரவேல் மக்கள் தங்களை மனப்பூர்வமாய் கொடுத்ததால், தேவன் அவர்களுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார்.
இந்த வார்த்தையை இன்னொருவிதமாகவும் புரிந்து கொள்ளலாம். மனப்பூர்வமாய் என்னை முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, என்னை அவர் காணிக்கையாக ஏற்றுக் கொள்கிறார்.
யாத்திராகமம் 25: 2 கர்த்தர் மோசேயை நோக்கி,” இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக” என்கிறார். கர்த்தர் மனப்பூர்வமாய் கொடுப்பனிடம் மட்டுமே காணிக்கையை பெற்றுக் கொள்கிறார். அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நம்மையும்கூட மனப்பூர்வமாய் கொடுத்தால் தான் காணிக்கையாக ஏற்றுக் கொள்வார்!
சரி! ஒப்புக்கொடுத்தல் என்றால் என்ன? ஒப்புக்கொடுத்தல் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ஏற்றம் என்ற அர்த்தமும் உண்டு! என்னை மனப்பூர்வமாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது என் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்றால் மிகையாகாது! இதையே தான் ஏசாயா தீர்க்கதரிசி “கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் ( ஏற்றம் பெறுவார்கள்)” (ஏசா: 40: 31) என்றார்.
மனப்பூர்வமாய் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தம், கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு வெற்றிக் கொடுத்தார். மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுக்கும் வாழ்க்கையை அவர் தமக்குக் காணிக்கையாக ஏற்றுக் கொள்கிறார். மனப்பூர்வமாய் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம் வாழ்க்கை ஏற்றம் பெறும்!
உன்னை கர்த்தரிடம் மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்துப் பார்! அவர் உனக்காக வைத்திருக்கும் அற்புதம் வெளிப்படும்! உன் வாழ்க்கை ஏற்றம் பெறும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்