ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்
இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.
கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”
இந்த வசனம் “கடவுளை பைத்தியக்காரர் என்று நினைக்காதே! அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார், நாம் இன்று நினைப்பது போல எல்லாம் நடக்காவிட்டாலும், கர்த்தருக்கு நாம் எதை விதைத்தோம் என்று நன்கு தெரியும் நாம் விதைத்ததை நிச்சயமாக அறுப்போம்” என்றுதானே கூறுகிறது! ஏனெனில் இந்த உலகில், தீமை செய்கிறவர்கள் செழித்திருக்கிறதையும், தேவனுடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதையும் பார்த்து நாம் ஒருவேளை தேவன் இவற்றையெல்லாம் கவனிக்கிறாரா என்று கூட எண்ணலாம்!
யோசேப்பின் வாழ்வில் நடந்தது என்ன? அவனுடைய நேர்த்தியான நடத்தையினால், பல வருடங்கள் அவனுக்கு எந்த நன்மையையும் கிடைத்தது போல தெரியவில்லை. அடிமைத்தனத்திலும், சிறைச்சாலையிலும் வாழ்ந்த அவனைப் பார்த்தால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் இதுதானா என்று கேட்கும்படி தான் இருந்தது.
சிறைச்சாலையின் தலைவன் அங்குள்ள யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்த பின்னரும், சிறையில் இருந்த பார்வோனின் பான பாத்திர காரனின் சொப்பனத்தின் அர்த்தத்தை தேவனுடைய கிருபையால் விளக்கிய பின்னரும், இரண்டு வருடங்கள் அவன் சிறைவாசம் என்ற இருளில் இருக்க வேண்டியதிருந்தது.
யோசேப்பு சிறையில் வாழ்ந்த இத்தனை வருடங்களும் அவனுக்கு தீங்கு நினைத்த அவன் சகோதரர் அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவனுக்கு தீங்கிழைத்த திருமதி போத்திபாரும் அவள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். எல்லோரும் நன்றாக வாழ்ந்த போது தேவனுடைய பிள்ளையாகிய யோசேப்புக்கு மட்டும் ஏன் இந்த இருளான சிறைவாசம்? தேவன் அவனை மறந்து விட்டாரா?
நிச்சயமாக இல்லை! அதுமட்டுமல்ல, யோசேப்பும் தேவனை மறக்கவில்லை! ஒருவேளை யோசேப்பின் நிலையில் நாம் இருந்திருந்தால் நாட்கள் கடந்து போக போக நாம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று குறை கூறியிருப்போம். எதிலும் நாட்டம் இல்லாமல், கசப்போடு, ஒவ்வொரு நாளையும் கழித்திருப்போம்!
ஆதி: 39: 23 கூறுகிறது, “சிறைச்சாலைத் தலைவன், சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும், யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்தெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்” என்று.
யோசேப்பு சிறையில் கூட, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தான். தான் தேவனுடைய பிள்ளை என்பதை ஒருக்காலும் மறந்து போகவில்லை. தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், தனக்கு விசேஷமான இடம் வேண்டும் என்று கேட்கவும் இல்லை, தான் பொருப்பாளியானதால் தனக்கு மற்றவர்கள் சேவை செய்யவேண்டும் என்றும் எண்ணவில்லை. தன்னுடைய நேர்மையான நடத்தைக்கு உடனடியாக பதில் கிடைக்கவேண்டும் என்று நினைத்து அவன் நடக்கவில்லை.
யாக்கோபின் செல்லப்புத்திரனாய் இருந்தபோதும் சரி, போத்திபாரின் அரண்மனை ஊழியக்காரனாய் இருந்தபோதும் சரி, சிறையில் ஒரு எபிரேய அடிமையாய் இருந்தபோதும் சரி, யோசேப்பு தேவனிடத்தில் உண்மையாய், உத்தமமாய் வாழ்ந்த வாழ்க்கை துளி கூட மாறவில்லை!
கோபுரத்தின் உயரத்தில் வாழ்ந்தாலும், பாதாளத்தின் குப்பைக்குழியில் வாழ்ந்தாலும், கர்த்தருக்கு உண்மையும் உத்தமுமாக வாழ்வதே அவன் நோக்கம்!
கர்த்தர் உன்னிடம் யோசேப்பில் காணப்பட்ட உண்மையையும், உத்தமத்தையும், எதிர்பார்க்கும் இடத்தில் நீ இன்று இருக்கலாம்! நீ வாழும் இடத்திலே, வேலை செய்யும் இடத்திலே, யாரும் பார்க்காத இடத்திலே, யாரும் பார்க்காத நேரத்திலே உன்னிடம் உண்மையும் உத்தமமும் காணப்படுகிறதா?
உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையில் புகழோ அல்லது கைத்தட்டலோ கிடைக்காமல் இருக்கலாம். ஆனாலும் யோசேப்பைப் போல் உத்தமமாய் வாழ்! கர்த்தர் உன்னைப் பார்க்கிறார்! தக்க சமயத்தில் பலனளிப்பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்