ஏசாயா:7:14 …. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
இந்த வாரம் நாம் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை உலகமே நினைவு கூறும் வாரம். ஆதலால் அவருடைய முதலாம் வருகையைப் பற்றி நாமும் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.
நம்முடைய வேதத்தில் உள்ள நான்கு சுவிசேஷங்களும் நான்கு முக்கிய செய்தியை வெளிப்படுத்துகின்றன! மாற்கு சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவை ஒரு தாழ்மையுள்ள சேவகனாகவும், லூக்கா அவரை மனிதக் குமாரனாகவும், யோவான் அவரை தேவனுடைய குமாரனாகவும், மத்தேயு அவரை மேசியாவாகவும், இராஜாவாகவும் சித்தரிக்கின்றன! நாம் இன்றுபார்க்கப் போகும் மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை ஆரம்பிக்கும்போது இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு என்று எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். கிரேக்க மொழியில் அது இயேசு கிறிஸ்துவினுடைய ஆதியாகமம் என்று எழுதப்பட்டுள்ளது. இன்று அந்த வம்ச வரலாற்றை மத்தேயு 1: 1- 16 வசனங்களின் மூலம் சற்றுப் பார்ப்போம்! இந்த வ்ம்ச வரலாறு அல்லது புதிய ஏற்பாட்டின் ஆதியாகமம் நமக்கு எதை வெளிப்படுத்துகிறது?
முதலாவது இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரளாறு நமக்கு அவர் ஒரு மானிடனாய் சாதாரணமான இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்தவர் என்று விளக்குகிறது! அவருக்கு முன்னோர் இருந்தனர்! அவர் தாவீதின் வம்சத்தில் பிறந்தவர்! அவருடைய பிறப்பு ஒரு கதையல்ல, உண்மையான வரலாறு!
இன்றும் குடும்ப வரலாறு என்பது பல கலாசாரங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. யூதர்கள் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர்.ஒவ்வொரு குடிமகனின் பூர்வீகமும் கொண்ட பதிப்பு ஒன்று யூதரால் அமைக்கப்பட்ட சன்ஹீட்ரின் என்ற சங்கத்தினர் பாதுகாத்து வந்தனர். அதனால் தான் குடிமதிப்பு எழுதும்படியான கட்டளை அகுஸ்து ராயனால் கொடுக்கப்பட்ட போது யோசேப்பும், மரியாளும் அவர்களுடைய பூர்வீகமான பெத்லெகேமுக்கு சென்றனர். அப்படிப்பட்ட ஒரு பதிப்பு அல்லது புத்தகம் இல்லையானால் 30 தலைமுறைகளுக்கு முன்னால் தங்களது முன்னோராகிய தாவீதின் வம்சம் வாழ்ந்தது பெத்லெகேம் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? இயேசு பிறந்தபோது அவர்கள் என்ன ராஜ குடும்பமாகவா வாழ்ந்தார்கள்? அவர்கள் வெறும் தச்சர்களாகவும் சிறு தொழில் செய்கிறவர்களாகவும்தானே இருந்தார்கள்! பின்னர் கிபி 70 ம் ஆண்டில் எருசலேம் அழிக்கப்பட்டபோது, தேவாலயம் இடிக்கப்பட்ட போது, அவர்களுடைய வரலாறு பதிப்பு புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அது வரை அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பூர்வீகத்தை சொல்லக்கூடிய நிலையில் இருந்தனர்!
இரண்டாவது இந்த வரலாறு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறியதைக் குறிக்கிறது!
ஏசாயா தீர்க்கதரிசி 7:14 ல் ….இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் என்று கூறியிருக்கிறார்.
இந்த வரலாறு முழுவதும் வாசிக்கும்போது, இவன் இவனைப் பெற்றான் என்று ஒவ்வொருவரின் தகப்பன்மாரின் பெயர் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். ஆனால் 16 ம் வசனத்தில் யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான். அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார் என்று யோசேப்பு இயேசுவைப் பெற்றத் தகப்பன் அல்ல அவர் பரிசுத்த ஆவியால் உற்பவித்து பிறந்தார் என்ற உண்மையை மத்தேயு விளக்குகிறார். ஏசாயா தீர்க்கதரிசியால் எழுதப்பட்ட விதமாய் ஒரு கன்னிகை கர்ப்பவதியா கர்த்தராகிய இயேசு பிறப்பதை மத்தேயு உறுதிப்படுத்துகிறார்.
அதுமட்டுமல்ல ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியரால் அடிமைத்தனத்துக்குள் கொண்டு போகப்படுவதைக் கண்டு, இதோடு அவர்கள் சரித்திரம் முடிவடையப்போவதில்லை, அவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு குமாரன் தாவீதின் செங்கோலை நிலைநாட்டுவார் என்று, 9:6 ல் நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் …. என்று மேசியாவின் வருகையைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் இயேசுவின் பிறப்பில் நிறைவேறிற்று.
கடைசியாக இயேசு கிறிஸ்துவின் வரலாறு தேவனாகியக் கர்த்தரின் மகா பெரிய கிருபையைக் வெளிப்படுத்துகிறது! ஆம்! அவருடைய பிறப்பின்மூலம் தேவனாகியக் கர்த்தருடைய இரக்கங்களும், கிருபையும் வெளிப்பட்டது! உதாரணமாக அவருடைய வரலாற்றில் இடம்பெற்ற பெண்களைப் பாருங்கள்!
தாமார் ( ஆதி:38:1-30) என்பவள் அவளுடைய மாமனாராகிய யூதாவின் மூலம் பெற்ற பாரேஸ் இயேசுவின் வரலாற்றில் இடம் பெற்றது கர்த்தருடைய சுத்த கிருபை தானே!
ராகாப் (யோசுவா 2:1-24) என்ற எரிகோவின் மதில்மேல் வாழ்ந்த வேசியை அவருடைய வம்சத்தில் இடம் பெற செய்ததும் அவருடைய சுத்த கிருபை தானே!
ரூத் ( ரூத் 1:1-7) என்ற மோவாபியப் பெண்ணைத் தன் வம்சத்தில் இடம் பெற செய்ததின் மூலமாக புஜாதியினரான நம்மைப் போன்றவருக்கும் கிறிஸ்துவின் குடும்பத்தில் இடம் உண்டு என்று உலகத்துக்கு வெளிப்படுத்திய மகா பெரிய கிருபை!
உரியாவின் மனைவி ( 1 சாமுவேல் 11:1-27) என்ற பத்சேபாள் தாவீதோடு விபசாரம் செய்தவள்! அவளையும் தன் வம்ச வரலாற்றில் இடம் பெற செய்த மா பெரும் கிருபை!
ஆம்! அதே கிருபைதான் நான் பாவியாக இருந்தபோது என்னையும் நேசித்து தம்முடைய பிள்ளையாக்கியது! இந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எனக்கு அருளிய மாதயவை எப்படி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை!
இதை வாசித்துக் கொண்டிருக்கும் உனக்கு இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் நம்பிக்கையைக் கொடுக்கட்டும்! தேவனுடைய வாக்குகள் ஒன்றும் நிறைவேறாதே போகாது என்ற விசுவாசத்தை கொடுக்கட்டும்! தேவனுடைய மகா பெரிய தயவும், கிருபையும், அனுகூலமும் நமக்கும் உண்டு என்ற நிச்சயத்தைக் கொடுக்கட்டும்! உன்னுடைய கடந்த கால வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தாலும் பரவாயில்லை நீ இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது உனக்கும் அவருடைய பிள்ளையாகும் சிலாக்கியம் உண்டு என்ற உண்மையை உனக்கு வெளிப்படுத்தட்டும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்