மத்தேயு: 1:21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
நாம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் அதன் பெற்றோர் பெருமையுடன் குழந்தையின் பெயரை உறவினருக்கு அறிவிப்பார்கள் அல்லவா? இப்பொழுது நாம் படிக்கப்போகும் வேத பகுதியில் மத்தேயு நமக்கு ஒரு குழந்தையின் பெயரை அறிவிக்கப் போகிறார்! இந்த அறிவிப்பு ஒரு தலைமுறையினருக்கானது அல்ல! தலைமுறை தலைமுறையாக வரும் எல்லா சந்ததியாருக்கும் கொடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பு!
இயேசுவின் பிறப்பு ஒரு சாதாரணக் குழந்தையின் பிறப்பு அல்ல! மத்தேயு 1:18 இயேசுகிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமானது …. என்று ஆரம்பிக்கிறார். கிறிஸ்து என்றால் மேசியா என்று பொருள்!
மரியாள் யோசேப்பை மணக்க நிச்சயிக்கப்பட்டிருந்த போது அவள் பரிசுத்த ஆவியானவரால் கர்ப்பவதியாகிறாள். அதை அறிந்த யோசேப்பு அவளைத் தள்ளி விட மனதாயிருந்தான். அந்த வேளையில் நீதிமானாயிருந்த யோசேப்பிடம் தேவ தூதன் ஒருவன் சொப்பனத்தில் உண்மையை விளக்குகிறான். அப்பொழுது தேவதூதன் யோசேப்பை, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்று அழைக்கிறான். இந்த சம்பந்தமே இயேசு கிறிஸ்துவுக்கு தாவீதின் குமாரன் என்ற பெயரை கொடுத்தது!
அடுத்தபடியாக தேவதூதன் யோசேப்பை நோக்கி, ‘அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். நம்முடைய காலத்தில் நாம் அதிகமாக யாக்கோபு, ஆபிரகாம், தானியேல் என்ற பெயர்களை நம்முடைய பிள்ளைகளுக்கு வைப்பது போல, இயேசு என்ற பெயர் அந்த காலகட்டத்தில் அதிகமாக சூட்டப்பட்ட ஒரு பெயர்! யோசுவா என்பதற்கும், இயேசு என்பதற்கும் யெகோவா இரட்சிப்பார் என்று அர்த்தம்!
மரியாள், யோசேப்பு வாழ்ந்த சமயத்தில் அவர்கள் வீட்டை சுற்றி ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு யோசுவாவும், ஒவ்வொரு இயேசுவும், கர்த்தரால் இரட்சிப்பு வரும் என்று நினைவூட்ட அவர்கள் பெற்றோரால் பேரிடப்பட்டிருந்தனர். ஆனால் இந்தக் குழந்தை இயேசுவின் பெயரோ அவருடைய சிலுவை மரணத்தால் அவர் நம் ஒவ்வொருவருக்காகவும் விலைமதிப்பில்லாத இரட்சிப்பைப்பெற்றுத் தருவார் என்ற அர்த்தம் கொண்டது.
அதுமட்டுமல்லாமல் மத்தேயு , தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படிநடந்தது என்று சொல்லி, ஏசாயா தீர்க்கதரிசி 7:14 ல் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் என்று கூறியதை நினைவுபடுத்துகிறார். இங்கு அந்தச் செல்லக் குமாரனுக்கு இன்னொரு பெயர் வழங்கப்படுகிறது! இயேசு என்ற பெயர் போல இது எல்லோராலும் வைக்கப்பட்ட ஒன்று இல்லை! இந்த பெயருக்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம்! இதன் அர்த்தம் தேவன் நமக்குத் துணையாக நம்மோடிருக்கிறார் என்பது அல்ல! தேவனாகிய கர்த்தர் இயேசுவின் ரூபமாக நமக்குள் வாசம் பண்ண வருகிறார் என்பதே அர்த்தம்! ஆதியிலே தேவனோடிருந்த வார்த்தையானவர்,தேவனாயிருந்த வார்த்தையானவர் நம்மோடிருக்க மாம்சமாக உருவெடுத்தார் என்பதே அதின் அர்த்தம்!
என்ன அற்புதம்! தேவனுடைய குமாரனாகிய இயேசு மானிடனாகி நம்மோடு வாசம் பண்ண வந்தார்! இம்மானுவேல் என்ற பெயரின் மூலம் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமும், தீர்க்கதரிசனமும் இயேசு என்ற பெயரில் நிறைவேறிற்று!
தேவன் மானிடராகிய நம்மோடு வாசம் பண்ண மானிடன் ஆனார்! அல்லேலூயா! அவர் நம்மோடிருக்கிறார்! இந்த பண்டிகை காலத்தின் ஆசீர்வாதம் நம்மைத் தொடரட்டும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்