ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வருடமாக நான் எழுத ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப் பார்த்தோம்.
அப்படிப்பட்டதொரு இருண்ட நாட்களில், பழிவாங்குதலும், விக்கிரக ஆரதனையும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த வேளையில், யாரும் எதிர்பார்க்காத சமயத்தில், திடீரென்று எலியாவும் அவனுக்கு அவருக்கு பின்னால் எலிசாவும் தோன்றுகின்றனர்.
அவர்களின் வாழ்க்கையைப் பற்றி நான் படிக்கும் பொழுது எனது மனதில் மறுபடியும் மறுபடியும் நியான் விளக்குப் போல பளிச்சென்று தோன்றிய ஒரே ஒரு காரியம், தேவனாகியக் கர்த்தர் கர்த்தர் சரியான வேளையில் நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்பதே.
தேவன் நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்று நான் சொல்லும் பொழுது தேவன் அதை முன் அறிந்தவர் என்று அர்த்தமும் உண்டு. இன்று தேவன் எவ்வாறு உங்களுடைய தேவைகளை சந்தித்தார் என்று நான் கேட்பேனாகில், உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு சாட்சி நிச்சயமாக இருக்கும்.
அதனால் தான் நான் இந்த வேதாகமப் பகுதியை இன்றைய தியானத்திற்காகத் தெரிந்து கொண்டேன். இதில் நாம் தேவனாகிய கர்த்தர் ஈசாக்கை தனக்கு பலியிடும்படியாக ஆபிரகாமிடம் கூறுவதைப் பார்க்கிறோம். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட எல்லாவித ஒழுங்குகளையும் செய்துவிட்டு, அவனை பலியிட தம்முடைய கையை உயர்த்தும் பொழுது தேவன் அவனை நிறுத்துவதை பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, அங்கு தேவனாகிய கர்த்தர், ஆபிரகாம் பலியிடும்படியாய் ஒரு ஆட்டுக் குட்டியையும் அருளினார். ஆதலால் ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான்.
யெகோவாயீரே என்ற இந்த வார்த்தையே எலியா எலிசாவினுடைய வாழ்க்கையை வழி நடத்தியது அவர்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தர் அவர்களுடைய தேவைகளை அற்புதமாய் சந்திப்பதை நாம் பார்க்கிறோம். எலியா எலிசா இருவருடைய வாழ்க்கையிலும் தேவன் அருளிய வாக்குத்தங்களும் அவை நிறைவேறுதலுமே நடந்தன.
நாம் எலியாவோடு தனிமையான மலையண்டை உள்ள கேரித் ஆற்றண்டைக்கு செல்லும் பொழுதும், பின்னர் அங்கிருந்து 100 மைல் கடந்து பாலைவன தேசமாகிய சீதோனுக்கு செல்லும் பொழுதும், அங்கு விதவையையும் அவள் குமாரனையும் சந்திக்கும்பொழுதும், பின்னர் கர்மேல் பர்வதம் ஏறும்பொழுதும், பயந்துபோய் உயிருக்காக சீனாய் மலைக்கு ஓடிப்போகும் பொழுதும்,கர்த்தராகிய தேவன் எலியாவோடிருந்தவாறு நம்மோடும் இருப்பார். அந்த யெகோவாயீரே நம்முடைய தேவைகளையும் சந்திப்பார்.
நம்முடைய அடித்தளம் ஆடும் பொழுது நம் தேவனைத் தேடுகிறோம் ஆனால் நம்முடைய அடித்தளத்தை ஆட வைப்பவரே தேவன் தான் என்பது தெரியுமா? அவர் யாவற்றையும் அறிந்த தேவன், யாவற்றையும் தம்முடைய புயத்தால் நடத்துபவர், அவர் சரியான வேளையில், நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார் என்பது நிச்சயம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்