1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான்.
நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.
இந்த அதிகாரத்தில் பலவிதமான கொடூரமான சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். ராஜாவாகிய உம்ரி வல்லமையுடன் ஆட்சிசெய்து வந்தான். அவன் சேமேருடைய கையிலிருந்து ஒரு பட்டணத்தை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி அதற்கு சமாரியா என்று பேரிடுவதைப பார்க்கிறோம். வேதம் அவன் இஸ்ரவேலின் ராஜா அனைவரையும் பார்க்கிலும் ஒரு கேடான ராஜாவாக வாழ்ந்தான் என்று நமக்கு கூறுகிறது .
அவனுக்கு பின்னர் உம்ரியின் மகன் ஆகாப் ராஜா பதவியேற்கிறான். அவன் தனக்கு முன்னிருந்த எல்லாரையும் பார்க்கிலும் பாவம் செய்தான் என்றும் வேதம் கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தியாகிய யேசபேலை விவாகம் பண்ணி, அவளுடைய தெய்வங்களான பாகாலையும் சேவித்து அதைப் பணிந்து கொண்டான் .அவன் சமாரியாவிலே பகாலுக்கு ஒரு கோவிலைக் கட்டி அதில் ஒரு பலிபீடத்தையும ஏற்படுத்தினான். இவையனைத்தையும் செய்து அவன் தேவனாகிய கர்த்தரிடம் தன் எதிர்ப்புணர்ச்சியைக் காட்டினான். முதுகெலும்பில்லாத கணவன் கிடைத்தவுடன் யேசபேல் கழுத்தெலும்பாக மாறித் தலையை தனக்கு அடிமைப் படுத்தி கொண்டாள். அவனை முற்றிலும் பாகாலுக்கு அடிமைப்படுத்தி விட்டாள்.
ஆகாப் விக்கிரகத் தோப்புகளையும் உண்டாக்கி, கர்த்தராகிய தேவனுக்குக் கோபம் உண்டாகும் படியான காரியங்களை, தனக்கு முன் இருந்த ராஜாக்களைப் பார்க்கிலும் அதிகமாய் செய்தான் என்று வேதம் மறுபடியும் நமக்குத் தெளிவு படுத்துகிறது. தேவனாகிய கர்த்தரின் சத்தம் அவன் செவிகளில் விழாதபடி அவன் செவிகள் மந்தமாயின,அவன் கண்கள் குருடாயின. தான் செய்வது எதையும் தேவனால் பார்க்கவே முடியாது என்று நினைத்தானோ என்னவோ!
ஆகாபின் முரட்டுத்தன்மைக்கும், எலியாவின் வருகைக்கும் இடையில் நம்முடைய இன்றைய வேதாகமப் பகுதி புதைந்து கிடக்கிறது.
இந்த வசனத்தில், அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், என்று பார்க்கிறோம்.
எரிகோ மறுபடியும் கட்டப்பட்டது என்ற பதிவிற்கும் மேலாக வேதம் நமக்கு இதை ஒரு எச்சரிக்கையாகக் கொடுக்கிறது.
அவன் நாட்களில் என்றால் எவன் நாட்களில் என்ற கேள்வி எழும்புகிறது அல்லவா? அவன் ஆகாப் தான். ஒரு அயோக்கியனான தொழிலதிபதியும், ஒரு கேடுள்ள ராஜாவும் சேர்ந்து எடுத்த முடிவுதான் அது. தேவனுடைய வார்த்தைகளுக்கு எவருமே செவிகொடுக்காத காலம் அது. வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனின் வார்த்தைகளை மதிக்காமல் இந்த இருவரும் சேர்ந்து எரிகோவைக் கட்ட ஆரம்பித்தனர்.
ஆனால் இதைக்குறித்து ஆகாப் ராஜாவாவதற்கு 500 வருடங்களுக்கு முன்னரே தேவனாகிய கர்த்தர் வாக்கருளியிருந்தார். தேவன் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு கூறிய வார்த்தைகள் 500 வருடங்கள் ஆனாலும் மாறவே இல்லை! அவை நிறைவேறின!
கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான்.
எவருடைய வார்த்தைகளையும் நம்ப முடியாத இந்த கால கட்டத்தில் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய வார்த்தைகள் காலத்தால் அழிக்க முடியாதவை என்று நாம் இந்த சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆகாப் தேவனுடைய வார்த்தைகளை அழித்து விடலாம் என்று நினைத்தான். 500 வருடங்களுக்கு முன்னால் கூறப்பட்ட அவருடைய வார்த்தைகளை அவன் பொருட்படுத்தவேயில்லை! ஆனால் அவை நிறைவேறின!
ஆகாப் தேவனுடைய பட்டயம் போன்ற அவருடைய வார்த்தைகளை மறுதலித்து, அதை உதாசீனப்படுத்தி, எத்தனை பெரிய தவறு செய்துவிட்டான்! நீயும் நானும் தேவனுடைய வார்த்தைகளை மறுதலிக்கவோ அல்லது உதாசீனப்படுத்தவோ கூடாது என்பதை ஆகாப் செய்த தவறு நம்மை எச்சரிக்கிறது அல்லவா!
கர்த்தருடைய வாக்கு என்றும் நிலைநிற்கும்! அவர் வாக்கு ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளன! வானமும் பூமியும் அழிந்து போம், அவருடைய வார்த்தைகள் என்றும் அழியாது!
காலம் கடந்து போனாலும் அவர் உனக்குக் கொடுத்த வாக்கு மாறாது! நிச்சயமாக நிறைவேறும்! அல்லேலுயா! அவை சத்தியமானவை! நித்தியமானவை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்