யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்….
எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது.
இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று பார்க்கிறோம். இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு.
வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம். வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே தேவன், மண்ணிலிருந்து நம்மை உருவாக்கினார். நம்மை உருவாக்க அவருக்கு ஒன்றும் பொன்னின் தூள் தேவைப்படவில்லை, முத்துக்களின் தூள் தேவைப்படவில்லை, வைரத்தின் தூள் தேவைப்படவில்லை, அவருக்குத் தேவைப்பட்டது பூமியின் புழுதியே. நாம் உடுக்கும் துணிகள் ஒரு மண் பாத்திரத்தை அலங்கரிக்கும் ஒன்றே..
இந்த வார்த்தைகள் என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டின! சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மைப் போன்ற சாதாரண மக்களைக்கொண்டு தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தும்போது, அவரை நேசித்த அவருடைய பிள்ளைகளைக்கொண்டு எவ்வளவு அதிகமாக சாதித்திருக்க முடியும் என்று யோசித்தேன்.
இன்று எலியாவைப் பற்றி யோசிக்கும்போது, அவன் இன்றைய மக்கள் போல கூட்டங்களில் பிரயாணப்பட்டவன் அல்ல! சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கியவனல்ல! வீடு வாங்கவும், வாகனம் வாங்கவும் இரவு பகலாக உழைத்தவன் அல்ல! பிள்ளைகளுடைய முன்னேற்றத்துக்காக பலவிதமான கஷ்டங்களைத் தாங்கினவன் அல்ல!
இங்கு எனக்குப் பிடித்ததே யாக்கோபு எலியாவைப்பற்றி எழுதும்போது, அவன் ஒரு சாதாரணமானவன், நம்மைப்போல பாடுகளுள்ளவன் என்று எழுதினார். அவனைவிட இன்று நாம் படும் பாடுகள் அதிகம் என்றுதானே எண்ணத்தோன்றுகிறது.
ஆனால் அவன் ஒரு சாதாரண மலைவாழ் மனிதன். பரட்டைத் தலையுடன் பெரிய அழகோ, படிப்போ இல்லாதவன். நம்மைப்போன்ற ஆசாபாசங்கள் உள்ளவன்! இந்த தினசரி பாத்திரத்தைக்கொண்டே தேவன் தம்முடைய வார்த்தைகளை மனிதருக்கு எடுத்துரைத்த ஒரு பெரிய பொக்கிஷத்தை உருவாக்கினார்.
அடுத்தமுறை நான் மிக மிகச் சாதாரணவன், என்னை எப்படி தேவன் உபயோகப்படுத்தமுடியும் என்ற சந்தேகங்கள் உங்களுக்கு எழும்பும்போது, ஒருநிமிடம் எலியாவை சிந்தித்துப் பாருங்கள்! உங்களையும் என்னையும் போல அவன் ஒரு சாதாரண மனிதன்! அவன் மூலம் தேவன் என்னென்ன செய்தார் என்றும் சிந்தித்துப் பாருங்கள்!
இதையே தேவனாகிய கர்த்தர் உங்கள் மூலமாக செய்யவும் முடியும் என்றும் உங்களுக்கு சற்று நினைப்பூட்டிக்கொள்ளுங்கள்! சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள பாண்டங்களாக நம்மை உபயோகப்படுத்துவார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்