2 நாளாகமம்: 20 :18 , 19. அப்பொழுது யோசபாத் தரை மட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும், கர்த்தரைப் பணிந்து கொள்ளக் கர்த்தருக்கு முன்பாக தாழவிழுந்தார்கள் . கோகாத்தியரின் பத்திரரிலும் ,கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகாசத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் அவனுடைய குடிகளும், லேவியனான யகாசியேல் மூலமாக ஒரு அற்புதமான தேவ செய்தியை பெற்றார்கள் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்களுக்கு விரோதமாக வந்த முப்படைகளை அவர்கள் வனாந்தரத்தில் சந்திக்கப் போகிறார்கள் என்றும் ஆனால் யுத்தம் செய்யப் போவது அவர்கள் அல்ல, அவர்களுடைய தேவனே என்றும் யகாசியேல் கூறினான்.
தேவனாகிய கர்த்தரால் கிடைக்கப் போகும் வெற்றியின் செய்தி ராஜாவாகிய யோசபாத்துக்கு வந்தபோது அவன் உள்ளம் நன்றியால் தேவனை ஸ்தோத்தரித்தது . வேதம் கூறுகிறது அவன் கர்த்தருக்கு முன்பாக தாழ தரைமட்டும் விழுந்து பணிந்து கொண்டான் என்று.
இதை வாசித்த போது என்னை பற்றி சற்று சிந்தித்துப் பார்த்தேன். கடினமான பாதைகளில் நான் கடந்து சென்ற போது என் தேவன் நிச்சயமாக என்னை விடுவித்து இருக்கிறார், என் உள்ளம் நன்றியால் அவரை ஸ்தோத்தரித்துள்ளது. ஆனாலும் அநேக காரியங்களில் அவர் என்னை விடுவித்ததை நான் உணராமல் அவரை ஸ்தோத்தரிக்க மறந்தும் போயிருக்கிறேன். நான் எழுதும் இந்த வார்த்தைகள் என்னைக் கண்ணீரோடு கர்த்தரை ஸ்தோத்தரிக்க செய்தது.
தேவனுடைய செய்தியை கேட்டபொழுது யோசபாத் நடந்து கொண்ட விதம் நமக்கும் அநேக காரியங்களை கற்றுக் கொடுக்கிறது. யோசபாத் தேவனுக்கு முன்பாக பயத்தோடும் , நன்றியோடும் தரை மட்டும் குனிந்தான் என்று பார்க்கிறோம்.
ஒரு நிமிடம்! யோசபாத் எப்பொழுது தேவனுக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வணங்கினான்? அவனைத் தாக்க வந்து கொண்டிருக்கிற முப்படைகளோடு வெற்றி பெற்ற பின்னரா ???? இல்லவே இல்லை! அவர்கள் வனாந்தரத்தில் முப்படைகளை சந்திக்க மறுநாள் அதிகாலமே எழுந்து போனார்கள் என்று 20ம் வசனத்தில் வாசிக்கிறோம். அப்படியானால் யோசபாத் முப்படைகளை யுத்தத்தில் வெற்றி பெறும் மன்னரே தேவனைத் தரை மட்டும் குனிந்து வணங்கினான் என்று தானே பார்க்கிறோம்?? நாம் எத்தனை முறை நம்முடைய ஜெபத்துக்கு பதில் கிடைத்த பின்னர் கூட ஸ்தோத்தரிக்க மறந்து விடுகிறோம்! ஆனால் இந்த மனிதன் வெற்றியை தன் கண்களால் காணும் முன்னரே தேவனைத் தன் உள்ளத்திலிருந்து ஸ்தோத்தரித்தான்.
தேவன் எனக்கு ஏதாவது செய்தால் தான் அவரை ஸ்தோத்தரிப்பேன் என்று நம்மில் எத்தனை பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஆனால் ஒவ்வொரு நாளும் நன்றியுள்ள துதிகளாலும் ஸ்தோத்திரங்களாலும் நம்முடைய வாழ்க்கை நிறைவு பெற்றிருந்தால் எப்படி இருக்கும்?
துதிகளோடும் தோத்திரங்களோடும் நாம் தேவனை ஒவ்வொருநாளும் ஆராதிக்கும் வாழ்க்கை நமக்கு விடுதலையை கொடுக்கும், ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பிக்கும், அவை நமக்குத் தாழ்மை, அன்பு, நேர்மையான எண்ணங்கள் இவற்றைக் கொடுக்கும்.
அன்று யுத்தம் நடைபெறுவதற்கு முன்பாக, அவர்கள் விடுதலை அடைவதற்கு முன்பாக, அவர்கள் வெற்றியைத் தன் கண்களால் காணுவதற்கு முன்பாக யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் தரை மட்டும் குனிந்து தேவனை ஆராதித்தனர் ! நீயும் நானும் எப்படி?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்