2 நாளாகமம் 20:20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து , தெக்கொவாவின் வனாந்தரத்துக்குப் போக புறப்பட்டார்கள். புறப்படுகையில் யோசபாத் நின்று; யூதாவே , எருசலேமின் குடிகளே கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் , அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
யூதாவுக்கு விரோதமாக முப்படைகள் படையெடுத்து வந்தபோது தேவனாகியக் கர்த்தர், அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும் கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் செய்வார் அவர்கள் சும்மா இருந்து இரட்சிப்பை பெற்றுக் கொள்வார்கள் என்றும் வாக்குக் கொடுத்தார் . அவர்கள் தங்களுடைய கண்களால் வெற்றியைக் காணும் முன்னரே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் தரை மட்டும் குனிந்து தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்தரித்தான் என்று பார்த்தோம்.
நான் பல நாடுகளுக்கு பயணப்பட்டதுண்டு, அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை சில உண்டு , மனதில் நீங்கா இடம் பெற்றவை சில உண்டு! அப்படிப்பட்டவைகளில் சீனாய் வனாந்தரமும் ஒன்று. வெறுமை என்ற வார்த்தைக்கு அர்த்தமே இந்த வனாந்திரம் தான் போல என்று நினைக்கக் கூடிய அளவுக்கு நீண்ட வெறுமையான ஒரு இடம் அது. நாங்கள் அதை கடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மலையின் பின்னிருந்து ஒரு பெண் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வருவதை கண்டேன். அதைச் சுற்றிலும் வீடுகளோ ஊரோ இருப்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. மிகவும் தனிமையான , வெறுமையான உச்சி வெயில் கொளுத்திக் கொண்டிருந்த இடம் அது.அந்த இடத்தில் எப்படி ஒருசிலர் வாழ்கின்றனர் என்று புரியவேயில்லை!
வேதத்தில் வனாந்தரம் என்ற வார்த்தையை நாம் படிக்கும் பொழுது ஜனங்கள் குடியிராத , வீணாய் கிடக்கிற இடம் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் சீனாய் வனாந்தரத்தை நான் பார்த்த பின்பு என்னுடைய எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது. அப்பப்பா! எத்தனை வெறுமை அது!
நம் வாழ்க்கையில் வனாந்தரம் என்ற சொல் வருகிறதே அதற்கு என்ன அர்த்தமாயிருக்கும்? அதுவும் ஒருவேளை யாரும் தப்பிக்க முடியாத, மிகவும் வெறுமையான ஒரு சூழ்நிலையாக இருக்குமோ? வாழ்வில் வனாந்தரத்தைக் கடந்த என்னைப்போல பலருக்கு அதின் அர்த்தம் நன்றாகவேத் தெரியும்!
பல நேரங்களில் தேவனுடைய பிள்ளைகளுக்கு வனாந்தர அனுபவம் கொடுக்கப்படுகிறது – சிலருக்கு, அது அவர்களுடைய பாதுகாப்புக்காக கொடுக்கப்படுகிறது! சிலருக்கு அது அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகக் கொடுக்கப்படுகிறது, மற்றும் சிலருக்கு அவர்களை திருத்துவதற்காக கொடுக்கப்படுகிறது!
ஒரு எகிப்தியனைக் கொன்ற பின்பு மோசே, மீதியான் வனாந்தரத்துக்கு சென்றது பாதுகாப்பிற்காக. ஆனால் இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்திற்குள் சென்றது அவர்களுடைய வாழ்க்கைக்குரிய பாடத்தை கற்றுக்கொள்ள என்று பார்க்கிறோம்.
நம்முடைய வாழ்க்கையிலும் வனாந்தர அனுபவம் ஒன்றும் புதிது அல்ல. வனாந்தர அனுபவம் இல்லாமல் நாம் யாருமே இந்த பூமியை விட்டு கடந்து செல்ல முடியாது என்று தான் நினைக்கிறேன். நாம் அனுபவிக்கும் வெறுமை, தனிமை, மலட்டுத்தன்மை இவை அனைத்துமே நம்மை வழிநடத்தும் தேவனை நாம் அநேக கேள்விகள் கேட்கச் செய்கின்றன.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவர் தன்னுடைய பிள்ளைகளை வனாந்தரத்தில் விட்டு விட மாட்டார். அங்கு அவர் நம்மோடு கூட இருந்து நம்மைத் தப்புவிப்பார். யோசபாத்தின் வனாந்தர அனுபவம் போன்ற சம்பவங்கள் வேதத்தில் பதிவு செய்யப்பட்டது உனக்கும் எனக்கும் வனாந்தரத்தில் உள்ள தங்கப் புதையலை காண்பிப்பதற்காக தான்.
இன்றைய வேதாகப் பகுதியில் வேதம் கூறுகிறது, யூதாவின் ராஜவாகிய யோசபாத்தும் அவனுடைய மக்களும் விடியற்காலையில் எழும்பி வனாந்தரத்துக்கு போகப் புறப்பட்டார்கள் என்று. அந்த வனாந்தரத்தில் நின்று கொண்டு இன்னும் வெற்றியை தன் கண்களால் காணும் முன்னரே யோசபாத் இவ்வாறு கூறினான்,
யூதாவே , எருசலேமின் குடிகளே கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் , அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள்.
வனாந்தரத்தின் மையத்தில் நின்று கொண்டு தேவனை நம்புவது யோசபாத்தின் வெற்றிக்கு அடிப்படையாக மாறியது. இந்த வெறுமையான தனிமையான வனாந்தரத்தில் ராஜாவாகிய யோசபாத்துடைய வார்த்தைகள் அந்த வெறிச்சோடிய வனாந்தரத்தில் சில்லென்று வீசிய பூங்காற்று போல புறப்பட்டு வந்து மக்களை உற்சாகப்படுத்தியது.
இன்று உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வனாந்தரத்தில் நின்று கொண்டு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? தேவனை அநேக கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்கிறாயா? தேவனைக்குறித்து முறுமுறுத்துக் கொண்டிருக்கிறாயா அல்லது யோசபாத்தை போல நம்பிக்கை என்ற பூங்காற்றால் மற்றவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாயா?
இந்த வனாந்தர வாழ்க்கை சீக்கிரம் கடந்து போகும்! நம்பிக்கையை விட்டுவிடாதே! தேவன் அங்குதான் உனக்கு வெற்றியை அளிக்கப் போகிறார்! அவர் உனக்காக வைத்திருக்கும் ஆசீர்வதத்தைக் காண ஆயத்தப்படு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்