2 நாளாகமம் 20 :21 -22 பின்பு அவன் ஜனத்தொடே ஆலோசனை பண்ணி ,பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் , ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்து போய், கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும் , பாடகரை நிறுத்தினான்.
அவர்கள் பாடித் துதி செய்யத் தொடங்கின போது யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிரந்த அம்மோன் புத்திரரையும் , மோவாபியரையும் சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
நாங்கள் வசிக்கும் லேஅவுட்டில் காலை 6:30 மணிக்குள்ளாக குப்பைத்தொட்டியை வெளியே வைத்து விட வேண்டும் , ஏழு மணிக்குள் அதை எடுத்து சென்று விடுவார்கள் . இன்று காலையில் அதை வைக்க சென்ற பொழுது எங்கள் தெரு முழுவதும் ஒவ்வொருவீட்டின் முன்னாலும் வைக்கப்பட்டிருந்த பல வர்ணமான குப்பைதொட்டிகளைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் நாம் உபயோகிக்கும் பொருட்கள் எவ்வளவு கழிக்கப்படுகின்றன என்று யோசித்தேன்.
சில நேரங்களில் நாம் மனிதர்களையும் உறவுகளையும் கூட நமக்கு தேவையில்லாதவைகள் போல கழித்து விடுகிறோம். நீடித்து இருப்பவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றனர். நீடித்த நட்பு எல்லோருக்கும் உண்டா? இப்பொழுதெல்லாம் திருமண உறவுகள் கூட நீடித்திருப்பதில்லை என்பது உள்ளத்தை கசக்கும் உண்மை அல்லவா?
அதனால்தான் சங்கீதம் 136 ஒரு நீடித்த உறவைக் குறித்து நமக்கு நம்பிக்கையூட்டும் சங்கீதமாக உள்ளது. இந்த சங்கீதத்தில் 30 தடவைக்கு மேல் என்றும் உள்ளது என்ற வார்த்தை வருகிறது.
என்றும் உள்ளது என்று எதைக் குறித்து சங்கீதக்காரன் பேசுகிறான் ? கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது, அவரது இரக்கம் என்றும் உள்ளது. நாம் விழும்போது நம்மைத் தாங்கி பிடிக்கும் கிருபை, இருளில் நம்மை வழி நடத்தும் கிருபை என்றும் உள்ளது! அவருடைய அன்பு என்றும் உள்ளது. அல்லேலுயா!
ஒரு நாள் ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட குளத்தண்டையில் உட்கார்ந்து இருந்தேன். அங்கு நீர் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த நீர் தொடர்ச்சியாக வெளியே சென்று கொண்டும் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு நன்கு தெரியும் வெளியே செல்லும் அதே நீர் தான் மறுபடியும் உள்ளே வருகிறது என்று. அந்த நீர் ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை. குளம் என்று நான் குறிப்பிட்ட அந்த இடத்தில் சிறிது கூட தண்ணீர் கிடையாது. ஆனால் அதில் ஒருபோதும் நீர் வற்றாது, ஏனெனில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது , அதே நீர் தொடர்ந்து வெளியே போய்க்கொண்டிருக்கிறது. இவ்வாறு தான் தேவனுடைய அன்பும் வெறுமையான நம்மை நிரப்பி கொண்டே இருக்கிறது என்று ஒரு கணம் என் உள்ளம் நினைத்தது! அந்த அன்பை நாம் பகிர்ந்து கொடுக்கும்போது நம் உள்ளம் மறுபடியும் நிரப்பப்படுகிறது!
நம்முடைய பரம தகப்பனின் அன்பு ஒரு நாளும் குறைவு படுவதில்லை.,அவர் நம்மில் காட்டும் கிருபை என்றும் உள்ளது அவர் அன்பு என்றும் உள்ளது என்பது எத்தனை உண்மை!
இன்றைய வேதாகமப் பகுதி ‘ பின்பு ‘ என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கிறது. எதற்கு பின்பு?
முப்படைகளாய் அம்மோன் புத்திரரும், மோவாபியரும் , சேயீர் மலைத் தேசத்தாரும் தங்களுக்கு விரோதமாக வந்திருக்கிறார்கள் என்ற பயமுறுத்தும் செய்தியைக் கேட்ட பின்பு,
யகாசியேல்என்னும் தீர்க்கதரிசி கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்யப் போகிறார் என்று அவர்களுடைய பயத்தை நீக்கிய பின்பு,
வெற்றியைத் தன் கண்களால் காணும் முன்னரே யோசபாத் தரை மட்டும் குனிந்து தேவனை ஆராதித்த பின்பு,
தெக்கோவா வனாந்தரத்தில் எதிரிகளை சந்திக்கப் புறப்பட்ட பின்பு,
யோசபாத் அவர்களை சற்று நிற்கச் சொல்லி, ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்து போய் கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது என்று கர்த்தரைத் துதித்துப்பாட பாடகரை நிறுத்தினான்.
இன்று இந்த தேவனுடைய நீடித்த கிருபையில், அவருடைய நீடித்த அன்பில் ஏதாவது ஒரு துளி சந்தேகம் இருக்குமானாலும் சங்கீதம் 136 எடுத்து வாசியுங்கள். அவர் கிருபையும், அன்பும் நாம் உபயோகப்படுத்திய பின் அழிந்து போகும் பொருள் போன்றது அல்ல! அது என்றென்றும் உள்ளது!
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்! அவர் கிருபை என்றுமுள்ளது!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்