2 நாளாகமம் 20 :25 ,26 யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்த போது , அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலருந்து உரிந்து போட்ட ஆடை ஆபரணங்களும் , தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது ; மூன்று நாளாய் கொள்ளையிட்டார்கள் ; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது .
நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற படி பராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.
இன்று காலையிலிருந்து இந்தப் பாடல் (count your blessings) என் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும்
வியப்பைத் தரும்.
இதை நான் எனக்குள்ளே பாடிக் கொண்டிருந்த பொழுது , நம்முடைய வாழ்க்கையின் பிரச்சனைகள் எவ்வளவு சுலபமாக தேவனுடைய பிரசன்னத்தை நாம் உணராதபடி மறைத்து விடுகின்றன என்று யோசித்தேன். நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்! நன்மையை விட அதிகமாக தீமைகள் உலாவிக் கொண்டிருக்கிற இந்த உலகத்தில், நாம் சற்று கவனத்தை திருப்பி விட்டால் தேவன் நமக்கு அளிக்கும் நன்மைகள் எல்லாம் மிகச் சிறியவையாகவே நம் கண்களுக்குத் தோன்றும்.
எனக்கு மிகவும் பிடித்தமான சார்ல்ஸ் ஸ்பர்ஜன் ஐயா , இந்தத் ‘தற்காலிக ஆசீர்வாதங்கள் எதுவுமே தேவனுடைய நிரந்தரமான ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல’ என்று கூறியதை படித்திருக்கிறேன். எத்தனை உண்மை அது!
அப்படியானால் எவை தேவனுடைய நிரந்தர ஆசீர்வாதங்கள்? பணம், பொருள், பதவி ,வீடு, கார், இவைகளைத் தானே நாம் ஆசீர்வாதங்கள் என்று நினைக்கிறோம்?
இன்றைய வேதாகமப் பகுதியை வாசிப்பீர்களானால்,அம்மோனியரும், மோவாபியரும், சேயீர் மலைத் தேசத்தாரும் விட்டு சென்ற பொருள்கள் மிகவும் ஏராளமானவை . இஸ்ரவேல் மக்களுக்கு அவைகளைக் கொள்ளையிட மூன்று நாட்கள் எடுத்தன. அது மிகப்பெரிய கொள்ளை! ஒரே யுத்தத்தில் பெரிய லாட்டரி அடித்தது போல!
இந்தக் கொள்ளைப் பொருட்கள் தான் அந்த யுத்தத்தில் கிடைத்த ஆசீர்வாதங்கள் என்று நினைப்பீர்களானால் அது மிகவும் தவறு. ஆதியாகமம் 32: 26 ல் யாக்கோபு இரா முழுவதும் தேவனோடு போராடி, அதிகாலையில் நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடேன் என்று கேட்பதைப் பார்க்கிறோம். எபிரேய மொழியில், யாக்கோபு முழங்கால் படியிட்டு தேவன் அவனுடைய வாழ்க்கையின் மூலமாக அவருக்கு மகிமையைக் கொண்டுவர வேண்டும்படி ஜெபித்தான் என்று கூறுகிறது. யாக்கோபு தான் எதை செய்தாலும் அதன் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற ஆசீர்வாதத்தைக் கேட்டான்.
ஒரு நிமிடம் ! என்ன நடக்கிறது இந்த பெராக்கா பள்ளத்தாக்கில்? ஜனங்கள் உரத்த சத்தமாய் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும் சத்தம் கேட்கவில்லையா? அவர்கள் கொள்ளையிட்ட பொருள்களின் மிகுதியால் தேவனை ஸ்தோத்தரித்தார்களா? இல்லவே இல்லை!
வேதம் கூறுகிறது, கர்த்தர் இஸ்ரவேலின் சத்துக்களோடு யுத்தம் பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்ததேசத்து ராஜ்யத்தார் மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது (20:29) என்று. இந்த யுத்தத்தின் மூலமாய் தேவனுடைய நாமம் மகிமைப்பட்டதென்று தேவனை ஸ்தோத்தரித்தார்கள்!
நாம் எதிர்பார்க்காத பலவித துன்பங்கள் நம்மை தாக்கும் போது, முப்படைகள் போன்ற, வியாதி , கஷ்டங்கள், பிரச்சனைகள் நம்மைத் தாக்கும் போது, அவற்றின் மூலமாக நாம் நினையாத அளவுக்கு பெரிய ஆசீர்வாதத்தை தேவன் கொண்டு வரப் போகிறார் என்று நாம் நினைப்பதுண்டா?
நீ இன்று தரித்திருக்கும் பள்ளத்தாக்கு உனக்கு ஆசீர்வாதத்தின் பள்ளத்தாக்காக மாறும்! பயப்படாதே! உன்னை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் தேவனுடைய நாமத்துக்கு மகிமையைக் கொண்டுவரும்படி ஜெபி! கர்த்தர் அந்தப் பள்ளத்தாக்கில் உன்னோடிருப்பதை மறந்து போகாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்