2 நாளாகமம் 20 :27 ,28 பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும் அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள். அவர்கள் தம்பருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.
யூதாவின் ராஜாவாகிய யோசபாத் மும்முரமாக தேவனுக்காக ஊழியம் செய்த நாட்களில் முப்படையினர் யூதாவைத் தாக்க வந்து கொண்டிருக்கும் செய்தி கிடைத்தது. உடனே அவன் பரலோக தேவனை அணுகி உபவாசத்தோடு ஜெபித்தான். கர்த்தர் தம்முடைய தாசனாகிய யகாசியேலை அனுப்பி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை என்றும், யுத்தம் அவர்களுடையது அல்ல, அது கர்த்தருடையது என்றும் கூறினார்.. அது மட்டுமல்லாமல் அவர்கள் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் எதிரிகளை சந்திக்கும்படியாய் அவர்களை வனாந்தரத்துக்கு அனுப்பினார். அங்கு தேவனாகியக் கர்த்தர் கூறியபடியே யுத்தம் இல்லாமல் யோசபாத்துக்கு வெற்றியைக் கொடுத்தார். தேவனாகியக் கர்த்தர் யோசபாத்துக்கும், யூதாவுக்கும் முப்படைகளின்மேல் கொடுத்த வெற்றியின் செய்தி சுற்றியுள்ள நாடுகளுக்குப் பரவிற்று.
இந்த மிக அற்புதமான சம்பவம் நடந்து கொண்டிருந்த வேளையில் , யோசபாத் அவ்வப்பொழுது, அவனுக்காக யாவற்றையும் செய்து கொண்டு இருந்த தேவனைப் பாடல்களோடு ஆராதித்ததை பார்க்கும் பொழுது மனதுக்கு இனிமையாக இருந்தது. கர்த்தர் அவனுக்காக வைத்திருந்த வெற்றியைத் தன் கண்களால் பார்க்கும் முன்னரே இந்த மனிதன் தரை மட்டும் குனிந்து தேவனை ஸ்தோத்தரித்தான் என்று பார்த்தோம்.
இந்த வெற்றிக்குப் பின்னரும் யோசபாத் தன்னுடைய வீட்டுக்குப் போய் அதைக் கொண்டாட நினைக்கவில்லை. அவனும் அவனுடைய மக்களும் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்தை நோக்கி பாடல்களோடு சென்றனர் என்று இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட அற்புதங்களை வேதத்தில் மாத்திரம் தான் பார்க்க முடியும் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள் தேவன் நம்முடைய வாழ்க்கையிலும் கிரியை செய்து கொண்டிருக்கிறார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் அவர் நமக்காக யுத்தம் செய்து கொண்டிருக்கிறார். உன்னைப் பேர் சொல்லி அழைத்த தேவன், தம் உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ள தேவன்,உன்னை நேசிக்கும் தேவன் உன்னை வழிநடத்தி வரும் விதம் உனக்கு அற்புதமாகத் தெரியவில்லையா? சற்று திரும்பி உன் வாழ்வின் அதிசயங்களை எண்ணிப்பார்! கர்த்தர் செய்த யாவும் நமக்கு வியப்பைத் தரும்!
யோசபாத்தும், யூதா மக்களும் மகிழ்ச்சியோடே தம்புருகளோடும் பூரிகைகளோடும் எருசலேமுக்கு வந்தார்கள் என்று பார்க்கிறோம்.
நாம் மகிழ்சியால் நிறைந்திருக்கும்போது என்ன செய்வோம்? நாம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் பொழுது முதலில் தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம், பின்னர் அந்த மகிழ்ச்சி நம்மை சுற்றி உள்ளவர்களையும் நிரப்பும். இன்று உன் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறதா? பரலோக தேவன் உன் வாழ்வில் கிரியை செய்கிறார் என்பதை அறிவாயா?
யோசபாத்தைப் போல நன்றியால் துதி பாடு! வெற்றியை உன் கண்களால் காணும் முன்னரும் சரி, வெற்றியைக் கண்ட பின்னரும் சரி யோசபாத்தைப் போல தேவனை ஸ்தோத்தரித்து ஆராதிக்கக் கற்றுக் கொள்!
என்னுடைய பாதை நீண்டதாயும் இருளாயும் இருந்த வேளை
நான் அந்நியனும் பரதேசியுமாய் அலைந்த வேளை
தேவன் எந்தன் நாவில் புது பாடலைத் தந்தார்
எந்தன் வழித்துணையாய் தம் வார்த்தை என்ற தீபத்தைத் தந்தார்
வேறென்ன வேண்டும்? மகிழ்சியோடு தேவனை ஸ்தோத்தரியுங்கள்! அவர் நல்லவர்! அவர் கிருபை என்றுமுள்ளது!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்