2 நாளாகமம் 20 :30 இவ்விதமாய் தேவன் சுற்றுபுறத்தாரால் யுத்தம் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்கு கட்டளை யட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.
ராஜாவாகிய யோசபாத்தின் சரித்திரத்தை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அவன் தேவனுக்காக வாழ தன் மனதிலே முடிவு செய்து, தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அவன் நெருப்பிலே புடமிடப்பட்டான், அவனை முப்படைகள் தாக்கின. எதிரிகளை சந்திக்க வனாந்தரத்துக்கு புறப்பட்டான் ஆனால் அங்கு ஆசீர்வாதத்தை சந்தித்தான் என்று பார்த்தோம்.
இன்றைய வேதாகமப் பகுதி தேவனை நான் இன்னும் ஒரு படி அதிகமாய் நேசிக்க என்னை செய்தது என்றால் மிகையாகாது. என் தேவனாகிய கர்த்தர் எனக்கு எதையும் சிக்கனமாய் கொடுக்க கூடியவர் அல்ல, எல்லாவற்றையும் தாராளமாய் கொடுக்க வல்லவர். எவ்வளவு பெரிய ஒரு உண்மையை இன்று நாம் பார்க்கிறோம்.
கர்த்தர் யோசபாத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்தார் என்று நாம் பார்த்தோம் ஆனால் மகிழ்ச்சியை மாத்திரம் அல்ல இளைப்பாறுதலையும் கொடுத்தார் என்று இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு கூறுகிறது.
சில நேரங்களில் நாம் எங்களுக்கு முன்னே நின்று கொண்டிருப்பது போலவும் நமக்கு பின்னே எகிப்தியரின் சேனை நம்மை நெருங்கி வருவதைப் போலவும் இருக்கும். நாம் தப்பித்து போக படகு இருக்காது. படகு எங்கு கிடைக்கும் என்றும் தெரியாது! ஆனாலும் இஸ்ரவேலர் செங்கடலைக் கடந்து செல்ல செங்கடலின் நடுவே வழியமைத்து கொடுத்தது நம் தேவன் அல்லவா?
இப்பொழுது நாம் யோசபாத்துக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். கடினமான பாதையைக் கர்த்தரின் கரத்தைப் பற்றிக் கொண்டு கடந்து வந்த யோசபாத்துக்குக் கர்த்தர் சுற்றுப்புறத்தாரால் யுத்தம் இல்லாத இளைப்பாறுதலை கட்டளையிட்டார் என்று இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது. முற்றிலும் அமைதி ! யுத்தம் இல்லை எதிரிகள் இல்லை! தேவனை கனம் பண்ணினவனுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு இது.
இந்த உண்மை வேதத்தில் தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டுள்ளது தெரியுமா?
ஏசாயா 30:15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
அதைத்தாண்டி ஒரு சில பக்கங்கள் சென்றால் எரேமியா 6:16 ல் வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து அதிலே நடவுங்கள்;அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்கிறார். என்று பார்க்கிறோம்.
தேவனாகியக் கர்த்தர் நமக்காக ஒரு வழியை ஆயத்தம் பண்ணியிருக்கிறார், நாமோ நம்முடைய வழியில் நடக்க முயற்சி செய்கிறோம். பெரும்புயலுக்கு பின்னர் வானவில் ஏற்படுவதுபோல நம்முடைய இன்னல்களுக்கு மத்தியில் தேவனாகியக் கர்த்தர் நமக்கு இளைப்பாறுதலைத் தருவேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.
தேவனுடைய பிள்ளைகளே! நமக்கு இன்னல்களும் துன்பங்களும் வராது என்று வேதம் கூறவேயில்லை. அவை நம்மை பயப்படுத்திக் கொண்டிருக்கலாம்! விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் கடலின் அலைகளில் அடிபடுவதில்லையா? இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் வேதனைகள் உண்டு, வலிகள் உண்டு! ஜெபம் ஒன்றே சிங்கங்களின் வாயை கட்டும், ஜெபம் ஒன்று மட்டுமே எரிகிற அக்கினிச் சூளையிலிருந்து உன்னைக் காக்கும். ஜெபம் மட்டுமே தேவனுடைய கிருபை உன்னை அதிகமாய்க் கிட்டி சேர உதவும்.
கர்த்தராகிய இயேசு கூறியவிதமாக , வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வார்த்தைகளை விசுவாசியுங்கள்! இளைப்பாறுதல் நிச்சயம் உண்டு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்