யாத்திராகமம் 23: 20, 23, 30 வழியில் உன்னை காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இத, நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன்.
என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார். அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
நீ விருத்தியடைந்து தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்தி விடுவேன்.
கடந்த நாட்களில் நாம் 2 நாளாகம் 19 -20 லிருந்து யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் வாழ்க்கையைப் பற்றிப்படித்தோம். அவரின் வாழ்க்கை என்னைப்பொல்லவே உங்களையும் ஆசீர்வதித்திருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.யோசபாத் தேவனைப் பற்றிக் கொண்டவிதமும் கர்த்தர் அவனை முப்படைகளுக்குத் தப்பிக்கப்பண்ணி அவனுடைய ஆட்சியில் ஆசீர்வாதத்தையும் இளைப்பற்றுதலையும் கட்டளையிட்டது நமக்கும் ஒரு ஆசீர்வாதமாகவே அமைந்தது அல்லவா!
ஒரு சகோதரி எனக்கு எழுதியவிதமாக, —- நானும் தேவனைப் பற்றிக்கொள்ள வாஞ்சிக்கிறேன், ஆனால் என்னுடைய வேலை பறிபோன நிலையில், என்னுடைய குடும்பமும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனைப் பற்றிக் கொள்வது மிகவும் கடினமாகவே தோன்றுகிறது, கடவுள் இன்னும் கொஞ்சம் வேகமாக என் வாழ்க்கையில் கிரியை செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது, —- நாமும் கூட அடிக்கடி இவ்வாறு நினைப்பது உண்டு இல்லையா! தேவன் சீக்கிரமாக என்னை விடுவித்தால் நலமாயிருக்கும். என் பிரச்சனைகள் சீக்கிரம் போய்விட்டால் எவ்வளவு நலமாயிருக்கும் என்றெல்லாம் நம் உள்ளம் நினைக்கிறது. இன்று ஒரு அற்புதத்தைக் காண மாட்டோமா என்றும் நினைக்கிறோம்.
இந்த வாரம் தியானத்துக்காக வேதத்தை வாசித்துக்கொண்டிருந்த போது இன்றைய வேதாகமப் பகுதி என் கண்களில் பட்டு என்னோடு பேசியது நிச்சயமாக தேவனுடைய வழிநடத்துதல் என்றே நினைக்கிறேன்.
கர்த்தர் மோசேயை சீனாய் மலையில் சந்தித்து கொடுத்த அறிவுரை இன்றைய வேதாகமப்பகுதியாகிய யாத்தி:23 ல் இடம் பெற்றுள்ளது. தேவன் தம்முடைய பிள்ளைகளை வழிநடத்திய விதத்தை அவர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்றும், அவரே அவர்களை வழிநடத்த ஒரு தேவ தூதனை அவர்களுக்கு முன்பாக அனுப்புகிறார் என்றும் கூறினார். யோசபாத்துக்கு கூறியவிதமாக தேவன் அவர்களுடைய எதிரிகளை அவரே முறியடிப்பார் என்றும் கூறினார். தேவன் அதற்காக சில நகைச்சுவையான ஆயுதங்களையும் பயன்படுத்துவதாகக் கூறினார், உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும், கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்குமுன்னே அனுப்புவேன் ( யாத்தி 23:28) ஐயோ! குளவிகள் கூட கர்த்தருக்கு ஆயுதமா??????
இதைவிட அதிகமாய் என்னைக் கவர்ந்த காரியம் என்னவென்றால், அவர் இஸ்ரவேலில் குடியிருந்த மக்களை உடனே வெளியேற்ற மாட்டாராம். ஏனென்றால் உடனே வெளியேறிவிட்டால் , தேசம் பாழாய்ப் போகும், காட்டு மிருகங்கள் பெருகிப்போகும் ( 29).
ஆதலால் நீ விருத்தியடைந்து தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்தி விடுவேன்.
தேவன் நம் வாழ்க்கையில் எவ்வளவு அற்புதமாகத் திட்டமிட்டு கிரியைசெய்கிறார் பாருங்கள்!ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்து நம்மை மூச்சுத்திணர வைப்பதில்லை, நாம் எவ்வளவுதூரம் தாங்கமுடியுமோ அவ்வளவு கிரியைகளை செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் நமக்கு அன்றன்று என்னத் தேவையோ அதை மட்டும் அளிக்கிறார். அல்லேலூயா!
என் தேவன், என் பரம தகப்பன், என்னைப்போல தேவன் கிரியை செய்வதை நான் உடனே பார்க்கவேண்டும் என்று நினைக்கிற என் அருமையான சகோதர சகோதரிகளுக்குக் கூறுகிறார், மகனே/மகளே நான் உனக்காக கொஞ்சம் கொஞ்சமாய் கிரியை செய்து கொண்டிருக்கிறேன். அதிவேகமாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ அல்ல, நீ தாங்கிக் கொள்ள போதுமட்டுமாய், உன்னுடைய தேவைக்கு மட்டுமாய் என் கிரியை இருக்கிறது, நீ என்னை விசுவாசித்தால் சரியான நேரத்தில் உனக்காக யாவையும் செய்து முடிப்பேன் என்று கூறுகிறார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவர் உனக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை விசுவாசி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்